http://solvanam.com/?p=43374

Advertisements

ஊரைச் சுற்றிலும் திருட்டு ஒருபோதும் இல்லாத அளவிற்குத் தலைவிரித்தாடுகிறது.வீட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை,வழிப்பறி வகையறாக்கள் அல்ல.முற்றிலும் வேறு வகைத் திருட்டு.வைத்திலிங்கம் தன்னுடைய நான்கு ஏக்கர் தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த இரண்டு ஜோடி மாடுகளை அவன் உணவருந்த வீட்டிற்குச் சென்ற சமயத்தில் ஓட்டிச் சென்று விட்டனர்.பல தோட்டங்களில் தோட்ட முதலாளிகளுக்குத் தெரியாமலே இரவோடு இரவாக மரங்களை வெட்டிச் செங்கமால்களுக்கு விற்றுவிடுகின்றனர்.தொழுவத்தில் கட்டிப்போட்ட ஆடுகளை வாயைப் பொத்தி தூக்கிச் செல்கின்றனர்.தவிர,சைக்கிள்,பைக்,அலுமினியப் பாத்திரங்கள்,வயற்காட்டில் மோட்டார் எனக் கையில் சிக்குவதையெல்லாம் அபகரித்து காசாக்குகின்றனர்.

இவ்வளவும் திருடிவிட்டு பகல்முழுவதும் நிறைபோதையில் ஒன்றுமே தெரியாததுபோல் ஊர்க்கோவிலிலோ அல்லது பெண்கள் பீடி சுற்றும் பகுதியிலோ ஐக்கியமாகிவிடுகின்றனர்.எவ்வளவு நாள்தான் திருடு கொடுத்தவர்கள் விட்டுக்கொண்டிருப்பார்கள்.நேரம் பார்த்து வசமாக சிக்க வைத்து விடுகின்றனர்.சுமார் நூறு வீடுகளுடைய எங்கள் ஊரில் மட்டுமே திருட்டு கேஸில் இரண்டு மூன்று பேர் கைதாகி ஜெயிலில் கிடக்கின்றனர்.சரி எங்கள் ஊர்தான் இப்படி என்றால் சுற்று வட்டாரம் முழுவதும் இதே கதிதான்.நிலையான தொழில் இல்லை.எவ்வளவு மழை கொட்டித்தீர்த்தாலும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை.இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்யலாம் என்றால் உடலின் அனைத்து செல்களும் சோம்பி முடங்கிவிடுகின்றன.ஆனால் வயிற்றுக்கு போஜனம் கிடைக்கிறதோ இல்லையோஎப்படியாவது தினமும் குடித்து விட வேண்டும்.முடிவு எவன் வீட்டு தாலியை அறுத்தாவது நிறைவேற்றிவிடுகின்றனர்.

கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்த சமயம்.இரவு எட்டு மணி இருக்கும்.நிசப்தமான தெருவில் திடீரென கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு முறுக்கிச் சென்ற பைக்கைத் தொக்குத் தொக்கென விரட்டிச் சென்றான் முருகன்.இரண்டு நிமிடங்களுக்குள் நால்வரைச் சுமந்து சென்ற பைக் கண்ணுக்கெட்டா தொலைவில் மறைந்தது.முருகனின் ஆத்திரம் அடங்காததால் தெருவில் மக்கள் சூழ நின்று கெட்டவார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டிருந்தான்.விசயம் இதுதான்.

முருகன் வீட்டிற்கு அடுத்தாற்போல் ஊரின் தெற்கு மூலையில் உள்ள தனித்த வீட்டில் வசிக்கிறார் அறுபது வயது செல்லாத்தா.அவளின் கணவர்(பேச்சிமுத்துத் தே**) ஆட்டு வியாபாரி.இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு பகையில் அவரைப் பரும்புக் காட்டில் பனைமரத்தடியில் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டுச் சென்று விட்டனர்.யாரென்று இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் எதனால் நடந்ததென்று அவளுக்குத் தெரியும்.அன்றிலிருந்து ஊரிலுள்ள யாருடனும் பேசுவதில்லை.தனித்தே வசிக்கிறாள்.அவளும், தெற்குத் தெருவில் வசிக்கும் நான்கைந்து குடும்பங்கள் மட்டும் வேறு ஜாதி என்பதால் அவர்களுக்குள் மட்டும் புழக்கம்.செல்லமாக வளர்த்த ஒரே மகனும் மூன்று திருமணம் முடித்து,விவாகரத்தாகி,பின் பம்பாய் சென்று எயிட்ஸோடு வந்து, குடித்துக் கல்லீரல் அழுகி,சமீபத்தில் இறந்து போனான்.

எந்த வருமானமும் இல்லாமல் வெறும் பீடி சுற்றி ஜீவிதம் நடத்தி வந்தவளிடம்,சிவலார்குளத்து சொந்தக்கார விடலைப் பையன்கள் நான்கு பேர் அவளுடைய வீட்டில் பகலில் மட்டும் தங்க அனுமதி தரும்படி கேட்டுள்ளனர்.வேண்டிய பணம் தருவதாகக் கூறியதால் அவளும் சம்மதித்து விட்டாள்.இரவில் திருட்டுக்குச் சென்று வந்து பகலில் வீட்டிற்குள் பதுங்கி விடுவர்.தெற்கு முனையில் உள்ள வீடு என்பதால் மக்கள் நடமாட்டம் அறவே கிடையாது.காவல்துறை பல வழக்குகளில் அவர்களைத் தேடியதால் கச்சிதமாக ஒளிந்துகொள்ள அவர்களுக்கான சிறந்த கூடாரமாகிப் போனது.

அப்படியே தொடர்ந்திருந்தால் பிரச்சினையில்லை.பக்கத்து வீட்டு முருகன் கழுவுவதற்காக வெளியே வைத்திருந்த பெரிய பால் கேன் காணாமல் போக முருகனுக்கு வெறி வந்துவிட்டது.ஏற்கனவே செல்லாத்தா வீட்டிற்கு பைக்கில் முன்பின் தெரியாதவர்கள் வந்து நடமாடுவதால் முருகனுக்கு ஒரு சின்ன சந்தேகம் துளிர்த்திருந்திருக்கிறது.ஒருநாள் அதிகாலையில் ஒரு பெரிய மோட்டாரை எங்கிருந்து எடுத்து வந்தார்களோ தெரியவில்லை.அவசர அவசரமாக வீட்டிற்குள் எடுத்துச் செல்கையில் முருகன் கண்டுவிட்டான்.சத்தமே இல்லாமல் அமர்ந்து அவர்கள் செய்கையைக் கண்டதும் அவனுடைய வீட்டில் காணாமல் போன பால்கேனையும் அவர்கள்தான் எடுத்திருக்கவேண்டும் என்று ஊர்ஜிதப்படுத்தியவன் நேராக போலிஸில் சென்று கம்ப்ளெயிண்ட் செய்துவிட்டான்.

கடையம் போலிஸ் ஸ்டேசனிலிருந்து அவர்கள் வரும்போது வீட்டில் யாருமில்லை.எப்படியோ அவனுக்குத் தெரியாமல் எல்லோரும் நகர்ந்து விட்டனர்.வீட்டிற்குள் ஒரு பொருளும் இல்லை.செல்லாத்தா எதுவுமே தெரியாது என்று ஒப்பாரி வைக்க மீண்டும் அவர்களைக் கண்டால் தகவல் கொடுக்கச் சொல்லிவிட்டு சென்று விட்டனர்.முருகனுக்கு கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம்.லெட்சுமியூர் ஒயின்ஸாப்பில் சென்று 750 மில்லி சரக்கை எடுத்து வந்து தனியனாகக் குடித்துவிட்டு வீட்டிலுள்ள பெண்களிடம் சண்டை.பகல் முழுவதும் இது நடந்திருக்கிறது.

இரவில் அப்போதுதான் தட்டில் கை வைத்தேன்.முருகன் தலைதெறிக்க ஓடுகிறான்.இருட்டியதும் மெதுவாக வந்திருக்கின்றனர்.சண்டை போட்டு அப்போதுதான் களைத்து அமர்ந்திருந்த முருகன் கண்டுவிட்டான்.கண்டதும் போலீசுக்குத் தகவல் சொல்லாமல் இவனே அருவாளைத் தூக்கிவிட்டு காரியத்தில் இறங்கிவிட்டான்.கண நேரத்தில் சிட்டாகப் பறந்துவிட்டனர்.

இரவே பெண்போலீஸ் வந்து செல்லாத்தாவைக் கூட்டிச் சென்றுவிட்டனர்.கைது செய்து கொண்டு சென்றாலும் முருகனின் ஓலம் இடையறாது ஒலித்துக்கொண்டேயிருந்தது.காலையில் எழும்பினால் வீட்டிற்கு முன்னால் பெருங்கூட்டம்.பக்கத்து வீட்டு மாரியப்பனையும் அந்த வழக்கில் அதிகாலை ஐந்து மணிக்கே கொண்டுசென்றுவிட்டனர்.அவன் மனைவியும்,மூன்று குழந்தைகளும் உருகிஉருகி உப்புநீர் உகுத்துக்கொண்டிருந்தனர்.

திருடுகிறானே வீட்டிற்குள் ஏதேனும் பண்ட பாத்திரங்கள் சேர்த்து வைத்திருக்கிறானா என்று பார்த்தால் ப்ப்ச்ச்.கலைஞர் டிவியின் முன்னால் பீடித்தட்டுதான் கிடந்தது.ஆக அவன் திருடுவது குடிப்பதற்கு மட்டும்தான்.

வாடகை வீடு தேடி அலைவது எந்த அளவிற்கு அலுப்பானதோ அந்த அளவிற்கு சுவாரசியமானதும் கூட.மைசூரில் வாழ்ந்த ஐந்து வருடங்களில் நான்கைந்து வீடுகள் மாறியிருப்போம்.பெரிய சிரத்தை எதுவும் இருக்கவில்லை.தெருவுக்கு நான்கு வீடுகள் To let பலகையுடன் காணக் கிடைக்கும்.என்ன ஒன்று! காலி பண்ணும்போது முன்பணம் மட்டும் மூன்றில் ஒரு பங்கு தருவார்கள்.அதை மட்டும் சமாளித்துக்கொண்டு காலத்தை ஓட்டினோம்.அதன்பின் கோழிக்கோடு சென்றதிலிருந்து மூன்று வருடங்களாக ஒரே வீட்டில் ஜீவிதம்.கிளம்புகையில் முன் தொகைப் பணத்தில் ஒரு பைசா குறையாமல் திருப்பிக்கொடுத்தார் வீட்டு முதலாளி.இவ்வளவிற்கும் இரண்டு மூன்று பொருட்களை உடைத்து வைத்திருந்தேன்.ஒப்பந்தத்திலிருந்து அறம் பிறளாமல் நின்றார்.இதற்கு முன்பு எந்த வீட்டு முதலாளியிடமும் முழுத்தொகையை வாங்கியிருக்கவில்லை என்பதால் பெருமகிழ்ச்சி.

வாங்கிய தொகையோடு பெட்டிப்படுக்கையைக் கட்டிக்கொண்டு அனந்தபுரிக்கு வந்தாயிற்று.வீடு பார்க்கவேண்டும்.இங்கு வீடு வாடகைக்கு போன்ற அறிவிப்பு பலகைகள் எந்த வீட்டிலும் பார்க்க முடியாது என்பதால் ஆன்லைன் சைட்டுகளில் தேடல்.தேடினால் ஏழுமலை ஏழுகடல் தாண்டி எங்கெங்கோ வீடுகள் மலிவான விலைக்குக் கிடைத்தன.நான் வேலை பார்க்கும் இடத்தையொட்டி பத்து கிலோமீட்டர் சுற்றளவில் ஒன்றும் இல்லை.வேறு வழியில்லாமல் புரோக்கர் சேட்டன் ஒருவரிடம் செல்ல வேண்டியதாயிற்று.

சேட்டனிடம் எனது தேவைகள் என்ன.எவ்வளவு தொகைக்குள் இருக்க வேண்டும்.இன்னபிற சமாசாரங்களையும் சொல்லி தேடச் சொல்லியிருந்தேன்.சொன்ன மறுகணமே சேட்டன் ஒரு வீட்டைக் காண்பிக்க அழைத்துச் சென்றார்.கரும்பச்சை நிறத் தெப்பக்குளத்தையடுத்து சிதிலமடைந்து கிடந்தது சிறிய அம்பலம்.சிறிய பீடத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய தீபம் பற்றி எரிந்துகொண்டிருந்தது.அதையொட்டி ஒரு தடித்த ஆலமரம்.ஆலமரத்தடியில் வண்டியை நிறுத்தச் சொன்னார்.அதிலிருந்து வயற்காட்டிற்குள் சுமார் முன்னூறு மீட்டர் தொலைவில் இருந்தது ஒரு ராட்சஸ பங்களா.

“இதானு வீடு.ஐய்யாயிரம் ருப்யா வாடக.தோ காணுனில்ல ஆ வழி போயா மதி.பைக் இவிட நிறுத்தாம் என்று ஆலமரத்தடியிலிருந்த சிறிய ஒதுக்கைக் காட்டினார்.

எங்கள் ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த குளம் இருக்கிறது.ஒருகாலத்தில் விவசாயத்திற்குப் பழக்கப்பட்ட குளம்தான்.என்றாலும் குளத்திலிருந்து தண்ணீர் வருவதற்கான ஓடை,தண்ணீர் வடிந்து செல்லும் மறுகால் எல்லாம் அருகிலுள்ள நிலத்தவர்கள் வெட்டி ஆக்கிரமித்ததால் புதர் மண்டிக்கிடக்கும்.அந்தக் குளத்திற்கு செல்ல வேண்டுமென்றால் என்னென்னெ பிரத்யேக முயற்சிகள் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்தாலும் சேறும் சகதியுமாகத்தான் இந்த பங்களாவிற்குச் செல்லமுடியும்.வீட்டிற்குத் திரும்பி வருவதை விடுங்கள்.வீட்டிலிருந்து சாலைக்கு வந்து மாற்று உடை அணிந்து செல்வதை நினைத்தாலே உடல் சூடாகியது.

அய்யா சேட்டனே.நான் மனிதர்கள் வாழுமிடத்தில் வசிக்க விரும்புகிறேன்.அதற்கு தகுந்தாற்போல் வீடிருந்தால் காட்டுங்கள்.இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன்.

சேட்டன் முழுபலத்தோடு பெங்கால் பீடியை வழித்தெறிந்தார்.

“செரி வா வேற நோக்காம்”

லீலா பேலசைக் காட்டி நாம் வேண்டாம் என்று புறக்கணித்ததைப் போன்றதொரு உடல்மொழியில் வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தார்.

“நேரே செல்லு”

“எங்கோட்டா”

“தோ அவிட காணுனில்ல ஆ பஸ் ஸ்டாப்பிந்து லெப்ட் எடுக்கு”

அந்த பேருந்து நிறுத்தத்தில் இடப்புறம் திரும்பினால் எப்போது விழுவேனோ என்ற ஏக்கத்தில் நின்று கொண்டிருந்தது இடுங்கி சிதிலமடைந்த பாலம்.வண்டியை பவிசாக ஓட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு முதியவள் மணிகேட்டாள்.வண்டியை நிறுத்த எத்தனிக்கையில்,

“முத்தேச்சிக்கு இப்ப சமயம் நோக்கிட்டு ஏது ஆபிஸ் கேறானா”என்று சிடுசிடுத்தார் சேட்டன்.

“நீ போடா கோப்பே”என்றாள் பதிலுக்கு.

“செரி நீ நேரெ செல்லு”என்னைத் துரிதப்படுத்தினார்
.
பாலம் முடிந்ததும் சிறிய தெப்பக்குளம்.அதைத்தாண்டி முடுக்கு முடுக்காக சென்றடைந்தது ஒரு கள்ளுக்கடை.சேட்டன் யாரையோ கள்ளுக்கடை உள்ளிருந்து இழுத்து வந்தார்.

“எடா இதானு பார்ட்டி.வீடு எந்தங்கிலும் உண்டோ இங்கோட்டு”

போதை நரம்புகள் முகத்தில் புடைத்தெழ அந்த சேட்டன் வேறு ஒரு பகுதிக்குச் செல்லும்படி உணர்ச்சிப் பிளம்பாய் வெடித்தார்.புரோக்கர் சேட்டன் பின்னர் வண்டியை வேறொரு இடத்திற்கு செல்லும்படி பணித்தார்.அதுவும் ஒரு ராட்ஸச பங்களாதான்.ஆனால் அதிர்ஸ்டவசமாக அது மனிதர்கள் வாழும் பகுதி.பேராவலுடன் வீட்டிற்குள் நுழைந்தோம்.பளபளவென சலவைக்கற்கள் பதித்த வரவேற்பறை.புதிதாக வர்ணம் பூசிய சுவரில் நவீன ஓவியங்கள்.விசாலமான சமயலறை.ஆஹா நாம் தேடி அலைந்த சொர்க்கம் இதுதான் என்ற உணர்ச்சிப்பெருக்கில் சமயலறையின் பின்புறம் சென்றேன். ஒரு பழைய கதவு.ஆர்வத்தில் சடாரென்று திறக்கவும் மறுபுறம் சுமார் முப்பதடிப் பள்ளம்.வியர்த்து விறுவிறுத்து பின் வாங்கினேன்.

“ஹி ஹி அது பிரஸ்ன இல்ல.பூட்டி இட்டா மதி”என்றார் சேட்டன்.

அது சரிதான் என்றெண்ணி படுக்கையறைக்குள் நுழைந்தால் ஏதோ விசித்திரமான சிதிலமடைந்த பங்களாவிற்குள் வீசும் புழுங்கல் வாடை.சுவரெங்கும் பாழம் பாழமாய் வெடிப்பு.கழிவறையை சில நிமிடங்கள் நின்று பார்க்கக்கூட முடியவில்லை.அலறியடித்து வெளியேறினேன்.

“ஈ வீட்டுக்கு எந்தா பிரஸ்னம்”முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு வந்தார் சேட்டன்.

அன்பு சேட்டனே எனக்கான வீட்டிற்கான தேவைகளை ஏற்கனவே கூறிவிட்டேனல்லவா. மறுபடியும் இப்படி பூத பங்களாக்களைக் காட்டினால் எப்படி? வீடு இல்லையென்றால் விடுங்கள் நான் வேறு எங்காவது தேடிக்கொள்கிறேன் என்று மீண்டும் கெஞ்சினேன்
.
“ஞானல்லாது ஈ ஏரியால வேற ஆரெங்கிலும் வீடு நோக்காம் பெற்றொ”குரலில் அவரைத் தவிர எனக்கு வேறு யார் வீடு பார்த்துக் கொடுத்தாலும் கொலபாதகம் நடக்கும் என்பது போன்ற சூடு.

“சரி சேட்டா.ஈ வீடு இஸ்டமாயில்ல.எந்தா செய்யாம்”
“வா வேற நோக்காம்”

மீண்டும் பயணம் தொடங்கியது.

நம்ப மாட்டீர்கள் சேட்டன் காண்பித்த ஏழு வீடுகளும் கிட்டத்தட்ட இதே கதிதான்.ஒரு நாள் முழுவதும் அலைந்தும் ஒன்றும் தேறவில்லை.விரக்தியடைந்து சேட்டனிடம்”சரி சேட்டா நான் வேற எங்கயாது பாத்துக்குறேன்.விடுங்க”என்று ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளைத் திணித்தேன்.

சேட்டனுக்கு வீடு பிடித்து கொடுத்தால்தான் காசு கிடைக்கும் என்ற கவலையை அது மறக்கடித்ததால்”செரி அப்ப நாள அடிபொழி வீடு நோக்காம்”என்று கூறிவிட்டு திரும்பிப் பாராமல் சென்று விட்டார்.

வேறு இடத்தில் வீடு குடியேறி ஆறு மாசம் ஆகிவிட்டது இன்னும் கண்ணில் சிக்கவில்லை அன்பு சேட்டன்.

சீரழியும் வட்டார வழக்கு

நாவலில் வட்டார வழக்குகள் பயன்படுத்தப்படுகையில் அந்த ராகத்தோடு அவர்கள் பேசும் விதத்தைக் கற்பனை செய்து படிப்பதில் அலாதி சுகமுண்டு.அதே வழக்குமொழி படங்களிலும் எந்தத் துருத்தலும் இல்லாமல் சரியான முறையில் மண்ணின் அதே வாசத்தோடு உச்சரிக்கப்படுகையில் கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மை மனதோடு ஒன்றிப் போகிறது.அப்படி மண்மணத்தோடு எழுதப்படும் நாவல்களும்,எடுக்கப்படும் படங்களும் அரிதாகி வரும் நிலையில் இதுதான் இப்பகுதியின் பயன்பாட்டு வழக்கு என்று ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் பேசும் வழக்கை அரைகுறையாக பேசவைத்து,ஒட்டுமொத்த சமூகத்தின் வழக்குமொழியாய் பறைசாற்றுவதில்தான் சிக்கல் வருகிறது.

அந்த வகையில் நெல்லைத் தமிழும் பல்வேறு சினிமாக்களில் கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.வார்த்தைக்கு வார்த்தை “எல” என்று போட்டாலே திருநெல்வேலி வழக்கு என்று ஹரி வகையறாக்கள் உருவாக்கிய சூத்திரம் அது.நெல்லை சிவா,எம்.எஸ்.பாஸ்கர் எல்லாம் சகஜமாக நெல்லைத் தமிழை உச்சரிக்கக்கூடியவர்கள்.அவர்களைக்கூட முகக்கூண்டு கட்டி செயற்கையாக பேச வைத்தால் என்ன சொல்வது.அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது அந்தப்படம்.

உவரிப் பகுதி நாடார் சமூகத்தார் பேசும் வழக்கு என்று ஆசான் சொல்கிறார்.கதைக்களம் பாபநாசம்.பாபநாசத்து நாடார் சமூகத்தினர் உவரித் தமிழ் பேசுகிறார்கள் என்று எடுத்துக்கொண்டால்கூட அவ்வோ,இவ்வோ,அவாள்,இவாள்,ஏட்டி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இரண்டு பகுதி மக்களிடத்தும் இல்லை என்பதுதான் உண்மை.சுகா அண்ணனின் எழுத்து முழுவதையும் வாசித்தவன் என்ற அடிப்படையில் அவரின் வழக்குமொழி எந்தப் பகுதி மக்களுடையது என்பது தெரியும்.

மாவட்டம் முழுவதும் எண்ணற்ற வழக்குமொழிகள் உள்ளன.வள்ளியூர்,நாங்குனேரி,உவரி,திசையன்விளை பகுதிகளில் பேசப்படும் தமிழில் நாகர்கோவில் வாடை தூக்கலாக இருக்கும்.அவர்கள் உச்சரிக்கும் அந்த ராகம் கேட்கையில் சுஹானுபவம்.ஆழி சூழ் உலகு நாவலில் பேசப்படும் கொச்சைவழக்கு இதோடு சேர்ந்தது.அடுத்து பிரதான நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்படும் சைவத்தமிழ் வழக்கு.இதுதான் அண்ணன் சுகா பயன்படுத்துவது.இதுதான் திருநெல்வேலியின் பொதுத்தமிழ் என்பதுபோன்ற தோற்றம் இந்த வழக்குமொழியால் உருவாகிறது.பெரும்பாலான எழுத்தாளர்கள் இங்கிருந்து உற்பத்தியானதால் உண்டான மாயையது.தேவர் சமூகத்து மக்களின் வழக்கும் இதைப்போல் இருந்தாலும் அதிகாரத் தோரணை தூக்கலாக இருக்கும்.அதை எழுத முடியாது.உச்சரிப்பில்தான் கொண்டுவர முடியும்.திருநெல்வேலிக்கு மேற்காக கிடக்கும் பிரதேங்களில் பேசப்படும் வழக்கே வேறு.

உதாரணத்திற்கு,

அவர்கள்=அவ்வோ=அவிய
சொன்னான்=சொன்னாவ்வோ=சொன்னாவ
ஏம்மா=ஏட்டி=ஏபிள
சொல்லமாட்டாள்=சொல்லமாட்டிக்கா=சொல்லமிண்டுக்கா
திட்டுகிறாள்=ஏசுதா=வையிதா

இதில் நடுவிலுள்ளது நெல்லை சுற்று வட்டார வழக்கு.கடைசியாக வரும் மொழிப்பிரயோகம்தான் பெரும்பாலான சமூகத்தினுடையது.இவையனைத்தும் படத்தில் முறையாக கையாளப்படவில்லை.ஒரு கதாபத்திரம்கூட உண்மைக்கு நெருக்கமாக உச்சரிக்கவில்லை என்பது வேதனையான விசயம்.இதே திருநெல்வேலி பிள்ளமார் சமூகத்துக் கதாபாத்திரமாக சுயம்புலிங்கம் சித்தரிக்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.அப்போது கூட மற்ற கதாபாத்திரங்கள் பேசுவதெல்லாம் நெல்லைத்தமிழ் என்றால் சுவற்றில் முட்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

படத்தில் பிடித்த வசனம்-”எல பேட்டு வரதுக்குள்ள ஏதாது கோணக்களி கிண்டுனனா கொன்னுப்புடுவேன் பாத்துக்கோ”.இதில் வரக்கூடிய கோணக்களி கிண்டுனனா என்பதை அவ்வளவு நேர்த்தியாக கண்காணித்து பிரயோகித்த சுகா அண்ணனுக்கு மேற்குப் பகுதி நெல்லைத்தமிழ் மறந்துபோனது துரதிர்ஸ்டம்.

செவ்விலியக்கியம் குறித்து இடையறாது பேசும் எங்களது கல்லூரி புரட்சி குரூப் தவிர்த்து எண்ணற்ற குரூப்புகளில் நண்பர்கள் இணைத்துவிட்டாலும் தொடங்கிய சூட்டோடு அடங்கிவிடுவார்கள்.சில காலங்கள் ஜடமாக பேச்சு மூச்சில்லாமல் கிடப்பார்கள்.அல்லது சுரத்தில்லாத அதர பழைய ‘காம’டியோ,உணர்ச்சி பீறிட்டுக்கொள்ளும் தத்துவார்த்த வசனங்களையோ பகிர்வார்கள்.இன்னும் சில குரூப்புகளில் இணையும்போது இருபது முப்பது பேர் இருந்திருப்போம்.வெகு விமரிசையாக கதைத்திருப்போம்.உலகின் ஒட்டுமொத்த போர்னோ இலக்கியங்களும் பகிரப்பட்டிருக்கும்.என்னடா ஒச்சையே இல்லையே என்று எட்டிப்பார்த்தால் நானும் குரூப் அட்மினும் மட்டும் இருப்போம்.வாழ்ந்துகெட்ட வீட்டைப் பார்ப்பதுபோன்ற எண்ணம்தான் மேலோங்கும்.

இப்படிப்பட்ட தருணத்தில் இருபத்து மூன்றாவது குரூப்பில் சில தினங்களுக்கு முன்பு என்னை பேருவைகையோடு இணைத்துக் கொண்டார் நண்பரொருவர்.”தேசப்பற்று தமிழர்கள்” என்ற அந்த குரூப்பினுள் சுமார் நூற்றி இருபதுபேர் இருந்தனர்.இணைத்துக்கொண்ட அன்பரைத் தவிர வேறு யாரையும் தெரியாது.இணைத்துக் கொண்டவரையே இரண்டு மாதங்களாகத்தான் தெரியும்.அதுவும் அலுவலக ரீதியில் தொடர்புடையவர் என்பதால் கண்டுகொள்ளவில்லை.

தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் குட் மார்னிங்க் என்று ஒரு நண்பர் அனுப்புவார்.அதனைத் தொடர்ந்து அனைவரும் வரிசையாகத் திரண்டு வந்து குட் மார்னிங்க் சொல்வார்கள்.மாற்றி மாற்றி புகைப்படங்களுடன் கூடிய வாழ்த்து,சன்னி லியோன் குட் மார்னிங்க் சொல்லும் தோரணையில் கச்சை கட்டி நிற்பது போன்ற கணக்கிலடங்கா வாழ்த்துக்களை குவித்து முடிக்கும் சமயம் மணி பதினொன்று ஆகும்.உடனே முதல் நண்பர் நண்பகல் வாழ்த்துக்களை கூற ஆரம்பிப்பார்.அவரைத் தொடர்ந்து அனைவரும் முட்டி முனங்குவார்கள்.இதற்கிடையில் ஒரு நண்பர் சூரியனின் உக்கிரத்தை கவிதையாய் வேறு வடித்துவிடுவார்.அதற்கு அற்புதம்,உலகமகா கவிதை,மேனியில் மயிற்கூச்செரியும் படைப்பு என்று கட்டு கட்டாக வன் புகழ்ச்சிகளை அடுக்குவார்கள்.அடுத்து மதிய உணவு,பிற்பகல்,மாலை,முன்னிரவு,நள்ளிரவு,பின்னிரவு என்று வாழ்த்துக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.பின்னிரவு சமயத்தில் கடும் உக்கிரமாக இருப்பார்கள்.

எவ்வளவு நாளைக்குத்தான் பொறுப்பது குரூப்பை விட்டு விலகிவிடலாம் என்று எண்ணிய தருணம் ஒரு சம்பவம் நடந்தது.என்னைப்போலவே உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த நண்பரொருவர் குரூப்பை விட்டு விலகிவிட்டார்.அதாவது இன்னார் Left group என்று திரையில் காண்பிக்கவும் அனைவரும் கொந்தளித்துவிட்டனர்.

”அவன் யாருடா குரூப்ப விட்டு போறதுக்கு நம்மளா தூக்குன மாதி இருக்கணும் அவன உள்ள இழுங்க அட்மின்”என்று ஒருவர் முகம் குருதிச்சிவப்பில் இருக்கும் ஸ்மைலியோடு அனுப்பினார்.

அவ்வளவுதான் விலகிய அன்பர் குரூப்பிற்குள் கரகரவென இழுத்துக் கொண்டுவரப்பட்டார்.வரிசையாக அனைவரும் திரண்டு வந்து ஏக வசனத்தில் அவரது தலைமுறைகளையெல்லாம் நடு சந்தியில் நிறுத்தி அழகுபார்த்தனர்.பத்து நிமிடங்கள் இடையறாது வசை மழை.அன்பர் ஏதோ டைப்பிங்க் என்று காட்டிக்கொண்டிருந்த சமயம் அவரை குரூப்பை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

இதற்குமேல் எப்படி குரூப்பை விட்டு வெளியேறவேண்டும் என்ற எண்ணம் வரும்.இருந்தாலும் மன ஆற்றாமைக்காக நண்பருக்கு சில தினங்களுக்கு முன்பு என்னை குரூப்பைவிட்டு நீக்கிவிடுங்கள்.மிகுந்த மன உலைச்சலைக் கொடுக்கிறது என்று ஒரு தனி மடல் வரைந்தேன்.அதைப் படித்துவிட்டார்.ஆனால் அதற்கு பதிலேதும் கூற முற்படவில்லை.சரி பேசிவிடுவோம் என்று போனில் அழைத்தேன்.முழு ரிங்க் முடிந்ததும் வாட்ஸப்பில் செய்தி அனுப்பியிருந்தார்.

”ஸாரி நானே நினைச்சாலும் நீங்க வெளிய போகமுடியாது”.

“சரி வேண்டாம்.என்னோட நண்பர்கள் நாலு பேரு நம்பர் தாறேன் அவங்களையும் சேத்து விடுங்க”(செவ்விலக்கியம் பேசக்கூடிய என் உயிரிலும் மேலான் சுரத்துகள்)

இதையும் படிச்சிட்டாரு.ஆனா இன்னும் ரிப்ளை பண்ணல.என்ன ஆனாலும் களமாடுறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

மண்டைக்காட்டு பகவதி என்ன ஒன்னு ரக்ஸிக்கணும்!!

புத்தகத்தின் பெயரே கிளுகிளுப்பாக இருந்ததால் என்ன ஏதென்று பிரித்துப் பார்க்காமலே வாங்கியிருந்தேன்.எண்பத்து சொச்சம் பக்கங்களுடைய சிறிய கட்டுரைத் தொகுப்புதான் என்றாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்வார்களல்லவா அந்த அளவிற்கு செறிவான வரலாற்றுத் தரவுகளடங்கிய புத்தகம்.

கேரளத்தில் நம்பூதிரிகள் சமூகத்தில் நெறி பிறழ்ந்த பெண்களை ஸ்மார்த்த விசாரம் என்ற விசாரணைக்குட்படுத்தி அவர்களுக்கு கொடும் தண்டனை விதிக்கப்படுகிறது.தனியறக்குள் அடைத்துபாம்புகளை விடுவது,ஓலைபாயில் சுற்றி அரண்மனையின் மேல்மாடத்திலிருந்து உருட்டி விடுவது,அழுக்கடைந்த குளக்கரையில் குடிலமைத்து தனியாக வசிக்கச்செய்வது இத்யாதி இத்யாதி.சிறு வயதிலேயே சகோதரனாலும்,தந்தையாலும் காம இச்சைக்கு ஆட்படுத்தப்பட்ட தாத்ரிக்குட்டி தொடர்ச்சியாக ஆண் சமூகத்தால் சீரழிக்கப்படுகிறாள்.சதா பெண்களை பாலியல் இச்சைகளுக்காக அடிமையாக்கி வைத்திருக்கும் நம்பூதிரி சமூகத்து ஆண்களின் கொட்டத்தை அடக்குவதற்காக தன் உடலையே மூலதனமாக்கி பெரிய பதவிகளிலிருந்த நம்பூதிரிகளொடு உறவுகொள்கிறாள்.பின் அவள் நெறி பிறழ்ந்தவள் என்று உறவினர் மூலமாக பிரகடனப்படுத்திக்கொண்டு ஸ்மார்த்த விசாரத்திற்கு உட்படுகிறாள்.விசாரணையில் 65 நம்பூதிரிகளை குற்றம் சுமத்தி அவர்களின் சாதிப் பிரகடனத்தை தகர்த்தெறிந்து தண்டனை கிடைக்கச் செய்கிறாள்
.
இந்த சம்பவத்திலிருந்துதான் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பெரும்பாலான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.கட்டுரைத் தொகுப்பின் சாரம்ஸம் இதுதான்.ஆனால் அதோடு நின்று விடாமல் இந்தக்கதையை பின்னணியாக வைத்து வெளிவந்த பரிணயம்,மாறாட்டம்,வனபிரஸ்தம் இந்தப் படங்களையும் கண்டுவிட்டால் ஒரு முழுமை கிடைக்கும்.

சரி ஆசான் ஸ்மார்த்த விசாரம் பற்றி ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று மேய்ந்ததில் ஏற்கனெவே அற்புதமான கட்டுரை வடித்திருக்கிறார். http://www.jeyamohan.in/972#.VXl18vmqqkq

ஆச்சர்யம் என்னவென்றால் ஆசானின் கட்டுரையை அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்திருக்கிறார்கள் விக்கிபீடியாக்காரர்கள். http://ta.wikipedia.org/…/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE…

சொல்வனம் 129-வது இதழில் எனது “புட்டுக்குழல்” என்ற சிறுகதை வெளியாகியுள்ளது.சொல்வனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙂

http://solvanam.com/?p=40093

பிரேமம்

Posted: May 30, 2015 in பொது

தென் கேரளத்தின் குறுக்கு வெட்டாக பல்வேறு கடைநிலை கிராமங்களுக்கு நடைபயணியாக திரிந்தவன் என்ற அடிப்படையில் அந்த நிலப்பரப்பின் மேல் தீராக்காதல்.பழைய பத்மராஜன்,பரதன் படங்களில் சமச்சீரற்ற அந்த நிலப்பரப்புகளே ஒரு பாத்திரமாக படம் நெடுகிலும் கதாபாத்திரங்களின் உணர்வைப் பிரதிபலிக்கும்.அந்த வகையில் பிரேமம் படத்தில் முதலில் பிடித்தது அந்த இடைநிலை கிராமத்தின் நிலப்பரப்பு. பள்ளியில்,கல்லூரியில்,பணியில் என்று காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ காதல்களை கடந்துபோய்,வாழ்வின் ஏதோ ஒரு முட்டுச் சந்தில் வைத்து சற்றும் எதிர்பாராத ஒரு பெண் வாழக்கைத் துணையாய் அமைவது என்ற தளத்தில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் பிரேமம் அதன் உருவாக்கத்தில் தனித்து நிற்கிறது. படத்தின் முதல் அத்தியாயத்தில் ஒடுங்கிய நீளமான பாலம் வருகிறது.அதன் ஒருபுறத்தின் முடிவில் பள்ளத்தில் சிறிய பள்ளியும் அதையொட்டி, STD பூத்துடன் கூடிய ஒரு டீக்கடையும் கதை நிகழும் அந்தக் காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன.அடுத்த அத்தியாயத்தில் வரும் கல்லூரியும் வகுப்பறையும் அதன் தனித்த அழகியலோடு காதலை சுமந்து திரியும் பிரதான கதாபாத்திரங்களாகின்றன.நிவின் தங்கியிருக்கும் வீடு,கறை படிந்த அதன் சுவர்கள்,கல்லூரியின் கேண்டின் எல்லாமே கச்சிதம். அடுத்து படத்தில் வரும் நாயகிகள்.சமீபத்தில் எந்தப் படத்திலும் நாயகிகள் இவ்வளவு நேர்த்தியான முகபாவனைகள் வெளிப்படுத்திப் பார்த்ததில்லை.பார்வதிமேனன் விதிவிலக்கு.தமிழில் எதார்த்த சினிமா என்ற பெயரில் ஒரு இயக்குனர் கேமராவைத் தூக்கிக் கொண்டு மனிதக் காலடித்தடமே படாத இடத்திற்கு ஓடுகிறார்.கூடவே யானையையும் கூட்டிக்கொள்கிறார்.சரி போகட்டும்.உணர்வுகளையாவது உண்மையாகப் பிரதிபலிக்கிறாரா என்றால் உலகத்திலே எந்தப் பெண்ணும் செய்யாத முக பாவனைகளையெல்லாம் பாவப்பட்ட நாயகிகளைச் செய்ய வைத்து,போலி உணர்ச்சிகளை கட்டியெழுப்புகிறார்.அந்த இயக்குனர் இந்தப் படத்தைப் பார்த்து பெண்களின் நுண்ணிய முகபாவனைகளை எப்படிப் படம் பிடித்திருக்கிறார்கள் என்று கண்டுணர்ந்து செயல்பட வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன். கல்லூரியில் டீச்சராக வரும் சாய் பல்லவியின் அபாரமான உடல்மொழியும், குழைந்து சிரிக்கும் விழிகளும்,ஒல்லியான தேகமும் அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன.பள்ளிப் பருவத்து பெண்ணாக வரும் சிறுமியும் அசத்தியிருக்கிறாள். தமிழில் விஜய் சேதுபதி என்றால் மலையாளத்தில் நிவின்.அற்புதமான நடிகன்.பெண்களிடம் பேச பள்ளிக்காதலில் தோன்றும் கூச்சமாகட்டும்,மோதலில் உண்டாகும் ஆக்ரோஸம்,காதல் கை கூடாது என்று தோன்றும் வேளையில் உண்டாகும் விரக்தி,கோபம் அனைத்தையும் அசாத்தியமான உடல்மொழியோடு கடத்துகிறான்.கூடவே வரும் நண்பர்களும் அவர்களின் எதார்த்தமான நகைச்சுவை கலந்த உரையாடல்களும் படத்தை தொய்விலிருந்து தூக்கி நிறுத்தியிருக்கின்றன. அல்போன்ஸ் இயக்குனர் என்பதைவிட எடிட்டராய் நேரம் படத்தில் அவ்வளவு பிடிக்கும்.இந்தப் படத்தில் இயக்குனராய் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும் வேளையில் இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் கத்திரி இன்னும் கொஞ்சம் விளையாண்டிருக்கலாம் என்று தோன்றியது.கல்லூரியில் குடிப்பதுபோல் காட்சி வைப்பது,வயது மூத்த ஆசிரியையை சைட் அடிப்பது,பள்ளிக் குழந்தையை காதலிப்பது-இதெல்லாம் தவறென்று ஏற்கனெவே கேரள சமூக ஆர்வலர்கள் வாதத்தைத் தொடங்கிவிட்டனர்.இதில் சற்று சினிமாத்தனம் தூக்கலாகத் தெரிவதும் உண்மை.இது கலைத்துப் பார்த்தால் ஒரு நல்ல கலைப் படைப்பு பிரேமம். கோலிவுட்டிலுள்ள சில போலி இயக்குனர்கள் படத்தைப் பார்த்துவிட்டு ரீமேக்கிற்காக துண்டு விரிக்காமல் இதைப்போல எளிய உணர்வுகளை,நிலவியலோடு பிரதிபலிக்கக் கூடிய படங்களை உருவாக்க முற்படுவார்களேயானால் மெச்சலாம்.

11390294_805371056199172_4153488636220892508_n

தரையில் முட்டி மடக்கியவாறு தூக்குக் கயிற்றோடு சடலமாகக் கிடந்த சிறுவன் ஒருவனின் புகைப்படத்தை பேஸ்புக்கின் வெள்ளோட்டத்தில் காண நேர்ந்தது.துயரத்தின் ஒட்டுமொத்த வடிவாய் நெஞ்செலும்பு துருத்தியவாறு கிடந்த அந்த உருவம் என் ஞாபக அடுக்குகளின் ஆழத்தில் பாசி பிடித்து கிடந்த,நான் நேரிட்டு கண்ட சடலங்கள் அனைத்தையும் உயிர்த்து எழுப்பி விட்டது.வாழ வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணிகள் இருக்க, கயிற்றைக்கொண்டு குரல்வளையை முறிப்பதற்கு மெல்லிய நூலிழை போன்ற சிறிய காரணமே போதுமானதாக இருந்திருக்கிறது அவர்களுக்கெல்லாம்.

வடக்கு பம்பிற்கு துரச்சி அக்கா நீரெடுக்க வருகிறாளென்றால் சிறுவர்களாகிய எங்கள் தோள் தாங்கியவாறு மையம் கொண்டு நிற்பார்கள் ஊரின் அத்தனை வாலிபர்களும்.மினுக்கமான கருப்பு நிறம்,தெளிந்த அகலமான கண்,வரிவரியாய் சிவந்த உதடுகள்,இடுப்பு தெரிய உடுத்திய சேலை என கோகுல் சாண்டல் பவுடர் வாசத்தோடு அவள் கடக்கையில் நாமும் வாலிபத்தை எட்டவில்லையே என்ற ஏக்கம் மிஞ்சி நிற்கும்.நெட்டக்கால் அதிசயத்தை அவளுக்கு ஏனோ பிடித்துப் போயிருந்தது.அவனுக்கும் அவளைப் பிடிக்கும் என்றுதான் நம்பியிருந்தாள்.அவளின் நம்பிக்கையை உறுதிப்படுத்த எண்ணியவன் ஒருமுறை தங்க நாடான் கிணற்றடியில் யாருமில்லாத ஒரு மழை நாளில் ஆடைக்கடியில் மறைந்திருந்த அவளின் மேனி பார்த்ததாக எங்களிடம் கூறினான்.அவனுக்குத் தேவை துரச்சி அக்கா அல்ல.ஆடை மறைத்த பிரதேசங்கள்தான் அதுவும் யாருடையதாயினும் என்பதை அவள் கண்கூடாக கண்ட நாளில் நடு உத்தரத்தில் அவளின் வெற்றுடல் ஆடிக்கொண்டிருந்தது.வெகு நாட்களாக துரத்திக்கொண்டே வந்து காலவோட்டத்தில் சோர்ந்து போயிருந்த, ஜன்னல் இடுக்குவழி கண்ட அந்தக்காட்சி அதன் முழு வீரியத்தோடு பரிணமித்துவிட்டது.அன்று ஊரைவிட்டு ஓடியவனைப் பற்றிய எந்த தகவலும் அதன்பின் இல்லை.சமீபத்தில் இடுங்கிய கண்களோடு உருக்குலைந்தவனாய் வந்து ஊரின் தெற்கு கோடியிலுள்ள அவனுடைய குடிலின் திண்ணையில் கிடந்து உயிர் நீத்தான்.பம்பாயின் கோர முகங்கள் அவனை உருத்தெரியாமல் சிதைந்திருந்தன.

முருகன்.புத்தி சுவாதீனமற்றவன் என்று எல்லோரும் சொல்வார்கள்.ஆனால் கோளவடி தாத்தாவிற்கு அவன் ஒருவன்தான் உலகிலேயே புத்தியுள்ளவன்.எல்லோரும் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதுதான் உண்மை.ஊர் கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றக் குதித்தவனுக்கு ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றிக் கரையில் விட்டதும் காக்கா வலிப்பு வந்துவிட்டது.வாயில் நுரை வழியக் கிடந்தவனை மடியில் வைத்து ஏந்திக்கொண்டார் கோளவடி தாத்தா.சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த யாருக்கும் நீருக்குள் குதிக்க வேண்டும் என்ற எண்ணமே உதிக்காத வேளையில் அவனின் அந்தச் செயலால் கோளவடி தாத்தா தாரை தாரையாய் கண்ணீர் உகுத்து அவனைக் கட்டிக்கொண்டார்.இந்த சம்பவத்துக்குப் பின் எனக்கும் அவனைப் பிடித்துப் போயிருந்தது.இதைப்போல் அவனுடைய பல சம்பவங்கள் மனிதர்களுக்கு இடையூறு உண்டு பண்ணுபவையாகவும்,மனிதன் தவிர்த்த ஏதோ ஒரு உயிருக்கு நன்மை உண்டாக்குபவையாகவும் இருந்தன.பிறிதொரு நாளில் கோளவடி தாத்தா கண்களில் அப்பியிருந்த சந்தனம் காயும் முன்னரே வீட்டிற்குள் கால் நிலத்தில் படாமல் விறைத்து நின்றது.நிலை குத்தி நின்ற கண்களிலிருந்து கடைசியாக வழிந்த கண்ணீரின் தடம் இந்தச் சிறுவனைக் கண்டதும் துலங்கத் தொடங்கியது.

மைசூரில் பணியிலிருந்த சமயம்.மேற்கு வங்காளத்தைச் சார்ந்த தகப்பனும் மகனுமாய் சேர்ந்து house keeping வேலையிலிருந்தார்கள்.ஹிந்தி அறியாத அவர்களிடம் நம்மவர்கள் ஹிந்தி போன்ற ஒரு மொழியில் வேலைகளை அடுக்குவர்.எந்தச் சலனமும் இல்லாமல் அதைப் புரிந்து பணியெடுப்பார்கள்.அந்தச் சிறுவனுக்கு அடுத்த மாத சம்பளத்தில் மொபைல் வாங்கித் தருவதாகக் கூறியிருக்கிறார் அவனுடைய தந்தை.அவர் கூறிய அடுத்த மாதத் துவக்கம் முதலே இருவருக்கும் பயங்கரமான சண்டை.மொபைல் வாங்கித் தர முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு முன்பாகவே fire shaft க்குள் நைலான் கயிற்றில் கழுத்து இறுகிக் கிடந்தான்.தலையில் அடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்த அந்த தகப்பனின் உருவம் அவ்வளவு எளிதில் மறையாது.பிரேத்தை மைசூரின் இடுகாட்டிலே எரித்து சாம்பலை அள்ளிக்கொண்டு காவேரி நதியை நோக்கி நடந்தவருக்கு மேற்கு வங்காளத்தில் மனைவியோ வேறு மக்களோ கிடையாது.

ஆசை ஆசையாய் வாங்கிக் கட்டிய சேலையோ,நைலான் கயிறோ,ஆட்டுப் புழுக்கை வாசத்தோடு கிடக்கும் தொழுவத்தின் கயிறோ,அரசாங்கத்தால் பின்னப்பட்டு தூக்கு மேடையில் தொங்கும் வழுவழுப்பான கயிறோ ஒரு உயிரை எட்டி நெறித்துக் கொல்லுமாயின் தூக்குக்கயிறே மரித்துப் போகட்டும்.

கால்நடைகள் புசிக்காமலிருக்க சுற்றிலும்
மூங்கில் வேய்ந்து ஆசையாய் வளர்த்த மாமரம்
அசுர வளர்ச்சியடைந்து குடிசையின் தெற்குச்சுவரை
வேர் நுழைத்துப் பிளந்து வைத்திருக்கிறது

சித்திரைவிசு தினத்தில் சுகுமாரன் ஆசாரி
தெக்குமேட்டு புளியமரம் அறுத்து உண்டாக்கிய
தலைவாசல் கதவு கரையான் புற்றாகியிருக்கிறது

துவைப்பதற்காக கல் குவாரியிலிருந்து
கொண்டு வந்து வளவுக்குள் பதித்த
பாட்டமான கருங்கல்லைச்சுற்றி
புதர் மண்டிக்கிடக்கிறது

முற்றத்து முருங்கை மரத்திற்கும்
வேலியில் நிற்கும் வாதமுடக்கி மரத்திற்கும்
கட்டப்பட்ட துணி காயப்போடும் நைலான் கயிறு
அறுந்து நிறமிழந்து பிரியாகி தொங்குகிறது

காற்று பிடுங்கி வழித்தெறிந்த கூரை வழி
வானம் பார்த்து கரையான் தின்று கிடக்கிறது
உணர்ச்சியற்ற வெற்று புணர்வுக்குப்பின்
சுருட்டி எறியப்பட்ட பாயும் கிழிந்த சேலையும்

இவைகளைத் தவிர அங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லை.