Archive for December, 2013

தென்னகத்தின் வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு சிறந்த சமயமாக நான் கருதுவது ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்டு மாதம்.ரயிலிலோ,பேருந்திலோ வேறு இடங்களில் இருந்து வருபவர்கள் நெல்லையிலிருந்து வாகனம் அமர்த்திக்கொள்ளுங்கள்.காலையில் அங்கிருந்து கிளம்புவதுபோல் தயாராகிக்கொள்ளுங்கள்.அதிகாலை நேர இளங்குளிரும்,வெறிச்சோடி கிடக்கும் சாலையும்,24 மணி நேரமும் இயங்கும் டீக்கடையும்,காலத்தின் சாட்சியாய் நிற்கும் மேம்பாலமும் பயணத்திற்கு வரவேற்று காத்துநிற்கும். மெல்ல திருநெல்வேலியின் எல்லையிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து தென்காசி பைபாஸ் சாலையில் விரையுங்கள் குற்றாலம் நோக்கி.ராணி அண்ணா காலேஜ்,மனோன்மணியம் பல்கலைக்கழகம் கடந்தால் முழுவேகத்தை எட்ட முடியும்.சாலையின் இருபக்கமும் ஆயிரங்காலத்து வரலாற்றை சுமந்து கடந்து கொண்டிருக்கும் கருவேலமரங்களும்,சிறு கிராமங்களும். காலை டிபன் ஆலங்குலம் தவசி ஹோட்டலில் சாப்பிடுவது உகந்தது.நான்கு வகை சட்னி,சாம்பாருடன் ஆவி பறக்கும் பூப்போன்ற இட்லி வாயில் இட்டவுடன் கரைந்து இரைப்பையை அடைந்துவிடும்.இறுதியாக ஒரு காப்பி குடித்துவிட்டு காலை டிபனை நிறைவு செய்யலாம்.வெளியில் வந்தால் லுங்கி கட்டிய மனிதர்களும்,வியாபாரிகளும்,பள்ளி/கல்லூரி மாணவ,மாணவிகளும் சாலையெங்கும் வியாபித்திருப்பார்கள்.பெரும்பாலான காய்கறிகள் இங்கிருந்துதான் கேரளாவின் தென் பகுதிக்கு எற்றுமதியாகின்றன என்பது சிறப்பு. அங்கிருந்து கிளம்பி எல்லை தாண்டியதும்,கழுவி வைத்ததுபோல் தெளிவான மேற்குத்தொடர்ச்சி மலையின் பிரம்மாண்டம் விரியத்தொடங்கும்.சிலேட்டில் சிறுபிள்ளை கிறுக்கிய வெள்ளை கோடுகளாய் நெளியும் தூரத்து அருவிகள்.மேற்கிலிருந்து மூலிகை வாசத்தை சுமந்து வரும் தென்றல் காற்றும்,சிறுதூறலும் இதயத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.நாசித்துளைகளில் அறியலாம் உள் சுத்தம் அடைந்துவிட்டீர்கள் என்று. Image சாலையின் இருபுறமும் பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும் புளியமரம் தெங்காசி எல்லையை தொடும்வரை சாட்சியாய் கூடவரும்.குற்றாலத்திற்குள் நுழைவதற்கு முன்பே அருவியின் பேரிரைச்சலும்,காற்றில் மிதந்து வரும் மூலிகை வாசமும்,வாசத்தை இரையாக்கி தின்றுகொண்டிருக்கும் சாரலும் தங்களை வரவேற்கும். குளிப்பதற்கான உடைக்கு மாறி அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் அடைந்தால் ஒரு புது உலகம் வரவேற்று காத்திருக்கும்.சாலையின் இருபுறமும் பலதரப்பட்ட கடைகள் களைகட்டியிருக்கும்.உள்ளாடை முதல் தங்க நகை வரை அனத்தும் கிடைக்கும்.சாலையின் குளிர்ச்சியும்,மக்களடர்த்தியும்,அருவியின் அவலமும்,பாதாம் பால் காய்ச்சும் வாசமும் அந்த சாலையின் வெளியெங்கும் நிறைந்திருக்கும். குளிக்க செல்லும்முன் முதலில் வரவேற்பவை மசாஜ் செண்டர்கள்.நல்லெண்ணெயுடன் கரிசலாங்கண்ணி,மற்றும் சிலமூலிகைகள் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் செய்யப்படும் மசாஜ் பிரசித்திபெற்றது.மன திடம் உள்ளவர்கள் மட்டும் அங்கே செல்வது நல்லது.அரை மணி நேரம் உள்ளாடையோடு அமரவைத்து,எண்ணெயை உச்சி முதல் பாதம் வரை தடவி விட்டு மெல்ல ஆரம்பிப்பார்கள்.சருமத்தின் துளைகளினூடே எண்ணெய் ஊடுருவி பின்னர் கசியும் நேரம் தொடங்குவார்கள் தாளத்தை.சமட்டியால் அடித்ததுபோல் இருக்கும் ஒவ்வொரு அடியும்.ஆவி பறக்க அடிக்கும்போது மூலிகைச்சாறு கலந்த எள்ளெண்ணெய் ரத்தத்தில் கலந்து சுத்தம் செய்ய தொடங்கும்.ரத்த ஓட்டம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம். Image மசாஜ் முடிந்ததும் ஒரு அரை மணி நேரம் அருவியின் அழகை,பிரம்மாண்டத்தை,மக்களின் ஆரவாரத்தை ரசித்தவாறே பொழுதுபோக்குவது அத்தனை அலாதியானது.எண்ணெய் சருமத்திலிருந்து வெளிவரும் சமயம் குளிக்க சென்றுவிடுவது உகந்தது.அருவிக்குள் சென்றதும் இதயத்துக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு மெல்ல குறையும்.ஐஸ்கட்டியின் குளிர்ச்சி என்று சொன்னால் இதற்கு பொருந்தாது.ஒருவிதமான மயக்கும் குளிர்ச்சி அது.உடம்பின் எண்ணெய் பிசுக்கினூடே சருமத்தினுள் ஊடுருவும் குளிர்ச்சி ரத்தத்தை சூடாக்கிக்கொண்டிருக்கும். அருவியின் நடுப்பகுதிக்கு சென்று தலைகொடுத்து திரும்பும்போது,தலைமுடி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது நல்லது.எந்த சாம்பு போட்டாலும் கிடைக்காத மென்மையடைந்திருக்கும் கூந்தல்.அருவியை விட்டு வெளியே வந்தாலும் சாரல் தூறிக்கொண்டே இருப்பதால் உடலின் குளிர்ச்சியும்,மனதின் குளிர்ச்சியும் ஒரு உன்னத நிலையை அடைந்திருக்கும்.ஒரு பாதாம் பால் குடித்துவிட்டு மீண்டும் ஒரு குளியல்.உடலும் உள்ளமும் சுத்தமடைந்த ஒரு தியான நிலையை உணரலாம். உடை மாற்றிவிட்டு சாரலில் நின்றவாறே மக்களின் ஆரவாரத்தையும்,அருவியின் ஆங்காரத்தையும்,சாலையோரம் குவிக்கப்பட்டிருக்கும் சீசன் பழங்களையும் ரசிப்பது ஒரு அலாதியான சுகம்.காட்சிகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே பசி வயிற்றை கிள்ளுவதை உணரலாம்.செல்ல வேண்டிய இடம் பார்டர் புரோட்டாக்கடை. அங்கிருந்து வடமேற்காக கேரள சாலையில் முன்னேறினால் செங்கோட்டையில் உள்ளது பார்டர் புரோட்டாக்கடை.அறுபது பேர் அமர்ந்து உண்ணும் அளவுக்கு விசாலமான இடமென்றாலும்,எப்போதும் டேபிளின் பின்னால் அடுத்த அமர ஒரு கூட்டம் நின்று கொண்டே இருக்கும்.மற்ற புரோட்டாக்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு அதன் மென்மையும் அதனுடன் ஊற்றப்படும் மூன்று சால்னாவும்தான்.புரோட்டாவை பிச்சிப்போட்டு,மூன்று சால்னாவையும் ஊற்றி குழைத்து,ஆம்லேட்டுடன் கலந்து வாயில் வைத்தால் நுனி நாக்கில் தொடங்கும் சுவை அடிவயிறு வரை ருசிக்கும்.அதனூடே மிளகு பொடியிட்டு பொரித்த நாட்டுகோழிக்கால் எடுத்துவருவார்கள் ஒரு பெரியபாத்திரத்தில்.எலும்பிலிருந்து பிரிவதே அறியாமல் தொண்டைக்குள் இறங்கும்.இது இல்லாமல் பிரியாணி பிரியர்களுக்கு பிரியாணியும் கிடைக்கும்.ஐந்து புரோட்டா,நான்கு கோழிக்கால் என்பது அசாத்தியமானதல்ல என்பதை வெளியே வரும் போது உணர்வீர்கள். Image வெளியே வந்து சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு,மேற்கே கண்ணுப்புளி மொட்டு என்ற பகுதிக்கு செல்லுங்கள்.ஒரு குறிப்பிட்ட பகுதிக்குமேல் வாகன அனுமதி இல்லை.காட்டிற்குள் அரைமணி நேரம் நடந்தால் அந்த சிறிய அடர்த்தியான அருவியை அடையலாம்.அமர்ந்து அனுபவித்து குளிக்க சிறந்த இடம்.மாலை நேரத்தில் அருவி முடியுமிடத்திலுள்ள அணைக்கட்டில் அமர்ந்து,தவழ்ந்து வரும் தென்றலை அணைத்தல் ஒரு சுகம். Image தென்காசியில் எல்லாத்தர லாட்ஜுகளும் உள்ளன.தங்கள் வசதிக்கேற்றாற்போல் தங்கிக்கொள்ளுங்கள்.அன்றைய தினத்தின் அலைச்சலும்,உடலின் அசதியும்,எண்ணையின் மகிமையும் ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும். இரண்டாவது நாள் செண்பகாதேவி அருவி,ஐந்தருவிக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு பாபநாசத்தை நோக்கி நகர்ந்து விடுங்கள்.தென்காசியிலிருந்து கடையம்,பொட்டல்புதூர்,ஆழ்வார்குறிச்சி,ஆம்பூர்,டானா வழியாக தமிழின் பிறப்பிடமாம்,பொதிகைமலை அடிவாரத்தை ஒரு மணி நேரத்தில் அடையலாம்.இடையில் பொட்டல் புதூரிலிருந்து ஆம்பூர் வரை சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சை வயல் மனதை கொள்ளைகொள்ளும்.பச்சைகம்பளத்தின் நடுவே கருப்புகோடு போல நெழிந்து செல்லும் தார்சாலை.பாபநாசர் கோவிலை அடைந்ததும் தாமிரபரணியின் பிரம்மாண்டத்தை உணரலாம்.படர்ந்து,விரிந்து,மலையடிவாரத்தை குடைந்து பலநிலைகளை கடந்து வரும் ஆற்றுநீரை காண்பது ஒரு அலாதி சுகம். Image அங்கிருந்து சற்று மேலே சென்றால் அகஸ்திய முனிவர் தவம் புரிந்ததாக கருதப்படுமிடம்.அங்குள்ள அகஸ்தியர் அருவி மற்றுமொரு அதிசயம்.அதில் ஒரு குளியல் போட்டுவிட்டு அப்படியே மேலே சென்றால் காரையார்.சூரியனை அதிகம் கண்டிராத சாலைகள்,பிரம்மாண்ட தேக்கு மரங்களினூடே நடந்து சென்றால் அணையின் ஒருபகுதியை சென்றடையலாம்.அங்கிருந்து அரைமணி நேர படகு பயணத்தில் பாணதீர்த்தம் அருவியை அடையலாம்.மக்கள் நடமாட்டம் குறைவான,நீர்ச்சுழல் நிறைந்த பகுதி.அந்த இட்த்தின் தனிமையும்,சுற்றி எங்கும் நிறைந்திருக்கும் நீரும் மனதின் அடியாழம் வரை ஊடுருவி துயர்துடைத்தெறியும். பின்னர் அம்பாசமுத்திரம் வந்து அறை எடுத்து தங்கிகொள்ளுங்கள்.அம்பையின் அழகை காலைக்கதிரவனூடே காண்பது அத்தனை அழகு.வீதியெங்கும் நிறைந்திருக்கும் கோவிலும்,கோலமிடப்பட்ட வீட்டு வாசல்களும்,குளித்து முடித்து பள்ளி,கல்லூரி செல்லும் பெண்களும் ஒரு கிறக்கத்தை உண்டுபண்ணும்.எந்த மெஸ்ஸில் உணவு உண்டாலும் அதன் சுவை தனித்துவமானதாக இருக்கும். அங்கிருந்து கிளம்பி கல்லிடைக்குறிச்சி கடந்து,மணிமுத்தாறு நோக்கி செல்லுங்கள்.காட்டினுள் பரந்து,விரிந்து கிடக்கும் அணையும்,அருவிகளும் ஒரு உற்சாகத்தை உண்டுபண்ணும்.பெரும்பாலும் கடைகள் எதுவும் அங்கு இருக்காது என்பதால் தேவையான உணவு பொருட்களை கீழேயே வாங்கிக் கொள்வது நல்லது.அங்கு ஒரு குளியல் முடித்துவிட்டு மேலே பயணித்தால் மாஞ்சோலை எஸ்டேட் உங்களை வரவேற்கும்.வெயிலே கண்டிராத ரம்மியமான இடம்.பாசமான மக்கள்.காவல்துறை கட்டுப் பாட்டிற்குட்பட்ட பகுதி.ஒரே ஒரு பேருந்து மட்டும் இயங்கும் அங்கிருந்து திருநெல்வேலிக்கு.அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு எஸ்டேடை சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் நெல்லை நோக்கி பணியுங்கள். நெல்லை டவுணை அடைந்ததும் இருட்டுக்கடை அல்வாவை சுவைத்துவிட்டு,நெல்லையப்பரை வணங்கிவிட்டு,கடைத்தெருவில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கள் இருப்பிடம் நோக்கி நகருங்கள். மீண்டும் மற்றொரு பயணத்தில் சந்திக்கலாம்.

Advertisements

காத்திருப்பு..!!
காத்திருப்பின் முடிவில் காத்திருந்தது அவளின் வருகை!!
காத்திருக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தன அவனின் இமைகளும் இதயமும்.!!
காத்திருந்து அவளை அழைத்து வந்தது அந்த பேருந்து..
காத்திருப்பவனை காண வந்தாள் பேருந்திலிருந்து இறங்கி..
அவர்களுக்காக காத்திருந்த ஆலமர நிழலில் அமர்ந்தனர்..
காத்திருப்புகள் விலகின…
நெருக்கத்தின் முடிவில் காத்திருந்த முத்தமோ காத்திருக்க முடியாமல் முந்திக்கொண்டது..!!!ஆச்சர்யம் ..!!!

குடையில்லா பேருந்து நிறுத்தத்தில் பயணிகளாய் சந்தித்த போது இருந்த அதே பதட்டமும்,ஆர்வமும்,ஆசையும் ஆறு வருடங்களய் உன்னை சந்திக்கும்போதெல்லாம் தொடர்வது ஆச்ச்ர்யமே..!!!

வேதியியல் மாற்றம்…!!!

வேதியியல் ஆய்வுக்கூடத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டும்,கந்தக அமிலமும் ஏனோ வினைபுரியவே இல்லை நான் உன்னெதிரே நின்ற போது..!!
நம் கண்கள் புரிந்த வினை காதலில் முடியும் தருணம் பள்ளிவாழ்க்கை முடிந்து போனது..!!

முச்சந்து…!!

வடக்கு-தெற்கு ரோட்டில் கிழக்காக பிரியும் ஒரு ரோடு–அது ஒரு முச்சந்து..,
ரோட்டிற்கு மேற்கு பக்கம் பெரிய ஆலமரம்,
அதனடியில் கிழக்குபார்த்தாற்போல் ஒரு பெட்டிக்கடை,
தினமும் மாலை5.30 மணிக்கு அந்த பெட்டிக்கடையில் உனக்காக காத்திருந்தபோது நான் அறிந்திருக்கவில்லை பின்னாளில் இதுதான் நமது காதல் சின்னமாகுமென்று..!!

கனவு சாலை..!!!
நான் காணும் கனவு சாலையில் நீயும் நானும் மட்டும் தனியே பயணிக்கிறோம்…
நாம் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவும் இல்லை பேசிக்கொள்ளவும் இல்லை….
வெகு நேரம் தொடர்கிறது இந்த பயணம்…
நானோ களைப்படைந்து அமர்கிறேன்….
நீயோ வேகமாக பயணிக்கிறாய் என் மனதில்…….

மழை மரித்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது!

அதன் பிரேதம் வடக்கு தெற்காக செல்லும் அந்த தார் சாலையெங்கும் பரவிக்கிடந்தது..!!

மழை நீரை உள்வாங்கி வெளியெங்கும் வாசத்தை பரப்பிக்கொண்டிருந்தது சாலையின் மேற்கு பக்கமுள்ள எலுமிச்சை தோட்டம்.!!

சாலையின் கிழக்கு பக்கம் மொட்டவிழாத ரோஜாத்தோட்டம் மூச்சிரைத்துக் கொண்டிருந்தது மொட்டவிழ்க்க ..!!

அந்த சாலை முடிவதற்கு இரண்டடி முன்னே உள்ள பாலத்தில் அமர்ந்திருந்தான் என்றும் போல

எலுமிச்சையின் நிறத்தையும்,ரோஜாவின் மென்மையையும் குழைத்து வடித்து அவளை அந்த சாலையில் அனுப்பியிருந்தான் பிரம்மன்!

அந்த சாலையின் மணமும்,குளுமையும்,மிதமான காற்றும் ஒரு ரசாயன மாற்றத்தை அவனுள் நிகழ்த்திக் கொண்டிருந்தது..!!
அவளுக்கும் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் ஏனென்றால் அந்த சாலை ஆரம்பமாகும் இடத்திலேயே சைக்கிளிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்..!

முடியப்படாத கூந்தலில் ஊசலாடிக் கொண்டிருந்த்து மல்லிகை அவன் மனதைப் போல.!
அவள் தட்டச்சு வகுப்பிற்கு செல்வாள் மேற்கு நோக்கி அவன் கல்லூரிக்கு செல்வான் கிழக்கு நோக்கி..!!

அவனை கடக்கும் போது அவள் உதிர்க்கும் புன்னகைதான் அவர்களின் மொழி..அதைத் தாண்டி பேசுவதில்லை..!!
அன்று மட்டும் ஏனோ பேச எத்தனித்திருந்தான்.!!
அதை கணித்தவாறே சிறு புன்னகையோடு நடக்க ஆரம்பித்திருந்தாள்!.
மொட்டாய் இருந்த சந்திப்பு வார்த்தைகளால் அவிழத்தொடங்கியது..

அவளே தொடங்கினாள்..!!

“ஏன்? என்னவோ மாதிரி நிக்குற?
நீ ஏன் சைக்கிள உருட்டிட்டு வர்ற?
கேள்வி கேட்டா பதில் சொல்லணும் சார்.!
ஆமா மேடம் சொல்லுங்க..!
அய்யே!! உங்கூட பேசதான் உருட்டிட்டு வர்றேன்னு நெனப்போ?
ஆனா நான் அதுக்காக தான் நிக்கிறேன்.!!”

எங்கு ஒளித்து வைத்திருந்தாள் இத்தனை நாள் இந்த வெட்கத்தை..
புன்னகையும் வெட்கமும் கலந்து அவனை திக்குமுக்காட செய்தது
வெட்கத்தின் அழகை பயம் திருடிக்கொண்டது அடுத்த நொடியில்!
பயம் மெல்ல மேனிக்குள் இறங்க நிறம் மாறியது கன்னம்!
முதல் முத்தம் பயமாய் வருமென இருவரும் எதிபார்த்திருக்கவில்லை!
அதன் பின்னர் எதுவும் பேசமால் எதிரெதிர் திசையில் பிரிந்தனர் இருவரும்!!

நாளைய தினத்திற்காக அந்த பாலத்திலேயே நின்று கொண்டது முத்தமும் வெட்கமும்..!!!

கடந்த வாரம் பாண்டிய நாடு படம் பார்ப்பதற்காக கோழிக்கோட்டிலுள்ள பாரம்பரியமிக்க காரனேசன்” தியேட்டருக்கு சென்றிருந்தேன்.திருநெல்வேலியின் சிவசக்தி தியேட்டருக்கு எந்த வகையிலும் குறைவில்லா தியேட்டர் என அபிசேக் பச்சன் நடித்த “பிளேயர்ஸ்” படம் பார்த்தபோதே தெரியும் என்றாலும் வேறு வழியற்று செல்ல நேர்ந்தது.

படத்தை பற்றிய பெரிய எதிர்பார்ப்பு ஏதுமற்று அமர்ந்திருந்தேன்.எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்தது ஒரு குடும்பம்.தாயுடன் இருபது வயது மதிக்கத்தக்க மகனும் மகளும்.படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தலைவா,விஸ்வரூபம் படங்களைப் பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தனர்.சற்று நேரத்திற்கெல்லாம் பாண்டிய மன்னர்கள் சிலர் எனது பின் வரிசையில் அமர்ந்தனர்.அப்போதே படத்தைவிட இவர்கள் மேல் எதிர்பார்ப்பு கூடியதற்கு காரணம் அவர்களின் பேச்சும்,உடையும்.(தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பேச்சில் தெரிந்தது).

படம் தொடங்கியது.வேந்தர் மூவிஸ் என திரையில் வர பக்கத்தில் இருந்த பையன் எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்து விட்டான்.சரி விசாலின் வெறியனாய் இருப்பான் என்றெண்ணி அமர்ந்திருந்தேன்.பச்சமுத்து அவர்கள் சிரித்த முகத்துடன் மறைய இருக்கையில் அமர்ந்துவிட்டு தன் தங்கையிடம் இவன் தான் தலைவா படம் எடுத்தவன் என்றான்.ஒருவாறாக ஊகித்துக்கொண்டேன் விஜயின் வெறியர்களென்று.பின்னர் விஷால் பிலிம் பேக்டரி என்று வந்தவுடன் பின்னாலிருந்தவர்கள் விஷிலடிக்கத் தொடங்கினர்.

”ஏ விஷால் பய தாம் படம் எடுத்துருக்கான்”என்றான் ஒருவன்.

“ஆமா அவனுக்கென்னடே” என்று ஒருவன் கூறும் போதே “பாண்டிய நாடு” என்று தொடங்க உற்சாகம் கரை புறண்டது அவர்களிடம்.

எழுத்து முடிந்து வில்லன் இறந்து கிடக்க ஒப்பாரி பாடல் ஆரம்பமானது.”இது என்னல மொதலயெ ஒப்பாரி வக்கானுவ”என்றதும்,மற்றவன் விசாலுக்கு அறிமுக பாட்டே இல்ல இதுலாம் ஒரு படம்னு கூட்டிட்டு வந்துட்டான் மடப்பு…என்று கோபத்தின் உச்சத்தை அடைந்திருந்தான்.முதல் பத்து நிமிடத்திற்கு விசால் வராததால் இரு தரப்பும் கொந்தளிக்கத்தொடங்கினர்.

விசாலின் அறிமுகக் காட்சி.”ஏ ஆளு சூப்பரா இருக்காம்லா?” என்று கேள்வி கேட்டுவிட்டு “சத்யம் படத்துலதான் சூப்பரா இருப்பான்” என்று அவனே பதிலும் சொல்லிக்கொண்டான்.முக்கியமான விசயம்.திரைச்சீலையின் தூய்மையை சொல்ல மறந்து விட்டேன்.ரேசன் கடை வேஸ்டி கட்டி,இரண்டு நாள் வயலில் வேலை பார்த்துவிட்டு,துவைக்காமல் அந்த வேஸ்டியைக் கொண்டு திரை கட்டியது போலிருந்தது திரை.இதற்கிடையில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவனுக்கு செல்போன் சிணுங்க,அதை பேண்டிலிருந்து எடுக்க எழும்பினான்.அவ்வளவுதான் இருதரப்பும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டனர்.அவன் பதறியடித்துக்கொண்டு அமர்ந்தான்.வெற்றி சிரிப்பு எல்லோருக்கும்.அங்கே வில்லன் குரூப்ஸ் ஆளாளுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தனர்.

பின்னர் கோவிலில் லக்ஷ்மிமேன்னை பார்ப்பார் விசால்.எனக்கு பின்னே,

“எல விசாலு இவள தான கல்யாணாம் பண்ண போறானாம்”

“எல மடப்பயல அவதான் தமிழ்நாட்டுக்காரன கல்யாணாம் கெட்ட மாட்டேண்ட்டாள்லா”

“அதுக்கு விசாலு தமிழ் கிடையாதுல்லா,தெலுங்குகாரம்லா”

கப்சிப்…..அதற்குள் “ஏல ஏல மருது” என்று இமான் கரையத்தொடங்கினார்.

“இது கேக்க பழைய பாட்டுமாதி இருக்குல்லா”?

“ரீமேக்கா இருக்கும்”

இவ்வாறாக காட்சிக்கு காட்சி ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டேயிருந்தனர்.

பின்பு விக்ராந்த் வர,பக்கத்திலுருந்த பையனும்,பொண்ணும் ஓவென கத்த தொடங்கிவிட்டனர்.(விஜய் தம்பியாம்..!!). பின்னாலிருந்த குரூப்புக்கு எதுக்கு கத்துறாங்கன்னு புரியல.வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தனர் ஆங்கில படத்தை சப் டைட்டில் இல்லாமல் பார்ப்பது போல.

பஸ் ஸ்டாப்பில் ஒரு காட்சி.லக்ஷ்மி மேனனை கிண்டல் செய்பவர்களை அடித்து விட்டு நிற்பது போல் விசால் நிற்பார்.எனக்கு பின்னே,

“எனக்கென்னமோ அவ விக்ராந்த்தான் கெட்டுவானு தோணுது”

“இருக்காதுல அப்பிடினா பின்ன போஸ்டுல போட மாட்டானுவல்லா”

“போஸ்டுல விக்ராந்து படமும் இருக்குல்லா”

“பாப்போம்”.

திட்டமிட்ட ஆக்சிடண்டில் விசால் அண்ணன் உயிரிழக்கிறார். எனக்கு பின்னே,

“விசாலுக்கு மட்டும் உண்ம தெரிஞ்சிதுன்னு வச்சிக்கோயேன் செத்தான் அவன்”

“தெரிஞ்சாலும் ஒண்ணும் பண்ணா மாட்டான்னு தான் நினக்கேன் அவனே அடிக்க தெரியாமதான விக்ராந்த கூட்டிட்டு வாறான்”

“யாரு விசாலுக்கா அடிக்கத்தெரியாது? சண்டக்கோழி படம் பாத்திருக்கியால மடப்பயல.ஒத்தயில ஓட ஓட விரட்டி வெட்டுவான்.வேணா பாரு கடேசில விசாலு தான் கொல்லுவான் வில்லன”

இவர்கள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்று அறிய முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.சூரியின் காமெடிக்கெல்லாம் எனது இருக்கையை பலம் கொண்டமட்டும் அடித்து ஆர்ப்பரித்தார்கள்.வில்லனை கொல்ல திட்டம் தீட்டுவார் விசால்.அப்போது செல்போனுக்குள் ஒரு கருவியை பொருத்தி பேச்சை ஒட்டு கேட்பதென்பது திட்டம்.எனக்கு பின்னே’

“செல்போன்ல பாம் வைக்கானு நினைக்கேன்”

“இல்லலே! கமல் மாதி ஏதொ பண்ணுவான்னு நெனக்கேன்”

“யப்பா கமல் என்னத்த கிழிச்சான் இப்ப பாரு தலைவரு என்ன பண்றாருன்னு.”

மின்விசிறி ஏதோ ஒரு மூலையில் சுழல வெந்துகொண்டிருந்தேன் உள்ளும் புறமும்.இவர்கள் யார்?புத்தி சுகாதீனமற்றவர்களா?இல்லை வேண்டுமென்றெ செய்கிறார்களா? நான் ஏன் இந்த படத்திற்கு வந்தேன்?அதுவும் இந்த தியேட்டருக்கு ஏன் வந்தேன்? எண்ணங்கள் பின்னோக்கி பயணிக்க இவர்களை சற்று கணம் மறந்திருக்கையில்,லக்ஷ்மிமேன்ன் விசாலுக்கு கிஸ் அடிக்க,அவ்வளவுதான்,என்னமோ இவர்களே செய்துவிட்ட்துபோல் துடித்தனர்.

பின்பு,பாரதிராஜா கூலிப்படையை ஏவி வில்லனை அழிக்க பணம் கொடுப்பார்.கூலிப்படையும் வில்லனை கொல்ல குன்னூர் சென்று தோல்வியுடன் திரும்பும்.வில்லன் ஏவியவனை கொல்ல திட்டமிடுவான். எனக்கு பின்னே,

“பாரதிராஜா செத்தா கத கிடயாதுல்லா!!”

“அதெல்லாம் கொல்ல முடியாது தலைவரு வந்துருவாரு”

“ஆமா விசால் அண்ணனயே கொன்னுட்டானுங்க அப்பன் எம்மாத்துரம்”

“எனக்கென்னமோ பாரதிராஜாவ கொன்னுருவாங்கன்னு தோணுது”

“அது எப்புடில விசால் சும்ம வுட்டுருவானா?” என்று அவன் சொல்லவும் விசால் குறுக்கே பாய்ந்து இருவரை உதைத்து தள்ளுவான்.அவ்வளவுதான் துள்ளி எழுந்துவிட்டார்கள்.

இதயும் தாண்டி “இவ மாருக்கு எந்து வட்டோ?” என்று ஏதோ ஒரு மூலையிலிருந்து குரல் வந்தது.

பாரதிராஜா பிழைக்க நிம்மதியடைந்தனர்.விசால் வில்லங்களுக்கு நடுவே மாட்டிக்கொள்ள பரிதாபப்பட்டனர்.விசால் அனைவரையும் துவம்சம் செய்துவிட்டு மெயின் வில்லனுக்காக காத்திருப்பார்.இருவரும் மோதிக்கொள்ள,வில்லனை அடிக்கும்போது ஆர்ப்பரித்தனர்.விசால் அடி வாங்கும்போது பரிதாபப்பட்டனர்.ஒருவித மரண பயத்தில் தவித்துக்கொண்டிருந்தனர்.கூடவே நானும்..!!

வில்லனை கட்டி பாழும் கிணற்றில் தள்ளிவிட அவர்கள் கண்களில் வில்லனை அழித்த பரவசம் தெரிந்தது,எனக்கு பின்னே,

“கார கிணத்துக்குள்ள ஏத்தி கொன்னுருவான்னு நெனக்கேன்” என்பதற்குள் விசால் நகர்ந்துவிட,

“முடிவு மண்ணு மாதி இருக்கு”என்று சலித்துக்கொண்டனர்.

அவர்களின் முகம் காண ஆவலுடன் நின்றேன்..

கடவுளின் தேசம் என்று மார்தட்டிக்கொண்டு,கம்யூனிச சித்தாந்தம் பேசி,சாராய கடை வாசலில் வரிசையில் நிக்கும் கேரள வாழ் பொது ஜனங்களே!!(ஸாரி அரசாங்கங்களே)

1.இயற்கை எழில் கொஞ்சும் ஆறுகளும்,மலைகளும்,ஏரிகளும் கடவுள் கொடுத்த வரம்.அதை வைத்துக்கொண்டு மற்ற நாட்டினை இழித்தும் பழித்தும் பேசுவானேன்?

2.எங்களது ல,ள,ழ, உச்சரிப்பை எள்ளி நகையாடும் நீங்கள் தமிழை மலையாளத்தில் சம்சாரித்து,அதன் அழகியலை குழிதோண்டி புதைப்பதேன்?

3.வீதிகளில் நான்குபேர் அமர்ந்தாலும் வலுக்கட்டாயமாக அவர்கள் முன் மேடையிட்டு வாய் கிழிய பிதற்றுவதேன் ?

4.அடுத்த நாட்டிற்கு சென்று மற்றவனின் காலை கழுவி குடித்தாவது முன்னேற துடிக்கும் நீங்கள்,தங்கள் நாட்டிற்கு தொழில் செய்ய வருவோரை ஏளனமாக பார்ப்பதேன் ?

5.தேங்காய்,மத்தி மீன்,கப்ப கிழங்கு என்று தங்கள் அருகில் கிடைக்கும் உணவை தினமும் தின்று அழகிலும்,அறிவிலும் சிறந்து விளங்குவதாக சொல்லிகொள்ளும் நீங்கள் ,மற்ற நாட்டவரின் உணவு பழக்கங்களை கெலிக்கூத்தாக்குவதேன் ?

6.ஆட்டோக்காரர்களே!! நாங்கள் செல்லும் இடத்திற்கு வருகிறாயா? என்றால் நீங்கள் செல்லும் இடத்திற்கு எங்களை அழைப்பதேன்?

7.மெத்தப்படித்தவர்கள் என்று மார்தட்டும் நீங்கள் சாலை விதிகளை கடுகளவேனும் மதிக்காததேன்?

8.அடுத்த வீட்டில் யார் புதிதாய் குடிவந்தாலும் நூறு முறையாவது விசாரணை நடத்தி தனி மனித உரிமையை மீருவானேன்?

9.காசு கொடுத்து பொருள் வாங்குவோரிடம் ,கடுகடுவென முகத்தில் எள்ளும்,கொள்ளும்,வெடிப்பானேன்?

10.அரசாங்கத்துக்கு அரை செண்ட் இடம் கொடுக்காத நீங்கள் எங்களுக்கு தண்ணீர் தரமாட்டீர்கள்தான்.ஆனால் காய்கறிகளுக்காக நாக்கை தொங்கலிட்டு அலைவானேன்?