Archive for March, 2014

முருகம்மாள்

களிமண் குழைத்து வீடு கட்டியிருந்தாள்

எருக்க இலை கொண்டு கூரை வேய்ந்திருந்தாள்

ஓடை மணல் பரப்பி தரையாக்கியிருந்தாள்

ஆவாரம்பூ கொண்டு தோரணம் கட்டியிருந்தாள்

மாட்டுசாணம் பிடித்து சாமி சிலை செய்திருந்தாள்

துளசிச்செடி நட்டு தோட்டம் அமைத்திருந்தாள்

நாளை பால் காய்த்து குடி புகவேண்டுமென எண்ணியிருந்தாள்

இன்று பாழாய்ப்போன காய்ச்சலால்

போர்வைக்குள் சுருண்டு கிடக்கிறாள்

வாசல் வழியே முற்றத்தை நோக்குகிறாள்

ஆட்டுக்குட்டி எருக்க இலையை தின்று

புழுக்கை இட்டுக்கொண்டிருந்தது

துடித்துப் போனாள் மழைவந்தால் வீடு ஒழுகுமென்று

எழும்ப முடியாமல் ஒருசாய்ந்து படுத்துக் கொண்டாள்

சிறிது நேரத்திற்கெல்லாம்குருசேத்திரப்போரின்

கடைசி நாளாய் மாறியது முற்றம்

வலது பக்க கண்ணீர் மேடேறி இடது கண்ணுக்குள் நுழைந்து

செவிக்குள் நுழைய எத்தனித்தது

நாளை வகுப்பில் மாரியிடம் என்ன சொல்வாள்?

வீட்டில் குடிபுக முடியாமல் போனதற்கு..

Advertisements

தென்காசியிலிருந்து கொல்லத்திற்கு பேருந்தில் செல்வதென்பது எப்போதும் அலாதி சுகம்.காரணம் இருபுறமும் விண்ணைமுட்டி வளர்ந்துள்ள ரப்பர் மரங்களும்,காட்டு மரங்களும்,சிறு சிறு அருவிகளும்,குளிர்ந்த காற்றின் காட்டு வாசமும் கிறங்கடிக்கும்.அதுவும் பெரிய ஜன்னலுடய கேரள அரசுப்பேருந்தில் பயணிப்பது கயிற்றில் நம்மை கட்டி காற்றில் இழுப்பதை போன்றதொரு அனுபவம். அன்றும் அப்படித்தான் மாலை ஐந்து மணி கேரள அரசுப் பேருந்தில் ஜூனியர் விகடன்,அரசூர் வம்சம் நாவல்,தண்ணீர்பாட்டில் சகிதம் ஏறினேன்.முன் வாசற்படிக்கு பின்புற ஜன்னலோர இருக்கை.அந்த இருக்கையின் ஒரே அசௌகரியம் என்னவென்றால் ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகள் இறங்கியவுடன் நாம்தான் வாசற்கதவை இழுத்து அடைக்கவேண்டும்.இது பல நேரங்களில் ஆர்வமாய் இருந்தாலும்,அன்று வெறுப்பாய் இருக்க காரணம் அரசூர் வம்சம் நாவலின் சுவாரஸ்யம். ஒரு வியாபாரி துளசி தைலத்தை தெர்மோகோலில் ஊற்றி உருக்கி காண்பித்துக் கொண்டிருந்தார்,தெர்மோகோல் உருகுவதைப்போல நுரையீரலில் தங்கும் சளி உருகி வெளிவந்துவிடும் என்று விளக்கம் கொடுத்தார்.(நுரையிரலே கரைஞ்சிருமோ என்றார் ஒருவர் அவருக்கு கேட்காதவாறு)அதுபோக படை,பல்வலி,மூக்கடைப்பு,வருமம் என சகலவியாதிகளையும் போக்கும் அற்புததைலம் என்று நிரூபிக்க முயன்று கொண்டிருந்தார்.இரண்டு மூன்று பேர் வாங்க தயாராகவும்,பேருந்து புறப்படவும் சரியாய் இருந்தது.அவசர அவசரமாய் இரண்டையும் விற்றுவிட்டு கீழிறங்கினார். என்னருகில் ஐம்பதுவயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வந்தமர்ந்தார்.அவர் மலையாளிதான் என்று அவர் தலையை வைத்து ஊகித்துக்கொண்டேன்.அநேகமாக மானிட்டர் அடித்திருக்க கூடும்.ஒரு சிறிய புன்னகையோடு எங்களுக்கிடையேயான உரையாடலை முடித்துக்கொண்டு நாவலினுள் என்னை திணிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன்.சிறிது நேரத்திற்குள் மூழ்கிவிட்டேன். பேருந்து தென்மலை காட்டினூடே சென்று கொண்டிருந்தது.அந்த அணையின் நீரையும்,கரை தழும்ப ஓடும் ஆற்றையும் சிறிது நேரம் ரசிக்கலாம் என்றெண்ணி புத்தகத்தை மூடிவிட்டு நிமிர்ந்தேன்.முதியவர் வாயெல்லாம் கரை படிந்த பல்லாக காட்சியளித்தார்.பல் தெரியாமல் சிரித்துவிட்டு ஜன்னலை நோக்கி முகத்தை திருப்பிக் கொண்டேன்.அவரிடம் பேசாததற்கு முதற்காரணம் நாவலின் சுவாரஸ்யம்.இரண்டாவது மிகமுக்கியமான காரணம் அவர் குடித்திருந்தார். அதுவும் சேட்டன் மாரு குடிச்சிட்டு பேச ஆரம்பிச்சா ஒண்ணு சேட்டனை நம்ம அடிக்கணும் இல்லனா நம்மள பேசியே கொன்னுருவானுங்க. ஒருமுறை கோழிக்கோடு பீச்சில் நடந்த சம்பவம் கண்முன்னே நிழலாடியது.அதை எண்ணிக் கொண்டிருக்கும்போதே தென்மலை கழிந்து புனலூர் நோக்கி விரைந்து கொண்டிருந்தது பேருந்து.இந்தமுறை அவர் முந்திக் கொண்டார். “தம்பி எங்க போவணும்?என்றார்.வலையை விரிக்கிறானே என்றெண்ணி “கேலிகட் போகணும்”என்றேன். “ஓ கோழிக்கோடா? அது சரி.பின்ன கொல்லத்திந்து எப்டி போவும்? “டிரெயின்ல புக் பண்ணிருக்கேன்” என்று கூறி உரையாடலை துண்டித்துவிட்டு புத்தகத்திற்குள் புதைத்துக் கொண்டேன் என்னை. சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு தமிழ்க்குரல் இரண்டு இருக்கைகள் பின்னாலிருந்து கேட்டது. “எர்ணாகுளம் போவணும் சேட்டா.முன்ன பின்ன வந்ததில்ல.கொல்லத்தில எறங்கி எப்டி போறதுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்” “தெங்காசிந்து ஆறு மணிக்கு டேரக்ட் பஸ் உண்டல்லோ எர்ணாகுளத்துலேக்கி” “அய்யய்யோ பஸ் ஸ்டாண்டுல வச்சி ஒரு பயகூட சொல்ல மாட்டேன்னுட்டானுவள.இப்ப என்ன பண்ண புனலூர்ல இறங்கிறவா? “எந்தாலும் கேறில்ல.கொல்லத்திந்து இஸ்டம்போல பஸ் உண்டு.அவட போயா பின்ன பஸ்ஸு சுகாய்ட்டு கிட்டும்” “எனக்கு ரொம்ப பயமா இருக்கு சேட்டா” பொறுக்கமாட்டாமல் பின்னால் திரும்பி பார்த்தேன்.வெள்ளை சட்டை,வெள்ளை தலப்பா,தாடி சகிதம் அரபிக் சேட் போல காட்சியளித்தார் தமிழ் குரலுக்கு சொந்தக்கார்ர்.மலையாள குரலின் வழுக்கத்தலை மட்டும் தெரிந்தது.விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிக்ஷாவிற்கு உறவினறாய் வரும் அந்த குள்ளமான மனிதரை கற்பனை செய்து கொண்டேன். புன்சிரிப்புடன் முன்னே திரும்புகையில் பெரியவர் பேச்சு கொடுத்தார்.அவரும் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார். “அங்க எந்தா ஜோலி” “இஞ்சினியரா இருக்கேன்”என்று சொல்லி முடிப்பதற்குள், “தண்ணி வேணும்”என்றார். பாட்டிலை எடுத்து கொடுத்துவிட்டு ஜூனியர் விகடனை திறந்து கழுகார் பக்கத்துக்கு தாவினேன்.கருணாநிதி ஒரு பக்கம் முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்துவிட்டு, “இவமாரு நல்ல பைசா உண்டாக்கியல்ல” என்றார். “தெரியல சேட்டா” என்றேன். “சோனியாவுக்கு கலைஞர்னா உயிரு”என்றார். “ஓ!அப்படியா”அதெல்லாம் எனக்கு தெரியாது சேட்டா” என்பதற்குள் “பின்ன எந்தா இஞ்சினீரு படிச்சு”?என்றார் உச்ச டெசிபலில். எனக்கு அவமானமாகி விட்டது.எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள் என்றவுடன் அவரிடம் பேச்சு கொடுக்காமல் அடுத்த பக்கத்திற்கு தாவினேன்.இப்போது அவராக ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தார். புனலூர் நிறுத்தத்தில் இவர் இறங்கிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.எல்லாம் வல்ல இயேசு கைவிடவில்லை.புனலூரில் இறங்கிவிட்டார்.இறங்கும்முன் பின்னாலிருந்த தமிழ்க்காரரிடம் என்னருகில் வந்து அமரவேண்டும் என்றும்,நான் கோழிக்கோடு செல்வதால் அவரை எர்ணாகுளத்தில் இறக்கி விட்டுவிடுவேன் என்றும் கூறினார்.அவரும் ஏதோ கேரள லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு அடித்ததுபோல் தலையெல்லாம் பல்லாக தெறித்து ஓடிவந்து என்னருகில் அமர்ந்தார். புனலூரிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்தார். “தம்பி வணக்கம்.எம்பேரு மீரான் சாஹிப்.சவுதியில மதகுருவா இருக்கேன்.கடைய நல்லூர் சொந்த ஊரு.15 வருசத்துக்கு முன்னால சவுதி போனேன்.அப்டியே அங்கயே செட்டிலாயிட்டேன்.எர்ணாகுளத்துல நண்பர் ஒருத்தர் கூப்டிருந்தாரு.அதான் போய்ட்டு இருக்கேன்” என்று எனது பதிலை எதிர்பார்க்காமலே சொல்லி முடித்திருந்தார். “ஓ!சரி சரி! என்றேன் சுவாரஸ்யமற்றவாறே. தம்பிக்கு எந்த ஊரு? எங்க போறிய? என்றார். “நான் கோழிக்கோடு போறேன்.சொந்த ஊரு தெங்காசி பக்கத்துல  மடத்தூர் அப்டின்ற கிராமம்”. “ஓ அப்படியா? தம்பி எனக்கு இங்க உள்ள ரூட்டு ஒண்ணுமே தெரியாது.மலயாளமும் அரகுற.நீங்கதான் எப்டியாது பெரியமனசு பண்ணி என்னிய எர்ணாகுளம் பஸ்ஸுல ஏத்திவிடணும்”. “அது ஒண்ணும் பிரச்சின இல்ல சார்.நீங்க கொல்லம் பஸ் ஸ்டாண்டுல இறங்கின உடனே அங்க ஒரு டிக்கெட் கவுண்டர் இருக்கும்.அங்க போய் கேட்டாலே சொல்லிடுவாங்க எப்ப பஸ் வரும்னு”. “அதுக்கில்ல தம்பி இவங்கள நம்ப முடியாது.நீங்க என்ன பஸ்ஸுல ஏத்திவிட்டாதான் எனக்கு நம்பிக்கயே வரும்”. “சரிங்க எனக்கு ஒன்பதரை மணிக்கு டிரைனு.நம்ம பஸ் போய்சேர எப்டியும் எட்டரை ஆய்டும்.அங்க இருந்து ஸ்டேசன் போக ஒரு 15நிமிஸமாது ஆகும்.அதனால அந்த அரைமணி நேர கேப்புல பஸ் வந்தா உங்கள ஏத்தி விட்டுடுவேன்”. “தம்பி நீங்கதான் எப்டியாது பெரியமனசு பண்ணணும்”. (பெரியமனசுனா இவரு பின்னாலே எர்ணாகுளம் வர போகணும்போல) “அது ஒண்ணும் பிரச்சின இல்ல சார்.எப்பிடியும் பஸ் கிடைக்கும்” என்று ஜன்னலை நோக்கியவாறே கூறினேன். வீட்டைவிட்டு கிளம்பும்போது எதிரே வந்த ஆட்டுக்குட்டிமேல் கோபமாய் வந்தது.அதற்குள் கொட்டாரக்கர அடைந்திருந்தோம். “தம்பி இந்த ஊர்ல பெரிய மசூதி உண்டாம்லா” “தெரியல ஸார் எனக்கு பொது அறிவு கொஞ்சம் வீக்கு” “கோழிக்கோட்டிலதான் பெரிய பெரிய மசூதிலாம் பாத்திருக்கேன்” என்று வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் இழுத்து விட்டுக்கொண்டிருந்தேன்.ஏனென்றால் ஒரு காந்தகண்ணழகி கொட்டாரக்கரயில் ஏறினாள்.எல்லா சீட்டும் நிறைந்திருந்ததால் வாசலை நோக்கியவாறு நின்று கொண்டாள்.அவளை நொடிக்கொருமுறை பார்க்கவேண்டும் என்பதற்காகவே அவரிடம் அவ்வாறு கூற நேர்ந்தது. “ஆமா தம்பி உலகம் பூரா பாத்தியனா அல்லாவ தொழுறவங்கதான் ஜாஸ்தி” என்று பெருமிதப்பட்டார். “ஆமா உண்மதான் ஸார்” என்றேன். “தம்பி நீங்க கண்டிப்பா குர்ரான் படிக்கணும்.அல்லாவோட கோட்பாடுகள புரிஞ்சிக்கணும்” என்றார். “கண்டிப்பா ஸார்.எனக்கு எல்லா மதமும் ஒண்ணுதான்.நான் இந்துவா இருந்தாலும் இன்னும் பகவத்கீதலாம் படிச்சதில்ல.ஸ்கூல்ல புதிய ஏற்பாடு படிச்சிருக்கேன்.அதில பாத்தீங்கனா “இதோ மலடிகள் பாக்கியவதிகள் என்றும்,பால் கொடாத முலைகளும் பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பாக்கியமுள்ளவை என்று சொல்லப்படும் நாட்கள் வரும்” என்ற லூக்கா 23ஆம் அதிகாரம்,29ஆம் வசனத்தை பலமுறை கிண்டல் பண்ணிருக்கோம். “தம்பி கிண்டல் பண்றது தப்பு.அல்லா மன்னிக்க மாட்டார்”. “அது ஸ்கூல்ல அறியாத வயசுல பண்ணினது ஸார்.எனக்கு எல்லா மதத்து மேலயும் நல்ல மரியாத இருக்கு” என்றேன். “தம்பி நீங்க வேணூம்னா ஏங்கூட எர்ணாகுளம் வாங்களேன்.உங்களுக்கு குர் ஆன் வாங்கி தர்றேன்” என்றார். பேச்சின் விபரீதம் புரிந்தவாறே காந்தகண்ணழகியை பார்த்தேன்.தகவல் தொடர்புக்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டும் தொலைவுவரை தெரியவில்லை.ஓகே இது வேலைக்காவாது.புக்க ஓபன் பண்ணீற வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டே,”இல்ல ஸார் எனக்கு கோழிக்கோடிலே கிடைக்கும் வாங்கிக்கிறேன்” என்று ஜன்னலினூடே தெரியும் ரப்பர் மரங்களை பார்த்தவாறே கூறிவிட்டு அரசூர் வம்சம் நாவலை தொடர்ந்தேன். சோம்பேறி அரசன் வேலைக்காரியை புணர்ந்து கொண்டிருந்தான். அப்படியே பேச்சை நிறுத்திக்கொண்டார்.கண்கள் புத்தகத்திலிருந்தாலும் புத்தி காந்த்கண்ணழகியையே சுற்றியது.அந்த பக்கம் திரும்புனாலே இந்த ஆளு பேச ஆரம்பிச்சிருவான்.என்ன பண்றது என்ற யோசித்தவாறே பக்கங்களை புரட்ட கொல்லம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது பேருந்து. காந்தகண்ணாழகி தரிசனம் பெற்றுவிட வேண்டும் என்று அவசர அவசரமாக இறங்கினேன்.அவளோ அதிலும் அவசரமாக இறங்கி ஓடினாள்.சரி போகட்டும் என்று அவளை தொடராமல் சற்று தொலைவில் நின்று கொண்டேன்.மறையும் இடத்தை அடைந்தவுடன் திரும்பிபார்த்து, உதடு பிரியாமல் சிரித்துவிட்டு நொடி நேரத்தில் மறைந்தாள்.ஆஹா பின்னாலேயே போயிருக்கலாமோ என்று நொந்துகொண்டேன்.இதுவும் கடந்து போகும் என்று மனசை தேற்றிக் கொண்டு அந்த சிரிப்பை மட்டும் மனதில் இருத்திக்கொண்டேன். திரும்பினால் நம்ம பாய் திருவுருவமாய் நின்றுகொண்டிருந்தார். “என்ன தம்பி என்ன வுட்டுட்டு ஓடிறிவியளோன்னு பயந்துட்டேன்.கொஞ்சம் பஸ்ஸு வருமான்னு கேட்டு சொல்லுங்க தம்பி”என்றார். வாங்க என்று அவரை அழைத்துக் கொண்டு என்கொயரி கவுண்டரில் விசாரித்தேன்.மைசூர் சூப்பர் பாஸ்ட் எட்டே முக்கால் மணிக்கு என்றனர்.அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறே நிமிர்ந்தேன். “தம்பி கொஞ்சம் தப்பா நினக்க்கலனா என்ன கொஞ்சம் பாத்ரூம் வர கொண்டுவிட்டுருங்க ப்ளிஸ்” என்றார். “ஸார் அதோ இருக்கு பாருங்க.நீங்க போய்ட்டு வாங்க நான் இங்கயே வெயிட் பண்றேன்” என்றேன் கடுப்புடன். “அதுக்கில்ல தம்பி நீங்க போய்டுவீங்களோன்னு பயமா இருக்கு.எங்கூட கொஞ்சம் வந்தா எனக்கு கொஞ்சம் சமாதானமா இருக்கும். விட்டா இந்த ஆளு பேண்டு ஜிப்ப கூட நம்மள கழட்ட சொல்லுவான் போல என்றெண்ணியவாறே, “இல்ல ஸார் எனக்கு யூரின் வரல.நான் வெயிட் பண்றேண்.நம்புங்க”என்றேன் கடுகடுப்புடன். சமாதானம் ஆகாதவாறாய் திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்று,அடுத்த இரண்டாவது நிமிடம் வந்துவிட்டார்.நல்லவேளையாக மைசூர் சூப்பர் பாஸ்டும் வந்து சேர்ந்தது.அதைக்கண்டவுடன் அவசர அவசரமாய் ஓடி ஏறி கூட்டத்தினுள் மறைந்தே போய்விட்டார்.நானும் குதித்து குதித்து எல்லா ஜன்னல்வழியும் பார்த்தேன்.காணவேயில்லை.ஒருவேளை சீட்டுக்கு அடியில் சென்று படுத்திருப்பார் என்று எண்ணியவாறே ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆட்டோவில் ஏறவும் பேருந்து என்னை கடக்கவும் சரியாய் இருந்தது.அப்போதுதான் போர்டை கவனித்தேன்.வழி எர்ணாகுளம் அல்ல கோட்டயம்.அது எர்ணாகுளம் போகாது என்பதை ஆட்டோ டிரைவர் உறுதிபடுத்தினார்.ஏனோ அவரைப் பற்றிய நினைப்பாகவே இருந்தது. ரயில்வே ஸ்டேசனை பத்து நிமிடத்திற்குள் அடைந்தேன்.எத்தனை விதமான மனிதர்கள்.இறவனின் படைப்பை எண்ணி அதிசயித்தவாறே பிளாட்பார்மிற்குள் நுழைந்தேன். “யாத்திரகாரரு ஸ்ரதிக்குக.டிரெய்ன் நம்பர் ஒண்ணு ரெண்டு பூஜ்ஜியம் ஏழு ஐந்து திருவனந்தபுரத்திந்து மங்களாபுரம் வர போவுன்ன மங்களுர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் அல்ப சமயத்தினுள்ளில் மூணாமவது பிளாட்பார்மில் எத்தி சேருகயாணு” என்ற பெண்ணின் குரல் வரவேற்றது.

மாசிலா பாட்டி

உறவினர் ஊர்க்காரர்

வாயெல்லாம் புன்னகையாக

சரசு மொவனாய்யா நீ என்றவாறே

எப்போது சென்றாலும் அந்த கயிற்றுக் கட்டிலில்

பிடித்து இழுத்து அமர்த்தி விடுவாள்

நான்கைந்து ரேசன் சேலைகள் விரிக்கப்பட்ட கட்டிலில்

பழைய துணிகளை மூட்டையாய் கட்டி தலையணை செய்திருப்பாள்

ஒரேயொரு மகளையும் கட்டிக் கொடுத்தபின் அந்த ஒற்றை அறை குடில்தான்

சகலமும் அவளுக்கு

மாதத்திற்கொருமுறை மகள் வந்து கொடுக்கும் பணத்தில்தான்

கஞ்சி காய்ச்சுவதாக கூறுவாள்

சேலையில் முடிந்து வைத்திருக்கும் சில நாணயங்களை தருவாள்

முட்டாய் வாங்கி சாப்பிடவேண்டி

ஆறு வருடங்கள் கழித்து

ஊருக்கு சென்றிருந்த ஒருநாளில்

குளத்துக்கரை மேட்டில் முறிக்கப்பட்ட கட்டிலும்,நான்கைந்து ரேசன் சேலைகளும்

ஒரு துணிமூட்டையும் கிடந்தன

மாசிலா பாட்டியாய் இருக்கக் கூடாதென்ற என் எண்ணத்தை

வீட்டிற்கு வந்ததும் பொய்யாக்கினாள் அம்மா

மீண்டும் ஒருமுறை குளத்துக்கரை நோக்கி சென்றேன்

யாரோ விறகுக்கு கட்டில் காலை உடைத்துக் கொண்டிருந்தார்கள்

எருக்கஞ்செடியில் படர்ந்து காற்றிலாடியது சேலை

ஓடிவந்து அவள் குடிசையை பார்த்தேன்

ஒரு நாய் குட்டியிட்டு முனங்கிக் கொண்டிருந்தது

மனதின் சுமை ஏனோ இரைப்பையின் வாசலையும்

அடைத்து விட்டிருந்தது இரு நாட்களாய்..!!

ஊருக்கு கிழக்கே சுடலைமாடனுக்கு சாத்தி வைக்கப்பட்டிருந்த
வீச்சரிவாளின் சிறுவடிவமே அந்த புருவம்

இரண்டும் பட்டை தீட்டப்பட்டிருந்தன

கோடையில் வறண்டு கிடக்கும் குளத்து கரம்பல்களுக்கிடையில்
வைக்கப்பட்ட பிளந்த வெள்ளரி பழத்தையொத்த சிரிப்பு

வெள்ளரி விதையின் சிறுவடிவம்தான் அந்த இதழ்கள்

நகரும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் காணக்கிடைத்த தரிசனம்
ஒரு நொடியை மூன்றாய் பிரித்தால் அதன் ஒருபாக நேரமே நீடித்தது

ஏனோ அந்த புருவங்கள் மட்டும் வெகுநாட்களாய் துரத்திக் கொண்டேவந்தன

சுடலைமாடனுக்கு வீச்சருவாள் சாத்துவதாக வேண்டிக்கொண்டேன்..!!

Image

பேஸ்புக்கில் விநாயக முருகன் பரிந்துரைத்த 100 புத்தகங்களில் முதலிடத்தில் ஆழி சூழ் உலகு இருந்ததால் என்னதான் இருக்குன்னு பார்ப்போம் என்று வாங்கி வாசித்து முடித்தேன்.அவர் கொடுத்த இடம் சரி என்றே படுகிறது.

1985 ல் கடலில் கோத்ராவும்,சூசையும்,சிலுவையும் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது படகு உடைந்து ஒரு சிறிய மரத்துண்டை பிடித்தவாறு மிதப்பதாக கதை ஆரம்பித்து,முக்கால் நூற்றாண்டு பின்னோக்கி நகர்கிறது.

கதையின் முக்கிய கதாமாந்தர்கள்- காகு சாமியார்,கோத்ரா,தொம்மந்திரை,சிலுவை,சூசை,சந்திரா,டீச்சர் மற்றும் ஜஸ்டின்.மீன் பிடிக்கும் பரத மக்களின் வாழ்க்கைமுறை அவ்வளவு நேர்த்தியாக நம் கண்முன்னே காட்சிகளாய் விரிகிறது.ஆமந்துறையின் ஒவ்வொரு தெருவையும்,ஒவ்வொரு வீட்டையும்,ஒவ்வொரு மனிதனையும் கதைக்குள் நேர்த்தியாய் புகுத்தி நம்மையும் ஆமந்துறையின் ஒரு உறுப்பினராய் மாற்றுகிறார் ஆசிரியர்.காகு சாமியாரின் மீனவ மக்களின் முன்னேற்றம் குறித்த பணி வியக்க வைக்கிறது.

சித்தியுடன் உறவு கொள்வது,டீச்சருடன் கள்ள தொடர்பு,ஜஸ்டினின் காம வேட்கை என உறவு சிக்கல்களை கையாண்ட விதம் அருமை.இன்றும் கூட இந்த கதையில் வரும் சந்திராக்களும்,டீச்சர்களும் ஊரில் உலவுவதை கண்டிருக்கிறேன்.அதை கதைக்குள் அப்படியே ஆபாசமில்லாமல் அவர்களின் கொச்சை மொழியிலேயே விவரித்திருப்பது கதையுடன் ஒன்ற செய்கிறது.(சில பகுதிகளை படிக்கும்போது கால்மேல் கால் போட வேண்டியிருக்கிறது.ஹி ஹி ஹி..) நாடார்கள் எப்படி அதிகாரத்தை கைப்பற்றி தொழிலுக்கு போட்டியாகிறார்கள் என்று விரிவாக அலசப்படுகிறது.

தொம்மந்திரையின் மீன்பிடிக்கும் திறன் வியக்கவைக்கிறது.கொழும்புக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக பரிமாற்றம்,தூத்துக்குடி துறைமுக உருவாக்கம்,கிறிஸ்தவ மதத்திற்கு  மாறும் பரதவர்கள்,இரு ஊர்களுக்கிடையேயான பகை என பரந்து விரிந்து கதை பயணிக்கிறது.

கோத்ராவும்,சூசையும் கடலில் பிரியும் பொழுது இமைகள் நமத்துப் போவதை தடுக்க முடியவில்லை.குரூஸ் சொல்வதைப்போல தியாகத்தால் மரணத்தை வெல்கிறார்கள் கோத்ராவும்,சூசையும்..கனத்த இதயத்துடன் பல சிந்தனைகளை விதைத்தவாறே கதை முடிவடைகிறது..!!

அவசியம் வாசித்து கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான நாவல்..!!