Archive for April, 2014

எனது முதல் சிறுகதை சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது.சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..

 

http://solvanam.com/?p=32691

Advertisements

எனக்கு விபரம் தெரிந்தநாள் முதல் எங்கள் ஊருக்கு சீப்பு,கண்ணாடி,பொட்டு,வளையல்,ஜடைமாட்டி,கம்மல்,கழுத்துபாசி,கண்மை,பெண்களின் உள்ளாடை,நைட்டி என்று பெண்கள் சமாச்சாரங்களை தேடிப்பிடித்து விற்க வருபவர்தான் குறும்புக்கார இளைஞர் பம்பக்கொட்டு தாத்தா.அவரது பெயர்க்காரணம் சொல்லாவிட்டால் இந்த சமூகம் பழித்து பேசும் என்பதால் முதலில் அதை கூறிவிடுகிறேன்.

அவரது முதல் அடையாளமே தளதளக்கும் தலைமுடிதான்.ஜில்லென்று ஒரு காதல் படத்திலுள்ள ஜோதிகாவின் சிகையோடு அவரது சிகையை ஒப்பிட்டால் அது மிகையாகாது.அந்த கருப்பு,வெள்ளை கலந்த நீண்ட கூந்தலை விளக்கெண்ணெய் தேய்த்து.உச்சி வகுடெடுத்து சீவியிருப்பார்.கூந்தலின் மடிப்பு கலைந்து இதுவரை நான் பார்த்ததில்லை.அதுவும் பின்புறம் கூந்தல் முடியும் இடத்தில் மேல்நோக்கி சுருண்டு நிற்கும் அந்த சுருள்முடி பாகவதரை நினைவூட்டும்.சட்டை காலர் அழுக்காகாமலிருக்க கைக்குட்டையை இலகுவாக மடித்து காலரில் வைத்திருப்பார்.

எங்கள் ஊரின் நுழைவுவாயிலான பாலத்தில் நுழைந்தவுடன் கையில் வைத்திருக்கும் சிறுகொட்டை அடிக்கத் தொடங்கிவிடுவார்.வளர்ந்த கூந்தலை பம்பை என்று கிராமப்புறங்களில் அழைப்பர்.பம்பையும் கொட்டும் இணைந்து அவருக்கு “பம்பக்கொட்டு தாத்தா” என்ற பெயராகியது.

அவரது மற்றொரு அடையாளம் சைக்கிள்.டயர் ரிம்முக்கு கருப்பு,சிவப்பு கலந்து வண்ணம் தீட்டியிருப்பார்.இருபக்க மட்காடுகளிலும் கலைஞர் சிரித்துக் கொண்டிருப்பார்.பிய்ந்துபோன இருக்கையில் சாக்கு வைத்து கட்டியிருப்பார் பிருஸ்ட்த்தை அழுத்தாமலிருக்க.இரண்டு கைப்பிடியிலும் பிய்ந்துபோன ஒலிநாடா சுருள் தொங்கிக்கொண்டிருக்கும்.பெரிய அகலமான பின்பக்க இருக்கையில் கருப்பு,சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட பெரிய மரப்பெட்டி கட்டப்பட்டிருக்கும்.கலைஞரின் வெறித்தனமான அபிமானி என்பதை வேஸ்டி,துண்டு,சைக்கிள் என எல்லாவற்றிலும் வெளிப்படுத்துவார்.

அவரின் மிகப்பெரிய பலம் எல்லோரிடமும் அன்னோன்யமாக பேசுவது.எல்லோரது பெயரும் தெரியும்.பெண்களை “டீ” போட்டுதான் கூப்பிடுவார்.அவர்களும் அதை ரசிப்பர்.அதிலும் புஸ்பம் அத்தையை,

“ஏடீ புஸ்ஸுபம் கண்டங்கரேன்னு இருக்கிய இந்த பவுடரு கிவுடரு வேங்கி பூசேன்.அந்த முருகம்பயல் பெறவு உங்கிட்டேயே தான் சுத்துவான்”

“ம்க்கும்..ஏற்கெனவே மூணுபிள்ள ஆயிட்டு.இதுல இது ஒண்ணுதான் குற”என்று கூறியவாறே அவளும் வாங்கிக் கொள்வாள்.

அப்படியே ஒவ்வொருவரிடமாய் வழக்களந்து செல்லச் செல்ல கூட்டம் கூடிவிடும்.அவரின் நையாண்டிப் பேச்சை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் கூடும்.ஆளு பயங்கரமான வில்லன்.பெண்களை நோட்டமிட்டவாறே உள்ளாடை அளவை சொல்லிவிடுவார்.அந்த அளவுக்கு ஜகஜால கில்லாடி.அதுவும் சிலபேரிடம்,

“இந்த கோட்டிக்கார சிறுக்கிக்கு தொங்கி போச்ச.இனும எங்கெ இந்த மாடசாமி பய ஏத்து பாப்பான்.இத வேங்கி போடுடீ நல்லா விளஞ்ச கொய்யாக்காமாதி ஆவும்”

“உம்மெல்லாம் கட்டிக்கிட்டு அந்த கிழவி என்னபாடு படுதோ?”என்று தலையில் அடித்தவாறே செல்வாள் அந்தப் பெண்.

வாரத்திற்கொருமுறை தான் விஜயம் செய்வார்.ஒரு நாளைக்கு இரண்டு ஊர் வீதம் சுற்று வட்டார பகுதி முழுவதையும் கவர்ந்து விடுவார்.குட்டி குழந்தைகளுக்கு இலவசமாக அவரே கண்மை திட்டுவார்.இளங்குமரிகளுக்கு எப்படி தங்களை அழகுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று டிப்ஸ் கொடுப்பார்.ஆண்களிடம் அவர்களது தொழில் பற்றி விவாதிப்பார்.கிட்டத்தட்ட எல்லோர் வீட்டிலும் ஏதாவது  ஒரு ஆகாரம் அருந்திவிடுவார்.

கல்லூரிக்கு படிக்கச் சென்ற நாள்முதலே அவரை பார்ப்பது அரிதாகிப் போய்விட்டிருந்தது.கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது அவரைப் பார்த்து. அடிக்கடி அவரைப்பற்றி நினைத்துக் கொள்வேன்.ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும் போதும் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணியவாறே மறந்துவிடுவேன்.இந்தமுறை சரியாக நினைவில் வைத்துக் கொண்டு பக்கத்து ஊரிலிருக்கும் அவரது இல்லத்திற்கு சென்றேன்.

முற்றத்தில் கிடந்த நார்கட்டிலில் படுத்தவாறே விசிறிக் கொண்டிருந்தார்.தோல் சுருங்கி எலும்புடன் ஒட்டி உருகிப்போயிருந்தது.தலைமுடி அப்படியே இருந்தது மடிப்பு கலையாமல்.அவருக்கு என்னை துளியும் அடையாளம் தெரியவில்லை.அப்பா பெயரையும் ஊர் பெயரையும் சொல்லவும் நினைவுபடுத்திக் கொண்டார்.எல்லோரையும் விசாரித்து விட்டு,ஐந்து வருடங்களாக முடக்குவாதத்தால் நடக்க முடியவில்லை என்றும்,வியாபாரத்திற்கு செல்லமுடியவில்லை என்றும் கூறினார்.வண்ணம் உரிந்து,கலைஞர் பாதியாகி துருப்பிடித்து வீட்டின் சந்தில் கிடந்தது அந்த சைக்கிள்.ஏனோ மனது கனத்து கிடந்தது.வீட்டிற்குள் கிடந்த பாட்டியின் கையில் நூறு ரூபாயை திணித்தவாறே விடைபெற்றேன்.

ஓகே மெஸ்

Posted: April 18, 2014 in அனுபவம்

என்னதான் கடவுளின் தேசம் சாத்தானின் தேசம் அப்படின்னு பீத்திக்கிட்டாலும் திருப்தியா சாப்பிடறதுக்கு ஒரு உருப்படியான ஹோட்டல் கூட கிடையாது இந்த கோழிக்கோடு மாநகர்ல.இங்க இருக்கவங்க எல்லாம் கோழிக்கோடு பிரியாணி உலக பேமஸுன்னு சொல்லிக்கிறாங்க.ஆனா பாத்தீங்கன்னா கொஞ்சூண்டு மசலாவையும்,கோழிக்காலையும் நெய் சோத்துக்குள்ள புதைச்சு வச்சு தருவானுங்க.சரி எப்படியும் கொடுத்துவிட்டு போகட்டும்.சாப்பிடவாவது நல்லா இருக்கா அப்படின்னா நெய் சோத்துல சர்க்கரையை அள்ளிப்போட்டு தின்ன மாதிரி  இருக்கும்.

புண்ணியத்துக்கு காலையிலயும் ,மதியமும் எங்க ஆபீஸ்லேயே சாப்பாடு போட்டுடுவாங்க.காலைக்கு கப்ப,கடலை,கஞ்சி,சக்க கூட்டு,சம்மந்தி,மத்தி மீனுன்னு சும்மா ரணகளமா இருக்கும்.ஆனா பத்து மணிக்குதான் ரெடியாகும்.மதியத்துக்கும் பொன்னி அரிசி சோறு,மீன் குழம்பு,சாம்பார்,கூட்டு,அப்பளம்,மோர்னு திருப்தியா இருக்கும்.

எல்லா நாளும் இந்த நைட் சாப்பாடுதான் நமக்கு பிரச்சினை.புரோட்டாவ தவிர உருப்படியா ஒண்ணும் இருக்காது.அதுவும் புரோட்டா ஆறு ரூபான்னா அதுக்கு கறி அறுபது ரூபாயா இருக்கும்.ஒரு பத்து கிலோமீட்டர் பைக்ல போனா ஒரு தள்ளுவண்டிகாரன் சுட சுட இட்லி,தோசை போடுவான்.அங்க ஒரு தமிழ்காரன் மாஸ்டர்ன்றதால கொஞ்சம் நம்ம ஊரு டேஸ்ட்ல இருக்கும்.

அங்கேயும் ரெண்டு குரூப்பா இருப்பாங்க.ஒரு நாள்விட்டு ஒரு நாள்தான் அந்த தமிழ் குரூப் வருவாங்க.விதியேன்னு மத்த நாளைக்கெல்லாம் புரோட்டாவ கொட்டிக்கிட்டு கிடக்கணும்.ஆனா ஒருகாலத்துல நைட் புரோட்டா சாப்பிடலைனா தூக்கமே வராது.எப்படியாவது ஹாஸ்டல்ல ஏறி குதிச்சு போய் ருசி ஹோட்டல்ல ஒரு நாலு புரோட்டாவ பிச்சி உள்ள தள்ளினாதான் சாப்பிட்டமாதிரியே இருக்கும்.அது ஒரு பெரிய கதை.அதை அப்புறம் பார்க்கலாம்.இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்.

 இப்படி ஒரு பொன்னான சமயம் பார்த்து சென்னைல ஹோட்டல்ல மாஸ்டரா இருந்த இங்க உள்ள ஒருத்தரு ஹோட்டல் ஆரம்பிச்சாரு. கொத்து புரோட்டாதான் அந்த ஹோட்டலோட அடையாளம்.அதுவும் ரொம்ப கேவலமா இல்லாம கொஞ்சம் சுமாரா கேவலமா இருந்ததால அங்கேயே சாப்பிட ஆரம்பிச்சிட்டோம்.

எவ்வளவு நாளைக்குத்தான் மதியம் ஆபீஸ்லயே கொட்டிக்கிறதுன்னு நேற்று வெளியபோய் சாப்பிடலாம்னு கிளம்பினோம்.எல்லாரும் ஓகே மெஸ்ஸ புகழ்ந்து தள்ளுனாங்க.நானும்கூட பலதடவை அந்த வழியா பைக்ல போகும்போது பார்த்திருக்கிறேன்.ஏகப்பட்ட பைக்,கார்னு ஹோட்டலுக்கு முன்னாடி திருவிழா மாதிரி இருக்கும்.ஆனா அந்த ஹோட்டல் மதியம் மட்டும்தான்.

பைக் எடுத்துட்டு கிளம்புனா பயங்கர டிராபிக்.ஒரு இடத்துல யூ டர்ன் எடுத்து திரும்பணும்.முன்னாடி ஒரு கார்க்காரன் தவண்டு தவண்டு போய்க்கிட்டிருந்தான்.அவனும் யூ டர்ன் எடுக்க காரை திருப்பினான்.விட்டா இறங்கி தள்ளிட்டுதான் போவான் போல.நானும் பொறுத்து பொறுத்து பொங்கி எழுந்து வண்டியை அணைத்து விட்டேன்.அவன் மெதுவா திருப்பி போனதுக்கு அப்புறம் தான் கிளம்பினேன்.இங்க நம்ம டென்சன அவங்கிட்ட காட்டினா என்ன ஆகும் அப்படின்றத இப்ப சொல்ல முடியாது. அது ஒரு தனி கதை.

ஒருவழியாக ஹோட்டலுக்குள்ளே போயாச்சு.கைகழுவும் இடத்தில் ஆறு,ஏழு பேர் குளித்துக் கொண்டும்,பல்தேய்த்துக் கொண்டும் இருந்தனர்.அவ்வளவு சுத்தம்.பத்து நிமிடம் காத்திருந்து கைகழுவி விட்டு இருக்கையில் அமர்ந்தேன்.எல்லோரும் சொன்னதுபோல் இல்லாமல் அது கொஞ்சம் சுமார் மொக்கையாக இருந்தது.ஒரு வறுத்த மீனும்,சோறும் வாங்கிக்கொண்டேன்.நான் சாப்பிட்டு முடிக்கும் தருணம் எதிர் சீட்டில் வந்து அமர்ந்தார் ஒரு மத்திய வயதுக்காரர். நமக்குன்னே தான் எங்க போனாலும் வந்து மாட்டுவாங்களே சாவுகிராக்கிங்க. அவருடன் வந்த மற்ற நால்வரும் வேறொரு இருக்கையில் அமர்ந்துவிட்டனர்.தனித்துவிடப்பட்ட அவர் மற்றவர்களை வெறியோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

பணியாள் வந்து எந்த மீன் வேண்டும் என்று கேட்டான்.அவன் முறைத்துவிட்டு,இது என்ன ரேட்,இது என்ன ரேட் என்று எல்லா மீனையும் விசாரித்துவிட்டு,கடைசியாக பத்து ரூபாய் மத்தி மீன் ஒன்று வாங்கி கொண்டான்.வாங்கி முடித்ததும் கையில் தூக்கி “பத்து ரூவா பத்து ரூவா”என்று கூவ ஆரம்பித்துவிட்டான் மற்றவர்களை நோக்கி.எல்லோரும் இப்போது எங்கள் டேபிளை நோக்கிக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கும் அதே மீனைக் கொடுக்குமாறு பணியாளிடம் சொன்னான்.அவனும் அவர்களுக்கு கொடுத்தான்.அவர்கள் அவனை திட்டி அனுப்பினர்.மீண்டும் இவன் அந்த பணியாளனை கூப்பிட்டான்.

அப்போதுதான் கவனித்தேன்.அவன் தின்று விட்டு மீன் முள் அனைத்தையும் எனது இலையின் ஓரத்தில் வைத்திருந்தான்.அப்படியே இலையை மூடிவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.நீங்க நினைக்கலாம் இவனுக்கெல்லாம் வெட்கம்,மானம்,ரோசம் இதெல்லாம் கிடையாதான்னு?.ஆனா அதெல்லாம் வச்சிக்கிட்டு இங்க ஒரு சிங்கிள் டீ கூட குடிக்க முடியாதுன்றதுதான் உண்மை.உள்ளே ஏதோ பயங்கர சத்தமா கேட்டுக்கொண்டே இருந்தது.

14092013996

கடந்த வருடத்தில் ஆளரவமற்ற மழைக்கால மாலையில் கோழிக்கோடு பீச்சிற்கு சென்றிருந்தேன்.வாஸ்கோடகாமா முதலில் வந்திறங்கிய இடம் என்று சொன்னார்கள்.சாலையின் ஒருபக்கம் முழுவதும் அந்த காலத்தில் வாணிபத்திற்கு பயன்படுத்திய அலுவலகங்கள் சிதிலமடைந்து கிடந்தன.இப்போதும் கூட சரக்கு ஏற்றி வரும் அனைத்து மாநில லாரிகளும் சங்கமிக்கும் இடம் அதுதான்.

வடக்கு தெற்காக நீண்டு கிடக்கும் அந்த சாலையின் நடுவே பாதாம் மரங்கள் பரந்த கிளைபரப்பியிருந்தன.சுமார் பத்து இடங்களில் பாதாள சாக்கடை கடலில் கலந்து,நீர் கருப்பு நிறமாக மாறியிருந்தது.கடல் சற்று உள் வாங்கியிருந்தது.ஒரு கடற்காகம் கரையில் ஒதுங்கி கிடந்த ஏதோ ஒரு விலங்கின் சடலத்தை தின்று கொண்டிருந்தது.

நீண்டு கிடந்த மணற்பரப்பில் ஒதுங்கியவாறு கிடந்த ஒரு படகில் சென்று அமர்ந்தேன்.அலைகள் வந்து மோதுவதும் படகை பின்னோக்கி இழுப்பதுமாக இருந்தது.என்னிலிருந்து முப்பதடி தூரத்தில் நின்றிருந்தார் ஒரு முதியவர் தள்ளுவண்டியோடு.அந்த தள்ளுவண்டியின் மேலிருந்த குடை என் கவனத்தை ஈர்த்தது.ஒரு காதல் ஜோடி உப்பு நீரில் ஊறவைத்த மாங்காயை வாங்கி கடித்தவாறே என்னோக்கி வந்து,தாண்டி சென்றனர்.made it fast  என்ற அந்த பெண்ணின் டிசர்ட் வாசகம் பலவிதமான எண்ணங்களை விதைத்தது.

தூரத்தில் கடலை விற்கும் நம்மூர்க்காரர்கள்,காலிழந்த நாகர்கோயில்க்காரர்,பலூன் விற்கும் வட இந்திய குடும்பம்,ஒட்டக சவாரி செய்யும் ராஜஸ்தான் வாலா,பானிபூரி விற்பவன்,பட்டம் விற்பவர்கள்,குறிபார்ப்பவர்கள், எனப் பலதரப்பட்டவர்களையும் தாண்டி என்னை ஈர்த்தது அந்த தள்ளுவண்டியும், ஒற்றைக்குடையும்,அதில் வரைந்திருந்த யானை படமும்.

காற்று சுழற்றி சுழற்றி அடிக்கத் தொடங்கியிருந்தது.காற்று பலமாய் தாக்க அந்த குடை தலைகீழாய் மாறியது.அதை அவர் இழுத்துப் பிடித்து போராடிக்கொண்டிருந்தார்.நானும் சேர்ந்து இழுத்து ஒருவாறாக சரி செய்துவிட்டோம்.மழையும் தொடங்கிவிட்டிருந்தது.உப்பு நீரில் ஊறிக்கொண்டிருந்த அனைத்து பாட்டில்களும் நனையத் தொடங்கியிருந்தன.மழையோடு காற்றும் அடித்ததால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

சிறிது நேரத்திற்கெல்லாம் நன்றாக நனைந்து விட்டோம்.பாலித்தீன் பையில் சுற்றி வைத்திருந்த பீடியை எடுத்து பற்றவைத்துக் கொண்டார்.அன்றைய வியாபாரம்,மகனின் படிப்பு,மனைவியின் மருத்துவமனை செலவு,போலீஸ்காரனின் மாமூல்,நம்மூர்க்காரர்களின் தொழில்போட்டி,அவரின் குவார்ட்டர் செலவு எனப் பலவற்றைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம்.தொடர்ச்சியாக புகைத்துக் கொண்டேயிருந்தார்.மழை வன்மம் குறைந்திருந்தது.

தன் மகன் ITI மெக்கானிக்கல் இறுதியாண்டு படிப்பதாகவும்,வேலை வேண்டும் என்றும் கூறினார்.அதுக்கென்ன ஏற்பாடு பணிவிடலாம் என்று கூறியிருந்தேன்.ஒரு மாங்காய் கொடுத்தார்.சுள்ளென்று உச்சி மண்டையை தாக்கியது.மழை வெறிக்க அவரிடமிருந்து விடைபெற்றேன்.

அதன்பின் அந்த பீச்சிற்கு செல்லஇயலவில்லை.சென்றாலும் அவர் இருக்கும் இடத்திற்கு போகும் அளவிற்கு நேரம் கிடைத்திருக்கவில்லை.கடந்த வாரத்தில் ஒரு நாள் அந்த இடத்திற்கு சென்றேன்.அவரை சந்தித்து விடவேண்டும் என்று எல்லா இடங்களிலும் தேடினேன்.எங்கும் இல்லை.தூரத்தில் யானைப்படம் வரைந்த தள்ளுவண்டி முண்டமாய் நின்றிருக்க,அருகில் கிழிந்து கிடந்தது அந்தக்குடை.

எனது கவிதைகள் இன்மை.காம் ஏப்ரல் மாத இணைய இதழில் வந்துள்ளன.முதல் பிரவேசம்.. ஆசிரியர்க்கு ஆழ்ந்த நன்றிகள்.!!

 

http://www.inmmai.com/2014/03/blog-post_466.html

வகுப்பில் மாரியோடு சண்டை

கடன் வாங்கிய ரப்பரை தொலைத்து விட்டாள்

தானிருக்கும் இரண்டாம் பெஞ்சுக்கும் மூன்றாம்

பெஞ்சுக்கும் இடையிலுள்ள இடுக்குகளில் துலாவினாள்

பக்கத்திலிருக்கும் காவ்யாவிடம் கோபப்பட்டாள்

அவள் பையை தேட கொடுக்காததால்

முதல் பெஞ்சில் சாத்தி வைக்கப்பட்டிருந்த தன்

கூடைப்பைக்குள் கைவிட்டு தேடினாள்

தினத்தந்தி உறையிட்ட கணக்கு புத்தகம்

கிழிந்ததே தவிர சிக்கவில்லை

எல்லா புத்தகத்தையும் வெளியே எடுத்துவிட்டு

கூடையை குப்புற கவுத்தினாள்

என்றோ தொலைத்துவிட்டு அழுத இரண்டுரூபாய்

நாணயம் விழுந்து குதித்து சுழன்று அடங்கியது

ஒரு ரூபாய்க்கு புதிய ரப்பரும் ஒரு ரூபாய்க்கு

மிட்டாயும் வாங்குவதென தீர்மானித்துக் கொண்டனர்.