Archive for June, 2014

மேற்கு கடற்கரை சாலையில் கோழிக்கோட்டிலிருந்து கொச்சின் செல்லும் வழியில் அமைந்துள்ளது சைபர் பார்க்.கேரளாவில் இருந்து அதுவும் மலபார் பகுதியிலிருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கும் (குறிப்பாக பெங்களூருக்கு) சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஏற்றுமதி செய்யபடுகிறார்கள் என்றெண்ணிய கேரள அரசாங்கமும்,ஒரு யூனியனும் இணைந்து இந்த ப்ராஜெக்டை தொடங்கினார்கள்.எங்களால் முடிந்த அளவுக்கு தாமதமாக்கினாலும் எல்லாம் வல்ல குருவாயூரப்பன் அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த வருடத்தில் எப்படியும் நடைமுறக்கு வந்துவிடும் என்று நம்புகிறோம்.

ஆனாலும் இதை ஒட்டியுள்ள குடியிருப்பை சேர்ந்தவர்கள் ஏதாவது பிரச்சினையை எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்.சீரற்ற மலையில் பாறையின் மேல்தான் இது கட்டப்பட்டுள்ளது.அடுத்த கட்டிடத்திற்கான பகுதியில் பாறை இருப்பதால் அதை உடைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.கெமிக்கல் ப்ளாஸ்டிங்க் முறையில் துளையிட்டு உடைக்கிறார்கள்.முதலில் பாறை உடைப்பது செவிக்கு விருந்தளிக்கவில்லை என்றார்கள்.சிவமணியை வைத்து பாறை உடைக்க முடியாததால் நிர்வாகமும் என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேட்டது.அதற்கு அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் உடைக்க வேண்டும் என்று கட்டளையிட்டனர்.சரியென்று ஒப்புக்கொண்டனர்.சுமுகமாக போய்க்கொண்டிருந்தது.

அடுத்து பாறை உடைப்பதால் வரும் புகை எங்களுக்கு பிடிக்கவில்லை என்றனர்.இவ்வளவுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 20மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த கட்டிடம்.சரி தண்ணீர் தெளித்து உடைக்கிறோம் என்று அதற்கும் சம்மதித்தது நிர்வாகம்.பிறகு அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து அடுத்த பகுதியிலுள்ள கோவிலுக்குச் செல்ல பூமிக்கடியில் சாலை வேண்டும் என்றனர்.நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கட்டிக் கொடுத்தனர்.அதுவும் எதற்கென்றால் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் பண்டிகைக்கு யானை அந்த வழியாக கடப்பதற்கு.

என்னடா இவனுங்க என்ன கேட்டாலும் பண்றானுங்க பெரிய இளிச்சவாயனுங்க என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு காரணம் கூறி கறந்துகொண்டே இருந்தனர்.நிர்வாகமும் மலபார் பகுதியில் வரும் முதல் முயற்சிக்கு எந்த இடையூரும் வரக்கூடாது என்று அவர்கள் கேட்டதெல்லாம் செய்து கொடுத்தனர்.குறிப்பாக அவர்கள் வீட்டின் கிணறுகளைக் கூட தூர்வாரினர்.மருத்துவமுகாம் நடத்தினர்.இருந்தாலும் தூர்தர்சன் ஆண்டனா பொருத்தப்பட்ட அந்த வீட்டுக்காரரை மட்டும் இவர்களால் சமாளிக்கவே முடியவில்லை.சுமார் 10மீட்டர் தூரத்திற்கு காம்பவுண்ட் கட்டப்படாமலேயே கிடக்கிறது.காம்பவுண்ட் கட்டினால் அவர் வீட்டிற்கு காற்று வராது என்பதும்,மண் சரிந்துவிடும் என்பதும் அவர் வைக்கும் குற்றச்சாட்டு.இப்போதைக்கு இந்த பகுதியில் காம்பவுண்ட் கட்டும் திட்டத்தையே கைவிட்டாயிற்று.

சைபர் பார்க் அமைந்திருப்பது ஒரு தேசிய நெடுஞ்சாலைதான் என்றாலும் சென்னையின் ஏதோ ஒரு குறுக்குச்சந்தின் அகலத்தைவிட சற்று சிறியது.அதை கொஞ்சம் அகலப்படுத்த சர்வே எடுக்கலாம் என்று அரசு எண்ணினாலே, இரண்டடி சிவப்புக் கொடியை நட்டிவிட்டு இருவர் அதனடியிலேயே அமர்ந்துவிடுவர்.பிறகு எங்கிருந்து சாலையை அகலப்படுத்த.

இங்குள்ள சாலையில் பைக் ஓட்டுவதற்கென்று பிரத்யேக பயிற்சி இல்லாமல் வந்து ஓட்டுவது ஒரு தற்கொலைமுயற்சிதான்.வழக்கமாக வலப்புறம் இண்டிகேட்டர் போட்டு,இடப்புறம் செல்வது,இண்டிகேட்டர் போடாமலேயே திரும்புவது என்ற பொதுவான சாலைவிதிகள் அறிந்தால் மட்டும் போதாது.225டிகிரியில் ரோட்டைக் கடப்பவனை லாவகமாகக் கையாள வேண்டும்.எவ்வளவு வேகமாக வண்டி சென்றாலும் குறுக்காக லாவகமாக கடக்க வேண்டும்.(இங்குள்ள ஒரு பொதுவான விதிமுறை.இன்னைக்கு நான் போவேன் நீ திட்டக்கூடாது.நாளைக்கு நீ இப்பிடி போனாலும் நான் திட்டமாட்டேன்.)

நான் இங்கு வந்த இரண்டு வருடங்களில் நூற்றுக்கும் அதிகமான விபத்துக்கள்.அதுவும் சைபர் பார்க் இருக்கும் 100மீட்டர் சுற்றளவுக்குள்தான் அத்தனையும்.நேற்றுகூட ஒரு பயங்கரமான விபத்து.இரண்டு பைக்குகளை அடித்து துவைத்து சாலையின் அருகில் இருந்த பள்ளத்திற்குள் தள்ளிவிட்டிருந்தது ஒரு வேகன் ஆர்.அதிர்ஸ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினார்கள் பலத்த காயங்களோடு.இப்போதே இப்படி விபத்துக்கள் நடக்கும் இந்த குறுகிய சாலையில் 3500பேர் பணிபுரியத் தொடங்கும்போது ஏற்படும் டிராபிக்கை நினைக்கவே பயங்கரமாய் இருக்கிறது.

பாவப்பட்ட அரசாங்கமும் கையைப் பிசைந்துகொண்டுதான் இருக்கிறது இந்த மக்களை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல்.தற்சமயம் அவர்களால் முடிந்தது கேமராக்களை பொருத்தி விபத்துக்களை ஆராய்வது மட்டுமே.என்ன ஆராய்ச்சி செய்தாலும்,சாலையின் தடுப்புச் சுவர் தாண்டி ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது என்பதுதான் உண்மை.

 

100_9759

Advertisements

ஜாம்பவாங்களின் சிறுகதைகளுக்கிடையில் எனது சிறுகதையும் சொல்வனம் சிறுகதை சிறப்பிதழில் வெளியாகியுள்ளது.ஆசிரியர் குழுவிற்கு ஆழ்ந்த நன்றிகள் 

http://solvanam.com/?p=33590

கழட்டப்பட்ட வண்டிகளை அப்புறப்படுத்தி
பயன்படுத்திய கருவிகளை பத்திரப்படுத்தி
அழுக்கேறிய தரையினூடே நடக்க வழிசெய்து
கிரீஸ் தின்ற கை கால் முகம் கழுவி
நிறமிழந்த கந்தல் சட்டை மாற்றி
கடையை அடைத்து வெளிக்கடக்கையில்
பாதி வெட்டப்பட்டுக் கிடந்த வாகனத்தின்
உள்ளாடை களைந்த டயரையும்
அப்புறப்படுத்தி கிளம்புகையில்
கரும்புகை கக்கி வீதியெங்கும் புழுதி கிளப்பி
கடந்து சென்றது கடைசிப் பேருந்து.
விளக்கற்ற சைக்கிளில் நள்ளிரவிற்குமுன்
வீட்டையடைந்தால்தான் நாளை அதிகாலை எழுந்து
முதல் பேருந்தை பிடிக்க முடியும்.

என்றோ போடப்பட்ட தார்ச்சாலையில்
முதல் பள்ளம் தாண்டி
இரண்டாவது பள்ளத்தை
வண்டியின் சக்கரம் தாண்ட எத்தனிக்கையில்
இடப்புறமுள்ள வேப்பமரத்தடியில்
சுருள்முடி தோள்களில் படரநின்ற
உன்னை மழை தழுவிக்கொள்ள
நம் முதல் சந்திப்பு நடந்தது.
நான்கு நாட்கள் கழித்து
அதேசாலையில்
முன்னால் சென்ற வண்டிக்காரனை
இடித்துவிட்டு திட்டு வாங்கும்போது
பேருந்தில் நீ கடக்கையில்
நம் கண்கள் மீண்டும் சந்தித்தன.
நாட்கள் உருண்டோடின.
நேற்று சலூனில் முடிவெட்டப்படுகையில்
என் காலருகில் விழுந்த ஒருகொத்து
சுருள்முடியில் இருந்து பார்வையை
மேலே உயர்த்துகையில்
மீண்டும் சந்தித்துக் கொண்டோம்

கொங்காணி வைத்துக்கொள்
காலையிலேயே அம்மா கூறினாள்
பச்சை நிற பழைய கொங்காணி
அம்மா நடவு நட கொண்டு செல்வது
வெளிறிய மஞ்சள் நிற கொங்காணியில்
தலைப்பாகத்தில் சிறிய ஓட்டை இருக்கும்
இரண்டு கொங்காணியும் பிடிக்காததால்
தான் நனைந்தாலும் பரவாயில்லையென்று
புத்தகத்தை மட்டும் ஜவுளிப்பையில்
சுற்றிக் கொண்டு வந்துவிட்டாள்
மாலை பள்ளிவிட்டு
குத்துக்கல்சாமி விலக்கை கடக்கையில்
மழை வலுத்துவிட்டது
ஓட்டை கொங்காணி கொண்டு வந்திருந்தாலும்
நனைந்திருப்பாள்தான் என்றாலும்
அம்மா சொல்லி மறுத்து வந்ததால்
வாங்கப்போகும் அடியை நினைக்கையில்
நெற்றிக் குங்குமத்தைக் கரைத்த மழை நீரோடு
கண்ணீரும் சேர்ந்து கொண்டது..

சுப்பண்ணா தாத்தா கொடுத்ததுதான்
கிளிமூக்கு மாங்காய் வடிவ
களிமண்மண் உண்டியல்
அம்மாவின் பீடித்தட்டுக்குள் தேடி எடுத்து
முதல் ஐம்பது பைசாவை இட்டிருந்தாள்
இன்னும் அதன் அடையாளம் நினைவிருக்கிறது
அழுக்கேறிய காந்தித்தாத்தா ஒருபுறம்
சிரித்துக் கொண்டிருந்தார் அந்த பழைய நாணயத்தில்
தண்ணியூத்து மாமா ஒருமுறை கொடுத்த
பத்து ரூபாய் தான் அதனுள் இடப்பட்ட உயர்ந்த தொகை
பின்பொருநாள் பகவதி ஆச்சியிடம் அரைப்பிடி
தயிர் வாங்கி விட்டு மீதி சில்லறையை கூட
அதற்குள்தான் இட்டாள்
அதன்பின் தொடர்ச்சியாக கடந்த மாதம் வரை
ஐம்பதுபைசாவோ ஒரு ரூபாயோ இட்டுக் கொண்டேயிருந்தாள்
எத்தனையோ இக்கட்டான சூழலிலும்
அதில் கை வைத்ததில்லை
நேற்று வாரவட்டி கட்ட அழுது கொண்டிருந்த அம்மாவிடம்
அதை உடைத்து கொடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை
ஏனோ அழுக்கேறிய ஐம்பது பைசாவை மட்டும்
கொடுக்க மனமின்றி அடுத்த உண்டியலுக்குள் இட
பத்திரப்படுத்திக் கொண்டாள்..

தும்பைச் செடியின் வாசம்
கொளிஞ்சிப்பூ வாசம்
பிடுங்கப்பட்ட கடலைச்செடியின் வேர் வாசம்
கட்டிக்கேந்தியின் இலை வாசம்
பத்திரகாளியம்மன் கோவில் சன்னதி வாசம்
முருங்கை இலை வெண்ணெயுடன் தாளிக்கும் வாசம்
அவித்த பனங்கிழங்கின் வாசம்
அப்பாவின் வியர்வை கலந்த சட்டை வாசம்
பழைய புத்தகத்தின் வாசம்
தக்காளிச் செடி வாசம்
மண்ணெண்ணெய் வாசம்
கோடைமழையின் முதல் வாசம்
மளிகைப்பெட்டிக்குள் அம்மா மறைத்து இடும் நாணயத்தின் வாசம்
கோகுல் சாண்டல் பவுடர் வாசம்
ஆட்டுக்கால் சுடும் வாசம்
காலடியில் கிடக்கும் ஆட்டுக்குட்டியின் வாசம்
-என்று வாசனை தின்னும் முருகம்மாள்
ஜலதோசத்தில் கிடக்கிறாள் இரண்டு நாட்களாய்
அம்மா வைத்த மிளகு ரசத்தைக்கூட நுகரமுடியாமல்..

கடற்கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தல் எல்லோரையும் போல எனக்கும் பிடித்தமான ஒன்று.ஆனால் கோழிக்கோடு கடற்கரையின் குறைந்த அகலமும்,நிறைந்த கடைகளும்,மாலை நேரங்களில் மொய்க்கும் மக்கள் கூட்டமும் ஒருவித எரிச்சலையே கொடுக்கும்.என்றாலும் கடலைக் காண்பது ஒரு ஆழ்ந்த தவம் என்பதால் அடிக்கடி அங்கு செல்வதுண்டு.பாதாம் மரங்களுக்கிடையில் கடல் நோக்கி கிடக்கும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து இரவு நேரங்களில் புத்தகம் படிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்து சமீபத்தில் நிறைவேற்றினேன்.வெண்ணிற இரவுகள் வாசித்த அன்றைய இரவின் பரவசம் வார்த்தைகளில் அடங்காது.அன்றைய தினம்தான் மங்களம் என்ற பாட்டியை சந்தித்தேன்.நானிருந்த இடத்திலிருந்து இருபதடி தொலைவில் இரண்டடியாய் கூனிக்கொண்டு இருந்த அந்த முதியவளை நாவல் படித்து முடிக்கும் வரை பார்க்காமலிருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகள் புகைந்து கொண்டிருந்தன.சரியான இடைவெளியில் நடப்பட்ட வாழைத்தோட்டத்து மரங்களாய் ஆங்காங்கே சில தலைகள்.பாட்டியின் முதுகு மட்டும் என்னைப் பார்த்து இருந்ததால் முகத்தைப் பார்த்து பேசலாமென அருகில் சென்றேன்.ஒரு காலில் கட்டு போட்டிருந்தாள்.கண்களில் புழை தள்ளியிருந்தது.தேய்க்காத பல்லில் எப்போதோ தின்ற உணவின் எச்சம் ஒட்டிக்கொண்டிருந்தது.அருகில் கிடந்த திறந்த தூக்கு சட்டியில் காலையில் யாரிடமோ வாங்கிய பிட்டு நிறம் மாறிக்கிடந்தது.நைந்த புடவைக்குள் சுருங்கிப்போய் கிடந்தது தேகம்.அதுவரை மலையாளிகள் பிச்சை எடுத்து பார்க்காததால் தமிழிலேயே பேசினேன்.

“என்ன பாட்டி சாப்டீங்களா?”

“எங்க ராசா அந்தா தெரியிதுபாரு புரொட்டா கட அத அடக்கிம்போது போவோணும்.கொஞ்சம் பாத்திரம் கீத்திரம் கழுவுனா சாப்பாடும் பத்தோ அம்பதோ ரூவாயும் தருவான்.இன்னக்கி இங்கிட்டு இம்புட்டு கூட்டமாருக்கதால இன்னும் கட அடைக்கல”

“எந்த ஊரு பாட்டி? ஏன் இங்க வந்து இப்டி கஸ்டப்பட்றீங்க?

“என்ன பண்ண சொல்லுத தலவிதிதான்.ஒரு மொவளும் மொவனும்.மொவள உடயாங்குடில குடுத்துருக்கேன்.ரெண்டு பொட்ட கழுதையளு.மொவன் ஒரு குடிகாரபய.ஒரு நா கரும்பு வெட்டப்போனா நாலு நாளக்கி குடிப்பான்.துட்டு குடுக்கலனா எம்மருமொவள போட்டு அடிப்பான்.என்னலாம் கேக்க கேள்வி தாங்க மிடியாது.அதான் அங்க இருக்கவே பிடிக்காம இங்க வந்துட்டேன்”

“இங்க எப்டி வரணும்னு தோணிச்சி?இவ்ளோ வருஸம் பெத்து வளத்த மொவன்ட்ட உங்களாலே இருக்க முடியலனா உங்க மருமகள கொஞ்சம் யோசிச்சு பாருங்க.பேசாம ஊருக்கு போங்க பாட்டி நான் டிக்கெட் எடுத்து பஸ் ஏத்தி விடுதேன்”

“இல்லயா.எங்கூர்க்காரவுக பத்து பன்னெண்டு வேரு இங்கதான் இருக்காக.பெரிய பஸ் டாண்டுல நாலு வேரு,இன்னொரு எளவு பஸ் டாண்டு என்னது”

“பாளையமா?”

“ஆமாயா அங்க மூணு வேரு,இந்த பிச்சில அந்த முக்குல ரெண்டுவேரு.பொறவு கோயில்வளுகிட்ட ரெண்டு மூணுவேரு”

“உங்களுக்கு வீட்டுல புள்ள பிரச்சினை.அவங்களுக்குலாம் என்ன?”

“நம்மஊர்ல் எங்க துட்டு தாராங்க.இங்கமாதி துட்டு கிடைக்காது அதான் அல்லாரு இங்க வெருதுக”

“தங்குறது குளிக்கிறதுலாம்?”

தங்க பஸ் டாண்டு போவோம்.குளிப்பு நாயித்துகிளம கெவர்மெண்டு ஆஸ்பத்திரி மின்னால தண்ணி வரும்.அதும் காலேலே போவோணும்”

இரக்கப்படுவதைத் தவிர வேறு எதுவும் பண்ணத் தோணவில்லை.பர்ஸிலிருந்த பணத்தை எடுத்து கொடுத்து ஊருக்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டேன்.

சில வாரங்கள் உருண்டன…

சனிக்கிழமைதோறும் மிட்டாய்க்கடை தெருவிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அப்பாவை அழைத்துச் செல்வது வழக்கம்.(அவரின் விருப்பத்திற்காக).கடந்த சனிக்கிழமை செல்லும்போது வழக்கமாக விடலைத் தேங்காய் எடுக்கும் தாத்தாவை காணவில்லை.இரு பாட்டிகள் அமர்ந்திருந்தனர் வாசலின் இருபுறமும்.அதேபாட்டிதான்.அரை மூடை அளவுக்கு விடலைத் தேங்காய் எடுத்திருந்தார்.வெளிவரும் அனைவரும் ஐந்தோ,பத்தோ கொடுத்தனர்.பாட்டியின் முகம் பிரகாசமாக இருந்தது.

அருகில் செல்லவும் அடையாளம் கண்டுகொண்டார்.வாயா இந்த வாரம் இங்கதான் என்றார்.அவரிடம் பேசுவதை ஏதோ விசித்திரமாய் பார்த்துக்கொண்டே கடந்தனர் சேர நாட்டு மக்கள்.அதற்குள் அப்பாவும் வெளியே வந்து இருவருக்கும் பத்து ரூபாய் கொடுத்தார்.தேங்காய் மூட்டை பெருகிக்கொண்டிருந்தது.இன்னும் மனதிற்குள் கோபமும்,பரிதாபமும்,பயமும்,நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற கவலையும் அடங்காமல் சுழன்று கொண்டே இருக்கிறது.170520141171

இன்மை ஜூன் மாத இதழில் எனது ஒரு கவிதை வெளிவந்துள்ளது.இன்மை ஆசிரியருக்கு என் நன்றிகள்.

http://www.inmmai.com/2014/05/4_31.html

ஒருமாத விடுமுறை கழிந்து நாளை பள்ளி துவக்கம்
ஆறிலிருந்து ஏழுக்கான நகர்வு
ஏழிலிருந்து எட்டுக்கு செல்லும் காவ்யா அக்காவிடம்
பழைய புத்தகங்களை வாங்கியாகி விட்டது
அட்டை இல்லையென்றால் என்ன
சில பக்கங்கள் கிழிந்திருந்தால்தான் என்ன
இடையிடையே ஏதேதோ கிறுக்கியிருந்தால் என்ன
எல்லாம் சமாளித்துக் கொள்ளலாம்
பழைய நோட்டுகளின் எழுதப்படாத பக்கங்களை
வெட்டி எடுத்து புதிய வீட்டுப்பாட நோட் தயார் செய்தாயிற்று
கோடிடப்படாத கணக்கு நோட்,அறிவியல் பயிற்சி நோட்
எப்படியும் வாங்கியே ஆக வேண்டும்
பழைய காம்பஸே போதும்
ஆனால் பாகைமானி மட்டும் புதியது வாங்கவேண்டும்
பிய்ந்த கைப்பிடியில் முடிச்சியிடப்பட்ட பழைய பள்ளிப்பையை
மாற்றியே ஆக வேண்டும் என்று பலமுறை கூறியாயிற்று வீட்டில்
இன்றுவரை கிடைக்காததால் வேறு வழியின்றி
முடிச்சியை அவிழ்த்து தைத்துக் கொண்டிருக்கிறேன்…..