Archive for August, 2014

தனிமை

Posted: August 26, 2014 in கவிதை

மேட்டுத்திடல் மருத்துவமனையின்

இரண்டாம் தளத்தில் வலப்புறமிருந்த

குறுகிய அறையில்

பச்சைபோர்வை விரிக்கப்பட்ட கட்டிலில்

சதையை முற்றிலும் தின்றுதீர்த்துவிட்ட

எலும்புடலோடு கிடக்கிறாள் கிழவியொருத்தி

மஞ்சள் ஆரஞ்சு வண்ண ஒயர்கொண்டு பின்னப்பட்ட

கூடையில் வெளிறிய தேங்காய்பூ துண்டுக்கடியில்

மங்கிய நிறத்தில் தெரிகிறது தூக்குச்சட்டியொன்று

நாளை மாலைதான் வருவேனென்று

கூறிச்சென்ற மகன் வரும்முன்

தூக்குச்சட்டியிலுள்ள கஞ்சியை எப்படியாவது

அடித்தளத்திலுள்ள குப்பைத்தொட்டியில் சேர்ப்பதே

அவளுக்கு அப்போதைய பெருங்கவலை.

Advertisements

காலவோட்டம்

Posted: August 25, 2014 in கவிதை

புழுதித்தெருக்களில்
செருப்பற்ற கால்களோடு நிறைந்திருந்த
முருகம்மாக்கள் பத்திரகாளிகள்
முப்புடாதிக்கள் காளியம்மாக்கள்
மாயமாகி
ஸ்னேகாவாக, சங்கீதாவாக
மஞசரியாக, சமந்தாவாக
மறுபிறவி எடுத்துவிட்டனர்
என்றாலும் புழுதிவாசம் குறையவில்லை

நூலாம்படை அடைந்து கிடந்த
தொழுவத்தில் ஏதோ தேடுகையில்
என்றோ தொலைந்துவிட்டதாய் எண்ணிய
கந்தூரி வளையல் கிடைத்ததில்
மகிழ்ச்சி முருகம்மாளுக்கு

மொசுமொசுக்கை படர்ந்திருந்த
அந்தக் கள்ளிவேலிக்கும்
யாரோ ஒருவரின் தேய்ந்த செருப்புத்தடம் பதிந்த
செம்மண் ஒற்றையடி பாதைக்கும்
இடையில் கிடந்தது
பிய்ந்த செருப்பொன்று
சுற்றிலும் நெருஞ்சிக்கொடி
படர்ந்திருந்த அந்த பாதையை
எவ்வளவு சிரத்தையுடன்
கடந்திருப்பார்
செருப்பு பிய்ந்த நாளில்
என்றெண்ணி கடக்கையில்
பெருவிரல் தடம் ஆழப்பதிந்த
வலதுகால் செருப்பு
ஆவாரவேர் தட்டி பிய்ந்துபோனது
முருகம்மாளுக்கு

10447108_10204034623285051_4001901778083715588_n

அதுவரை ரசித்ததில்லை

மண்சாலையின் இருபுறமும் மண்டிக்கிடக்கும் தும்பைப்பூவின் ஸ்பரிசத்தை

அதுவரை அனுபவித்ததில்லை

முற்றத்தில் சிதறிக்கிடக்கும் வேப்பம்பூவின் வடிவத்தை,வாசத்தை
தயிர் விற்கும் பாட்டியை,கடைக்கு செல்லும் சிறுமியை,கல்தொட்டியை,ஆற்றங்கரையை,சமவெளியை,
வாகையடி முக்கை,சந்திப்பிள்ளையார் தெருவை,அம்மன் சன்னதியை,ஆட்டுக்குட்டியை,சிறுபறவையை,எச்சத்தில் முளைத்த செடியை

இன்னும் எத்தனையோ அன்றாட நிகழ்வுகளை,மனிதர்களை அத்தனை பரிவோடு அணுகியதில்லை இவரைப் படிக்கும்வரை

இவர் நுகர்ந்து சென்ற பூவின் ஒரு சொட்டு வாசத்தையாவது நுகர வேண்டும் அவர் நுகர்ந்ததைப்போல

என் மரியாதைக்குரிய ஆசான்,ஆதர்ச நாயகன் அய்யா வண்ணதாசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

முறிந்து கிடந்த நெட்டிலிங்கமரத்தின்
கிளையொன்றை
மென்சோகத்துடன் நடந்துவந்து கவ்வுகிறது

நெற்றியில் வெள்ளைப்பொட்டுடைய ஆட்டுக்குட்டி
மூலைகளில் ஒட்டுபோடப்பட்ட
ஓலைப்பெட்டியில் கருவாடு சுமந்துசென்ற
கிழவியின் பின்னால் வந்த முருகம்மாளுக்கு
மற்றொரு கிளைமுறித்து
ஆட்டுக்குட்டிக்கு கொடுக்க ஆசை
எட்டாமல் கிழவியை ஏவினாள்
கிழவி முறித்த கிளையை
ஓடிவந்து பற்றி ஏமாற்றத்தில்
அதே மென்சோகத்தினோடு
திரும்பி நடந்த ஆட்டுக்குட்டியின்
பாவனைகள் முருகம்மாளுக்கும்
இருப்பதாக அவதானித்த கிழவி
அடுத்த தெருவில் நுழைந்தாள்
பெருங்கூப்பாடு போட்டபடி
கருவாட்டு வாசம் மட்டும்
அங்கேயே நின்றுகொண்டது

பருவமழை

Posted: August 21, 2014 in கவிதை

நீருள்ளி முள் நிறைந்து கிடக்கிறது
நாற்றாங்கால் எங்கும்
எருக்குழியில் முளைத்து கிளைபரப்பிவிட்டது ஆமணக்கு
குளத்து வெட்டுக்கிடங்கு மட்டும்
நிறைந்துள்ளது நேற்றைய மழையில்
விதைநெல் உலர்ந்து கிடக்கிறது
வீட்டு முற்றத்தில்
நாற்றுப்பாவ குளம் நிரம்ப வேண்டும்
குளம் நிரம்புமா இல்லையா
என்று குளக்கரை வடக்குத்தி அம்மனுக்கு பூ கட்டி போட்டதில்
வெள்ளைப்பூ விழுந்ததால்
முற்றத்து நெல்லை முணிந்து
பரணில் போட்டுவிட்டான் தங்கப்பழம்..!!

என்னுடைய ஆவாரங்காடு என்ற சிறுகதை சொல்வனம் 111வது இதழில் வெளியாகியுள்ளது.இணைப்பு கீழே.

http://solvanam.com/?p=34917

தெக்குமேட்டு விலக்கின்
ஒற்றைப் புளியமரத்தில் தாவிய
அணிலின் நளினம்
வீட்டு முற்றத்தில் பரவிக்கிடந்த
முருங்கைப்பூ ருசித்த
அணிலின் குறும்புத்தனம்
பள்ளியில் ஓட்டுக்கூரையில்
பாடவேளைகளில் துரத்தி விளையாடிய அணிலின் சேட்டை
என்றே பார்த்து பழகிய முருகம்மாளுக்கு
ஊர்கிணற்றுப் பொந்தில் வசித்த
அணிலின் கண்திறவா குட்டியொன்று
கிணற்றில் தவறிய தினம்
கிணற்று சுவரெங்கும் ஓலமிட்ட
தாய் அணில்மூலம்
அதன் அழுகையை கண்டதும்
நொடியில் கண்ணீர் பூத்துவிட்டது.!!

இன்மை இதழில் இந்தக் கவிதை வெளிவந்துள்ளது.

http://www.inmmai.com/2014/08/blog-post_68.html

 

ஊரில் யாருக்கு காத்துக்குத்து என்றாலும்

வீட்டு வேலியில்

வளர்ந்து நிற்கும் வாதமுடக்கி மரத்தின்

ஒருகிளை முறித்து

இரு கீற்றாக்கி

இடுப்பில் இருபுறமும் இருவரும் இடுக்கியவாறு

ஏதோ மந்திரம் ஜெபிக்க

பிரிந்த இரு கீற்றுகளும்

ரயில் பூச்சியின் நடைவேகத்தில் நடுவில்

இணையும் புள்ளியில்

மீண்டும் முறித்து

இடுப்பில் தேய்த்துவிட்டு வலி விலக்குவாள்

முப்புடாதிப்பாட்டி

என்றோ வேலிக்காக நடப்பட்ட

வாதமடக்கி மரக்கிளையிலிருந்து

விருட்சமாகிய அந்தமரம் அவளுக்கு கோவில்.

பேய் மழைக்காலம் தொடங்கியிருந்த

அந்த நாட்களில் தலைகொள்ளா

குழையுடனும் மஞ்சள் நிறப்பூவுடனும்

செழித்து நின்ற மரத்தின்

குழையும் கிளையும் பூக்களும்

கிணற்றடி குண்டுக்கு

தொளி உரமாகியிருந்தது

காற்றில் முறிந்தால் வீடேபோய்விடும் என்பதால்

அடுத்த நாள் காத்துக்குத்து பிடிக்கவந்த

தெக்குத்தெரு சுமதிக்கு

வாதமுடக்கி கிளைதேடி அலைந்து

கிடைக்காமல் விசும்பி அழுதபோது

வெட்டப்பட்ட இடத்திலிருந்து

தளிர்விடத் தொடங்கியிருந்தது

வாதமுடக்கிமரம்.