Archive for September, 2014

இலை களைந்து
கானல்நீர் உறிஞ்சியபடி
அசைவற்று
முப்புலியூர் விலக்கு ஏற்றத்தில் நிற்கிறது
தனித்த புளியமரமொன்று

பின் சக்கரத்திற்கு பாதிக்காற்றுடனும்
ஏதோ வியாபார மூட்டையுடனும்
ஏற்றம் ஏறி வந்ததும்
அந்தமர நிழலே ஆசுவாசமாய் இருக்கிறது
வெயில் தின்று வாழ்ந்துகொண்டிருக்கும்
பம்பக்கொட்டு தாத்தாவிற்கு..!!

Advertisements

இந்த அதிகாலையில்
மழைநீர் குடித்து சிதலமடைந்த
பாசிபடிந்த செம்புரைக்கல் சுவற்றில்
நான்காவது கிளையை
சூலுக்குள் சுருக்கி வைத்துள்ளது
ஏணிவடிவ கிளைகொண்ட நெப்ரோலெபிஸ்
அடர்மாமர இலைகளினூடே கசிந்து
பொதியிறக்கிய பாக்குகொலையின்
பிஞ்சு பாக்குக்காய் நுகர்ந்து
முகத்தில் அறையும்
மஞ்சள் ஒளிக்கற்றையை நோக்க
சுருங்கியிருக்கும் கிளையை உசுப்புகிறது
நெப்ரோலெபிஸ்

images

கடைசியாக மடித்து வைத்த சட்டை
மடிப்பு கலையாமல் இருக்கிறது
காலண்டர் அட்டை லட்சுமி படத்துக்கு வைத்த குங்குமம்
நிறமிழந்து அதே வடிவிலுள்ளது
இழுத்துப்போட்ட கட்டைப்பீடி
மண்ணோடு மக்கிக் கிடக்கிறது
குடித்துப்போட்ட சாராயக் குப்பியில்
சிறிது நீர் தேங்கியுள்ளது
பெருவிரல் தேய்ந்த செருப்பு
தொழுவத்தில் கிடக்கிறது நூலாம்படையோடு
இத்தனையும் கண்டு பள்ளிசெல்லும்
முருகம்மாள்
குளக்கரை கடக்கையில்
அப்பாவைப் புதைத்த குழியில்
பிரண்டைக்கொடி தளிர்த்துள்ளது

நேயர்களுக்கு வணக்கம்
இது திருநெல்வேலி வானொலி நிலையம்
உங்கள் அபிமான நேயர் விருப்பம்-முதலாவதாக
சேர்ந்தமரம் சகுந்தலா,திப்பணம்பட்டி சுப்பிரமண்யம்
கல்லிடைக்குறிச்சி மணிமாலா,டவுண் பாலா
இவர்களுக்காக சிகப்பு ரோஜாக்கள் படத்திலிருந்து
மலேசிய வாசுதேவன்,ஜானகி குரல்களில் இதோ….
இந்த மின்மினிக்கு கண்ணிலொரு மின்னல் வந்தது
என்று இரைச்சலினூடே காதில் விழுகிறது
வீட்டுப்பாட நோட்டில் முனை மழுங்கிய பென்சிலால்
ஏதோபடம் வரைந்துகொண்டிருக்கும் முருகம்மாளுக்கு
சேர்ந்தமரம் சகுந்தலா இப்போது என்ன செய்கிறாளோ
என்று நினைக்கையில் ஏனோ சுகமாக இருக்கிறது.

பொதுவாக ஒரு கட்டிடம் கட்டத்தொடங்கும் முன்பே நாம் செலவு செய்யப் போகக்கூடிய மின்சாரத்தின் மதீப்பீட்டை மின்சார வாரியத்திற்கு அளிக்க வேண்டும்.அதனடிப்படையில் அவர்கள் ஆராய்ந்து நமது பயன்பாட்டை நிர்ணயிப்பார்கள்.பின்பு கட்டிடப்பணி முடிந்ததும் ஆணைப்படியே செய்திருக்கிறோமா என்று அவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.அதைப் பார்த்தபின்பு பாதுகாப்புகுறித்து எல்லாம் ஆய்வு செய்து நமக்கு மின்சாரம் வழங்குவார்கள்.இதுதான் நடைமுறை.

இப்படித்தான் இந்த சைபர் பார்க்குக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு மின்சார வாரியத்தின் ஒப்புதலுக்கு எங்களது பயன்பாட்டு அறிக்கையை அனுப்பினோம்.அவர்களும் “யார்கிட்ட கேக்க எங்கிட்டதான இன்னும் கூட்டிக்கேளு”என்று வடிவேலு தொனியில் அறிக்கை விட்டனர்.அதிலும் பச்சைக்கலர் சட்டை அணிந்து நடுநாயகமாய் வீற்றிருந்த அந்த கூடுதல் ஆய்வாளர் “அடேயப்பா நம்மட நாட்டில் இங்கன ஒரு ப்ராஜெக்டா”என்று என்னத்த கண்ணையா பாணியில் புளகாகிதமடைந்தார்.அப்போதே கேபிளை இழுத்து கொண்டுவந்து மின்சாரத்தைக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்று எனக்கு பயம் வேறு.

சரியென்று அதற்கான பணிகளைத்தொடங்கினோம்.சமீபத்தில் பணியெல்லாம் நிறைவடைந்தது.அதையடுத்து நீங்கள் கொடுத்த ஆணைப்படியே நாங்கள் பணியை நிறவு செய்துள்ளோம்.தயவுசெய்து வந்து ஆராய்ந்துவிட்டு மின்சாரத்தைத் தாருங்கள்.இப்போதே கடன் வாங்கிய வங்கிக்காரன் கழுத்தை நெறிக்கிறான் என்று அறிக்கை சமர்ப்பித்தோம்.ஒருவாரம்,மாதம் என்று நாட்கள் உருள, பெருமதிப்பிற்குறியவரே நாங்கள் கடன் வாங்கி ஒரு கட்டிடத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறோம்.இருந்தாலும் அதுவல்ல விசயம்.நீங்கள் என்னவெல்லாம் ஆணையிட்டீர்களோ அதனடிப்படையிலேயே பணியை நிறைவு செய்துள்ளோம்.அதற்கான எல்லா கோப்புகளையும் உங்களுக்கு அனுப்பி சிலமாதங்கள் கடந்துவிட்டன.கட்டிடத்தில் தொழில்தொடங்க இருக்கும் மென்துறை நிறுவனங்கள் “கரண்ட் குடுத்தா உள்ள வாரோம்யா”என்று எகத்தாளமாக பேசுகிறார்கள்.எப்பொழுது வந்து ஆராய்ந்து ஆணை பிறப்பீர்கள்? என்று எளிதான ஒரு கேள்வியைக் கேட்டோம்.

அதற்கான பதிலை அதற்கடுத்த வாரம் சொன்னார்கள்.எனக்கு அந்த பச்சைக்கலர் சட்டையப் பார்க்கவேண்டும்போல் இருந்தது.ஒருவழியாக அவர்களின் வரவு நாங்கள் திருவனந்தபுரத்திலிருந்து வரப்போக 2tier ac டிக்கெட் பதிவுசெய்ததிலிருந்து உறுதியானது.பன்னிரண்டு பேர் அடங்கிய குழு வருகிறது என்று நினைக்கும்போது எனக்கு மைசூரில் இருக்கையில் இன்போஸிஸில் நான் பணிபுரிந்த கட்டிடத்துக்கு மின்சார வாரியம் ஆய்வு செய்தது நினைவில் வந்தது.வந்தவர் கட்டிடம் எங்கிருக்கிறது என்ற கேள்வியையாவது கேட்கமாட்டாரா என்று இருக்கும் அலுவலகத்திலிருந்து அவர் பேசிக்கொண்டிருக்கும்போது.சரி அதுபோகட்டும்.

எங்கள் வளாகத்திற்குள் அந்தக்குழு வந்ததும் முதலில் அந்தப் பச்சைக்கலர் சட்டையைத்தான் தேடினேன்.காணவில்லை.எப்படி மற்றவர்களிடம் “பச்சைக்கலர் சட்டை போட்ட சார எங்கன்னு கேட்பது” என்று கூச்சமாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன்.வரைபடத்தில் உள்ளபடியே இருக்கிறதா என்று இரண்டு நாட்களாக ஆராய்ந்து புதிதாக நீங்கள் இதையெல்லாம் செய்யவேண்டும் என்று ஏழுபக்க கட்டுரை அழகிய ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்தனர்.

அரை நாள் செலவழித்து அதைப் படித்துமுடித்தாலும் அதிலுள்ள சாரம்சம் வைரமுத்துவின் ஜிப்பாவிற்கும்,தேவாவின் ஜிப்பாவிற்கும் உள்ள வித்தியாசத்தை ஏழுபக்கத்தில் விளக்கப்படங்களுடன் வரைந்ததுபோல் இருந்தது.எந்த ஜிப்பாவாக இருந்தாலும் துவைத்துதான் ஆகவேண்டும் என்ற பொதுவிதியின்படி அவர்களின் அத்தனை பின்னூட்டங்களையும் பூர்த்தி செய்து ஒருவாரம் கழித்து மீண்டும் சமர்ப்பித்தோம்.அய்யா நாங்கள் இப்போது பூரணமாக உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிவிட்டோம்.மின்சாரம் தாருங்கள் என்றோம்.”நான் என்ன பாக்கெட்ல வச்சிக்கிட்டால சுத்துதேன்”என்று அவர் நினைத்திருக்க வேண்டும் ஒருவாரத்தில் பதிலளிப்பதாகக் கூறினர்.

காத்திருந்தோம்.மீண்டும் நாட்கள் நீளவே திருவனந்தபுரம் தலைமை அலுவலகத்திற்குச் சென்றோம்.சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய,அன்றிலிருந்து இருபத்தி மூன்றாவது நாள் கோழிக்கோடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் வழங்குமாறு அறிக்கை அனுப்பினர்.இது நடந்து முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறது.இந்த மூன்று மாதங்களில் வாரத்தின் எல்லா நாட்களிலும் யாரோ ஒருவர் மின்சார வாரியத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறோம்.பல் குத்திக்கொண்டோ,காது குடைந்துகொண்டோ இருக்கும் சேட்டன்மார் தினமும் ஏதாவது ஒன்று சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.இன்றைய நிலவரப்படி ஓணம் இன்னும் முடியவில்லை அவர்களுக்கு.என் பிள்ளைக்கு காதுகுத்தும் முன்னர் ஓணம் விடுமுறை முடிந்துவிட வேண்டும் என்று அருகிலிருக்கும் குருவாயூரப்பனை வேண்டிக்கொண்டேன்.

 

100_9813

மோகன்லாலின் திரை ஆளுமையும்,வசன உச்சரிப்பும் பிடிக்கும் என்பதால் எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் “பெருச்சாழி ” படத்தினை காணச் சென்றேன்.முதல் காட்சியிலேயே இது உலகத்தரம் வாய்ந்த படம் என்று விளங்கிவிட்டது.என்னைச் சுற்றியிருந்த கூட்டம் சில காட்சிகளில் கைதட்டி ஆர்ப்பரித்தது.அந்த காட்சிகளே அவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாய் இருந்தது.
1.முல்லைப்பெரியார் பிரச்சினையில் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.அரைகுறை தமிழில் பேசும் சேட்டனை தமிழை கொலை செய்யாது மலையாளத்திலேயே பேசு என்கிறார் டெல்லி கணேஸ்.மலயாளத்தில் பேசும் சேட்டனிடம் டெல்லி கணேஸ் ஆங்கிலத்தில் பேச முயன்று உளறுகிறார்.உடனே சேட்டன் நீ ஆங்கிலத்தை கொலை செய்யலாம் நான் தமிழை கொலை செய்யக்கூடாதா என்கிறார்.வாஸ்தவமான கேள்விதான்.ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட அந்த காட்சியில் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது.
2.போனில் ஒருவன் யாரோடோ குழைந்து பேசிக்கொண்டிருக்கிறான்.யார்டா என மோகன்லால் கேட்க “கூட்டாரன்ட பாரி “என்கிறான்.செவிப்பறை கிழிவதுபோல் ஒரு கூச்சல்.
3.மோகன்லால் வேட்டியை மடிக்கிறார் அமெரிக்காவில்.பக்கத்திலிருந்தவர் நாக்கைக் கடித்து தொடை தட்டுகிறார்.
4.அமெரிக்க கொடியை வேட்டியாக மோகன்லால் கட்டும் காட்சியில் இரண்டு மூன்று பேர் எழும்பி ஆடுகின்றனர்.
5.மலையாளிகள்தான் உலகையே ஆள்கிறார்கள் என்கிறார்கள்.நேர்த்தியான கைதட்டல்.
6.இறுதியாக மோகன்லாலுக்கு பிரேசில்,ஜமைக்கா,லண்டன் நாடுகளிலிருந்து அழைப்பு வருகிறது.கைதட்டல் கூச்சலோடு வெளிவந்தேன்.

படக்கதை என்பது இதுதான்.முல்லைப்பெரியார் பிரச்சனையில் இருமுடிக்கெல்லாம் வரி விதிக்கவேண்டும் என்ற அதிபுத்திசாலித்தனமான ஐடியாவை கொடுக்கிறார் ஆலோசகர் லாலேட்டன்.அது வெற்றிபெற அவரின் புத்திசாலித்தனத்தால் கலிபோர்னியா கவர்ணர் தேர்தலுக்கு ஆலோசனை வழங்க அழைப்பு வருகிறது.செல்கிறார்.வெல்கிறார்

Mohanlal-Movie-Peruchazhi-Still1

இடுக்குகளில் அழுக்கு நிறைந்த
ஈருள்ளி சீப்பு
இடப்புற கொண்டையில் குத்தி நிற்க
கழுத்தொழுகும் பேனாவில்
இந்த அவசரத்தில் மை அடைக்கிறாள் முருகம்மாள்
நீலம்போட்ட வெள்ளைச் சட்டையில்
ஊக்கு குத்தப்பட்ட இடத்தில்
சிந்துகிறது ஒருதுளி மை
வாசலில் காத்துநிற்கிறாள் வடக்குத்தெரு காவ்யா
அவசரமாக பேனாமை தலைக்குத்தடவி
வாசல் கடக்கையில் குத்தி நிற்கும்
சீப்பை பிடுங்கி தொழுவத்தில் எறிய
ஒருகுத்து முடியோடு மூலையில்
விழுகிறது ஈருள்ளிச்சீப்பு
காவ்யாவின் மல்லிப்பூ வாசத்தோடு
பின்தொடர்கிறாள்
முடியை பின்னிக்கொண்டு..

விளிம்புகள் மழுங்கிய
நிறம் உரிந்து சற்று நெளிந்த
நடராஜ் காம்பஸ் டப்பாவினடியில்
மில்க் பிகீஸின் மேலுறையோ
வெட்டப்பட்ட ஜவுளிப்பையோ
செய்தித்தாளின் சிறுதுண்டோ
கசங்கிய கார்பன் தாளோ
விரிப்பது வழக்கம்
அன்று பக்கத்து இருக்கை மாரி
விரித்திருந்த விலையுயர்ந்த
பத்தி அட்டையின் வாசம்
முருகம்மாளுக்கு பிடித்துப்போனது
மாதத்தில் என்றாவது ஒருநாள்
காலண்டர் அட்டை லட்சுமி படத்தின்முன் கொளுத்தி வைக்கும்
சர்வோதயா பத்தி காலியானதும்
அதன் உறையை விரிக்கவேண்டுமென அப்போதே எண்ணிக்கொண்டாள்