Archive for October, 2014

Kiss of Love

Posted: October 30, 2014 in பொது

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இங்குள்ள Downtown Cafe என்ற மிகச்சிறிய ஆனால் காதலர்களுக்கான புகழ் பெற்ற காபிஸாப்பில் ஒரு காதல் ஜோடி காதலின் உச்சத்தில் முத்தமிட்டுக்கொண்டதை யாரோ பதிவுசெய்து யூ டியூப்பில் (https://www.youtube.com/watch?v=9FyMJW_EWsA) போட்டுவிட்டனர்.அந்த காபி ஸாப்பின் உரிமையாளர் ஒரு முஸ்லீம் இளைஞர்.இதைக்கண்டு கொதித்தெழுந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அந்தக் கடையை அடித்து நொறுக்கி விட்டனர்.

இது தனிமனித உரிமைக்கு எதிரான செயல் என்று இங்குள்ள அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன் நவம்பர் 2 ல் இங்குள்ள புகழ்பெற்ற MARINE DRIVE ஹோட்டலில் காதல் ஜோடிகள் பொதுவில் முத்தமிட்டுக்கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.இதற்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.காவல்துறை அனுமதி கொடுக்காவிட்டாலும் இதை நடத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர் காதலர்களும் அந்த அமைப்புகளும்.

நேற்றிலிருந்தே இங்குள்ள நண்பர்கள் தங்கள் காதலியுடன் செல்வதாகக் கூறி மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கின்றனர்.அத்தோடு அந்த அமைப்பிலுள்ள சில பெண்களைப் பார்க்க நேர்ந்ததால்,அன்றைய தினம் நண்பர்களின் திருமணத்திற்கு ஊருக்கு செல்லலாம் என்று திட்டமிட்டதை ரத்து செய்யலாமா என்ற ஆழ்ந்த யோசனையில் இருக்கிறேன்.நடக்கவிருக்கும் களேபரங்களைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisements

இரா.முருகன் அவர்களின் அரசூர் வம்சம் அற்புதமான நாவல்.இரண்டு வருடங்களுக்கு முன்பு படிக்கையிலும் சரி,சமீபத்தில் மறுவாசிப்பு செய்கையிலும் சரி அதன் மொழிவளமும்,காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி ஆடும் பகடை ஆட்டமும் அவ்வளவு பிடித்துப்போனது.அதன் தொடர்ச்சியாக அவர் எழுதியுள்ள விஸ்வரூபம் நாவல் தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்றே எண்ணுகிறேன்.வாசிக்கத்தொடங்கிய இரண்டு இரவுகளில் எண்ணூறு பக்க நாவலின் பாதிப்பக்கங்களைக் கடக்க முடிந்ததற்கு காரணம் அதன் சுவாரஸ்யமான எழுத்து நடையும் காலத்தை குழப்பி ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்மை கதை மாந்தர்களை தேடவிடும் புத்திசாலித்தனமும்,போக சிந்தனையோடு அலையும் கதாப்பாத்திரங்களின் கொச்சையான வாழ்க்கைமுறையும் ஆகும்.அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை,உணவுப்பழக்கம் என்று சமஸ்கிருதமும்,மலையாளமும் கலந்த மயக்கும் தமிழில் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

ஆவிகளும் ஒரு கதாபாத்திரமாக கதை நெடுகிலும் பயணிப்பது அற்புதமான அனுபவம்.ஆவிகளோடு உறவு கொள்வதாய் எழுதியிருப்பது மாய மாந்த்ரீக உலகிற்குள் அடியெடுத்து வைப்பது போன்ற சிலிர்ப்பைக் கொடுக்கிறது.கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நாவல்.

கல்பதித்த மாடசாமித் தெருவுக்கும்
அவர் வீட்டுக்கும் இடைப்பட்ட
கருங்கல் இருக்கையைச் சுற்றி
தரைபிளந்து தலை நீட்டுகிறது
ஒருகுத்து கொடுக்காப்புளி விதையும்
நான்கு புளியவிதையும்
அவைகளினூடே சற்று சாய்ந்து
தளிர்த்துள்ள ஒற்றை பேரீச்சை
மகளைக் காணச்சென்று
பின்பு அங்கேயே தங்கிவிட்ட புஸ்பம்
பேரீச்சம்பழம் கொடுத்தநாளையும்
அவள் நினைவுகளையும் கிளறுகின்றன
அடைமழைக்கால
காலைநேர சுளீர் வெயிலின் சுகத்தோடு.

உபயோகப்படாத துருப்பிடித்த தகரப்பெட்டியின்
தாழ்வாரத்தில் கிடக்கிறது
அத்தை பிரியமாகப் படித்த
காக்கிவண்ண அல்லியரசாணிமாலை
எதேச்சையாக பக்கங்களைத் திருப்புகையில்
வலப்புறம் சாய்த்து நேர்த்தியாக எழுதப்பட்ட
“து” வின் கொம்பு மட்டும்
தூக்கிய யானைத் தும்பிக்கைபோல் சுருண்டுள்ள
முத்துலட்சுமி என்ற கையெழுத்தும்
அடுத்த பக்கத்திலுள்ள அத்தையின் வெளிறிய
மல்லிகைப்பூ முன்பக்கம் இழுத்துவிடப்பட்ட
கருப்பு வெள்ளைப் புகைப்படமும்
மக்கிய புத்தகத்தின் வாசமும்
எலும்பும் மண்ணாகிப்போன அத்தையின்
நினைவை அடுக்கிக்கொண்டே செல்கின்றன..

மைசூரில் பணியிலிருந்த காலகட்டத்தில் ஆஜானுபாகுவான நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சுயமுன்னேற்றக் கடன் வாங்கினேன்.பெரிய சிரமம் ஏதும் இருக்கவில்லை.கர்நாடகாவில் வசிக்கிறேன் என்பதற்கு மட்டும் ஒரு LIC பாண்டிங் போடவேண்டியிருந்தது.அதுவும் நண்பரின் உதவியால் சூர்யா பேக்கரியை அடுத்துள்ள காவேரி பாரில் அமர்ந்து அடுத்த நாளே போட்டு ஒரு மாதத்திற்குள் பணத்தை வாங்கிவிட்டேன்.அன்றிலிருந்து கண்ணும் கருத்துமாக மாதம் தவறாமல் கட்டி வந்த எனக்கு அந்த வேலையை விட்டு அடுத்த வேலையில் இணைந்த முதல்மாதம் குறிப்பிட்ட தேதியில் பணம் கட்டமுடியவில்லை.

உடனே வங்கியிலிருந்து அழைத்திருக்கிறார்கள். கேரளாவிற்கு வந்து நம்பரை மாற்றிவிட்டதால் உபயோகத்தில் இல்லை என்று கூறியிருக்கும்.நான் கொடுத்திருந்த அந்த விலாசத்தில் விசாரிக்க நண்பர்கள் வேலையை விட்டு சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.உடனே எனக்கு சாட்சிக் கையெழுத்து போட்ட அந்த ஆஜானுபாகுவான ஆளை அழைத்துள்ளனர்.அவர் கைப்பேசியில் எப்போதும் கேட்கும் “என் ஜன்னல் நிலாவுக்கு என்னாச்சு”என்ற தத்துவப்பாடல் ஒலிக்காமல் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் உபயோகத்தில் இல்லை என்றிருக்கிறது.அவரோ வெளிநாடு சென்று விட்டார்.கையறு நிலையில் இருந்த வங்கி நான் கொடுத்திருந்த நிரந்தர முகவரிக்கு மறுநாளே அறிக்கை அனுப்பி விட்டனர்.இனி என்ன செய்கிறார்கள் பார்க்கலாம் என்று காத்திருந்தேன்.

அதன்பின் நான் வசித்த அறையில் இருந்த நண்பனிடம் எனது எண்ணைக் கேட்டுள்ளனர்.நண்பன் விசுவாசக்காரன்.நள்ளிரவில் மிக்ஸிங்கிற்காக பக்கத்துவீட்டில் இளநீரெல்லாம் பறித்துக் கொடுத்ததை எப்படி மறப்பான்.இல்லை என்று கடுஞ்சினத்தோடு கூறி அரக்கனாக மாறியிருக்கிறான்.இருந்தாலும் அவனை விடாமல் துரத்தவே நெகிழ்ந்துவிட்டான்.பாவி.பெட்ரோல் போடாமல் பல நாட்கள் மைசூர் சாலையில் அவன் பைக்கை ஓட்டியதை மறந்திருக்க மாட்டான் இல்லையா.பின் அவன் கணக்கிற்கு நான் பணம் அனுப்ப அவன்தான் வங்கியில் சென்று கட்டினான்.

அதன்பின்னர் தொடர்ச்சியாக எந்த இடையூரும் இல்லாமல் இந்த மாதத்தோடு கட்டி முடித்து விட்டேன்.இப்போது பிரச்சினை என்னவென்றால் இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும் எனக்கு 25லட்சம் வரை சுயமுன்னேற்றக் கடன் தரத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள்..ஆமாம்.தினமும் ஐம்பது மெயில் வருகிறது.நான் இணையத்தில் எந்த இணைப்பில் சென்றாலும் சைடில் ஏதாவது ஒரு வங்கியின் விளம்பரம் வருகிறது.மொபைலில் தினமும் NT00007 என்று ஏதேதோ எண்ணிலிருந்து மெசேஜ் வருகிறது.

இன்று ஒரு பெண்மணி அழைத்திருந்தார்.சார் நீங்கள்தான் இந்த வருடத்தில் சிறப்பான பயனாளி.அதனால் எங்கள் வங்கி உங்களுக்கு சிறப்பு சலுகைகள் தரக் காத்திருக்கிறது.அதுவும் உடனடியாக என்றார்.வீட்டுக்கடன் வாங்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு சந்தோசம் தாங்கவில்லை.சரி எனக்கு 20 லட்சம் வேண்டும்..மாதத் தவணையில் என்னால் கட்ட இயலாது.ஐந்து வருடம் கழித்து மொத்தமாக உங்களுக்கு திருப்பித் தந்துவிடுகிறேன் என்றேன்.இல்லை சார் உங்களுக்கு குறைந்த வட்டி 11%தான் சார் என்றார்.என்னால் வட்டியெல்லாம் கட்ட முடியாது.அசலை மட்டும் ஐந்து வருடம் கழித்து கண்டிப்பாகத் திருப்பித் தந்துவிடுகிறேன் என்றேன் உறுதியாக.சரியென்று சிரித்துக்கொண்டே அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

அநேகமாக இந்நேரம் வங்கியில் காசு ஏறியிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கிழக்கு பார்த்த சிறிய தேவாலயம்
பரந்த மைதானத்தின் ஓரத்தில் நிற்கிறது
வேப்பம்பூ நிரம்பிய ஒற்றை வேப்பமரம்
“என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்”
என்று ஒலிப்பெருக்கியில் உருகுகிறது
அவளையொத்த ஒரு பெண்ணின் குரல்
அந்த வேப்பமர நிழலும் வேப்பம்பூ வாசமும்
அந்தக் குரலும் ஆசுவாசமாயிருக்கிறது
இரண்டு மணிநேரம் ஜெபித்து முடித்து
அகன்ற இரும்பு கேட்டின் கைப்பிடி தளர்த்தி
வெளிக்கடக்க எத்தனித்த
முதிர்கன்னி அமலத்திற்கு

வலப்புறக்கண்ணோரத்தில்
சிறிது நீண்டுவிட்ட கண்மையோடும்
குறு குறு வரியுடைய உதட்டில்
மென்வண்ண உதட்டுச்சாயப் பூச்சோடும்
தோடுபோல் தோடல்லாத காதணியோடும்
ஈரத்தலையின் பணிவோடும்
மூன்றாவது நடைபாதையின்
கல்யாண் சாரீஸ் விளம்பரப் பலகையின்
அடியில் நிற்கிறாள்
தொடர்வண்டி தாமதம் என்ற அறிவிப்பில்
கன்னத்தின் குறுக்கே கோடு கிழிக்கின்றன
வசீகர முகப்பாவனைகள்
திடீரென மிக்கிமோஸ் படமிட்ட இளஞ்சிவப்பு நிற
கைப்பையிலிருந்து கைப்பேசியை பற்றி
நின்ற இடத்திலேயே நின்று சுழன்று
இடப்புறக் கைக்குள் புதைந்திருந்த
கைக்குட்டையால் வாய் பொத்தி நாணுகிறாள்
தொடர்வண்டி வராமலே போகட்டும்..

தொழுவத்திற்கு கூரை வேய்கிறார்கள்

விபரம் தெரிந்த நாளிலிருந்து

தொழுவத்தின் தெற்கு மூலையில் தொங்குகிறது

இடப்புறக் காதிழந்த இரும்பு நீர் இறவை

கூரை வேயும் நாட்களில் மட்டும்

முற்றத்தில் கிடந்து புழுதி உதிர்த்து

வெயில் தின்று இருப்பிடம் செல்லும்

அதன்

காதறுந்த தினத்தன்றுதான் தாத்தாவிற்கு

கிணற்றுக்கல்லில் விழுந்து இடுப்பு முறிந்ததாய்

பாட்டி சொல்வாள்

இன்று அதே நினைவாக

வலப்புறக் காதிலிடப்பட்ட கயிற்று முடிச்சுக்குள்

தாத்தாவைத் தேடுகிறாள்

சமீபத்தில் பாட்டியிழந்த பேத்தி

தனிமை

Posted: October 9, 2014 in கவிதை

நேற்றைப்போல் அதே கல்திண்ணையில்
நெற்றியில் கட்டிய கசங்கிய துண்டோடும்
இடை சுற்றிய ரேசன் வேட்டியோடும்
மேற்கு பார்த்து அமர்ந்திருக்கிறார்
சுருங்கிய தோலால் சுற்றப்பட்ட காசித்தேவர்
நேற்றைவிட இன்றைய காற்றில்
குளிர்ச்சி பொதிந்துள்ளது
நேற்றைவிட இன்றைய தெருவில்
புழுதி குறைந்துள்ளது
நேற்று தலையில் விழுந்த மின்கம்ப நிழல்
இன்று தெருவில் கிடக்கிறது
நேற்று பேச்சுத் துணைக்கிருந்த மூக்கி
மகள் வீட்டுக்கு சென்றுவிட்டாள்
நேற்று காலுக்குள் கிடந்த நாய்க்குட்டி மட்டும்
வந்துவிட்டால் நிறைவாய் இருக்கும்
செம்புலிங்கம் வயலில் மருந்து தின்றுவிட்டு
ஓடைக்குள் கிடக்கும் நாய்க்குட்டிக்கு
யார் தகவல் அனுப்புவது?