Archive for October 27, 2014

இரா.முருகன் அவர்களின் அரசூர் வம்சம் அற்புதமான நாவல்.இரண்டு வருடங்களுக்கு முன்பு படிக்கையிலும் சரி,சமீபத்தில் மறுவாசிப்பு செய்கையிலும் சரி அதன் மொழிவளமும்,காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி ஆடும் பகடை ஆட்டமும் அவ்வளவு பிடித்துப்போனது.அதன் தொடர்ச்சியாக அவர் எழுதியுள்ள விஸ்வரூபம் நாவல் தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்றே எண்ணுகிறேன்.வாசிக்கத்தொடங்கிய இரண்டு இரவுகளில் எண்ணூறு பக்க நாவலின் பாதிப்பக்கங்களைக் கடக்க முடிந்ததற்கு காரணம் அதன் சுவாரஸ்யமான எழுத்து நடையும் காலத்தை குழப்பி ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்மை கதை மாந்தர்களை தேடவிடும் புத்திசாலித்தனமும்,போக சிந்தனையோடு அலையும் கதாப்பாத்திரங்களின் கொச்சையான வாழ்க்கைமுறையும் ஆகும்.அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை,உணவுப்பழக்கம் என்று சமஸ்கிருதமும்,மலையாளமும் கலந்த மயக்கும் தமிழில் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

ஆவிகளும் ஒரு கதாபாத்திரமாக கதை நெடுகிலும் பயணிப்பது அற்புதமான அனுபவம்.ஆவிகளோடு உறவு கொள்வதாய் எழுதியிருப்பது மாய மாந்த்ரீக உலகிற்குள் அடியெடுத்து வைப்பது போன்ற சிலிர்ப்பைக் கொடுக்கிறது.கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நாவல்.