Archive for December, 2014

சொல்வனம் 119 வது இதழில் எனது “வள்ளியும் நானும் ” என்ற சிறுகதை வெளியாகியுள்ளது.சொல்வனத்திற்கு நன்றிகள் 🙂

http://solvanam.com/?p=37580

Advertisements

வீட்டிலிருந்து கிளம்பி மரங்களற்ற மண்சாலையில்

வெகுதூரம் வந்துவிட்டார்

இப்போதுதான் நினைவுக்கு வருகிறது

கால் மாற்றியணிந்த முதிர்ந்த செருப்பின் உறுத்தல்

தூரத்து செம்மண் தரையில் கிறுக்கிய கோடுகளாய்

நிழல் பரப்பி நிற்கும், இலை களைந்த தூர் பருத்த

சீமைக்கருவேல மரத்தை அடைந்தபின்தான்

செருப்பை சரியாக அணியவேண்டும் என்கிறது உள்ளுணர்வு

இதுவரை உள்ளுக்குள் கழன்று கொண்டிருந்த

மற்ற எண்ணங்களுக்கு மத்தியில்

அதன் உறுத்தல் ஒன்றும் பெரிய விசயம் அல்ல

என்றாலும் சென்னி முடியிலிருந்து கசியும் வியர்வை

விரலிடுக்கு வழி அழுக்கேறிய கைத்தடியிலும் பிசுபிசுப்பது

நடக்க உவப்பானதாயில்லை

மெல்ல குனிந்து செம்மண் சூட்டில் கை நனைத்து

வியர்வையை துவட்டி விடுகிறார்

இதற்கிடையில் இடக்கைக்கு மாறியிருந்த

கைத்தடியை நுகர்கிறது கருத்த பெட்டை நாய்

அவரின் கால் நகர்ச்சியோடு ஒத்திசைகிறது

நாயும் அதன் நிழலும்..

கடற்கரையின் வெற்று சிமெண்ட் திண்டில் அமர்ந்திருக்கையில் மூர்க்கத்தனமாக ஒரு வழவழப்பான பேப்பரைக் கையில் திணித்தனர் இரண்டு யுவதிகள். അപ്ത്‌ല്ല സീ ഫുഡ്സ് என்ற மலையாள அக்ஸரங்களை எழுத்துக்கூட்டி வாசிக்க நான்கு நிமிடங்களாகியது.நண்டும்,இறாலும் விலை அட்டவணைக்கு மேல் நெளிந்துகொண்டிருந்தன.நண்டு ஆசை வாயில் அத்தனை சுரப்புகளையும் தூண்டிவிட்டதால் அடியில் குறிப்பிட்டிருந்த முகவரியை மனதிற்குள் தேடினேன்.என்னுடைய மனதிலிருந்த வரைபடத்திற்கு அப்பாலிருந்தது அந்த இடம்.யுவதிகளிடம் வினவலாம் என்றால் கரை கடந்திருந்தனர்.

அருகிலுள்ள பெஞ்சில் பருத்த மீசையும் வழுக்கைத் தலையும் கொண்ட டிபிக்கல் மலையாள சேட்டன் ஏதோ தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தார்.அவரிடம் வழங்கப்பட்டிருந்த வழவழ பேப்பர் கடலுக்கும் பெஞ்சுக்குமிடையில் அலைக்கழிந்து கொண்டிருந்தது.தாளை நீட்டி அந்த முகவரியை வினவினேன்.வாயால் அவரது வலப்புற காதைக் கடித்துவிடுவது போன்று முகத்தை அஸ்ட கோணலாக்கினார்.எதுவுமே நடக்காததுபோல் நகர்ந்து பின்னாலிருந்த தள்ளுவண்டிக்காரரிடம் வினவ,சரியாக நானிருந்த இடத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் பயணிக்கவேண்டும் என்றார்.புன்னகையை மட்டும் பதிலாக்கினால் சரியில்லையென்று,ஒரு நறுக்கிய வெள்ளரித்துண்டை அச்சாரத்தில் புரட்டி தின்றாயிற்று.

பைக்கின் முன்பக்க மாஸ்க்கினுள்ளும் அதே பேப்பரை திணித்து வைத்திருந்தனர்.பக்கத்திலிருந்த பைக்கைப் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா பைக்கிலும் திணித்து வைத்திருந்தனர்.ஆர்வம் அதிகமாகியது.எடுத்ததுமே ஐந்தாவது கியரை உசுப்பினால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதால் நிதானத்துடனே ஓட்டினேன்.மூன்று இடங்களில் விசாரித்து அந்த குறிப்பிட்ட பகுதியை வந்தடைந்தால் Abdulla sea foods என்ற பலகையைத் தாங்கி நின்றது ஒரு ஓட்டுவீடு.பைக்கை நிறுத்திவிட்டு விளித்தால் ஆள் அரவமில்லை.ஒருவேளை பின்பக்க வாசலுக்கு வந்துவிட்டோமோ என்று பதறி திரும்புகையில் எதிரே நின்றிருந்தார் ஒரு வாட்டசாட்டமில்லாத ஆள்.

“சேட்டா இங்க sea foods கிடைக்கும்னு சொன்னாங்க.ஆனா இங்க யாரையுமே காணலையே”

இந்த சமூகத்துக்கு என்னதான் ஆச்சு?!.பேசினால் என்ன குறைந்துவிடும்.மிகைப்படுத்தாமல் சொன்னால் கடற்கரையில் கிடைத்த தரிசனத்தைவிட சற்று அதிகம்.சரி இது வேலைக்காகாது என்று சற்று முன்னாலிருந்த ஒரு கடையில் கேட்டேன்.இவராவது திருவாய் திறக்கவேண்டும் என்று மனது அடித்துக்கொண்டது.

“ஹி ஹி ஹி இதாணு.அந்தா அவட காணுனில்ல ஆ ஸ்தலத்திலானு ஆரம்பிக்காம் போவின்னது.எந்தாலும் ஒரு ஆயிழ்ச்ச ஸமயம் எடுக்கும் தொடங்கான்”அவர் கைகாட்டிய இடத்தில் வேலை நடந்துகொண்டிருந்தது.

“பின்ன எந்தின போர்டு வச்சிருக்கினு”

“அது வெறுதயா ப்ப்ளிசிட்டி வேண்டிட்டா.கூடுதலு ஒண்ணும் மிண்டண்டா.போய்க்கோ”

அப்போதுதான் உறைத்தது.அதிலிருந்த நம்பருக்கு அழைத்திருந்தால் அப்போதே விசாரித்திருக்கலாமே என்று.நண்டுதான் கிடைக்கவில்லை திட்டவாவது செய்யலாம் என்று விளித்தால் தொடர்பு எல்லைக்கு வெளியிலிருந்தது நம்பர்.இனி வழக்கமாக சாப்பிடும் பீச் கடையிலேயே சாப்பிட்டுவிடலாம் என்று சென்றால்,நண்டைத்தவிர அனைத்து கடல்வாழ் ஜந்துக்களும் பெரிய அலுமினிய கொப்பரைக்குள் மிதந்தன.வேறுவழியற்று ஒரு பிளேட் பொரித்த செம்மீனோடு கடற்கரையில் நடந்தால் வரிசையாக கரைக்கு படையெட்டுத்தன நண்டுகள்.

வழிப்பறி

Posted: December 6, 2014 in அனுபவம்

வீட்டிலிருந்து பதினான்கு எஸ் வளைவுகள் கடந்து மேடேறினால் பிரதான சாலையை அடையலாம்.எட்டாவது வளைவைக் கடக்கையில் தொடை அதிர்ந்தது.பொதுவாக வண்டியில் செல்கையில் மொபைலை எடுப்பதில்லை என்றாலும் அன்று எடுத்ததற்கு என்ன காரணமென்று மாலைநேர சேர நாட்டு வீதிகளிலே உலவினால் அறியலாம்.நண்பன்தான் அழைத்திருந்தான்.இரண்டு வார்த்தை பேசுவதற்குள் “எங்கோட்டா” என்ற வார்த்தையோடு தோளில் விழுந்தது ஒரு முதிர்ந்த கை.செல்லும் திசையை கைகாட்டி நண்பனுடன் பேச்சைத் தொடர்ந்தேன்.பின்னால் ஏறி அமர்ந்துவிட்டார்.வண்டி ஒருபக்கம் சாய எத்தனிக்கையில் மொபைலை அணைத்துவிட்டேன்.அதிர்ஸ்டவசமாக வண்டி கீழே விழவில்லை.சிரித்துக்கொண்டிருந்தார்.அடர்த்தியான மீசை மூக்கு துவாரத்தை மறைத்திருந்தது.

சொல்லிட்டு ஏறிருக்கலாம்ல என்று சொல்லி முடிப்பதற்குள் “தங்க செயின் போட்டுருக்கியா” என்றார்.வழிப்பறித் திருடனை ஏற்றிவிட்டோமா என்று ஒரு நிமிடம் பதறினாலும் எங்கள் ஏரியாவில் வசிப்பவர்தான் என்பதால் அடுத்த கணமே “இல்ல சேட்டா அந்த அளவுக்கு வசதி இல்லை.இப்ப எதுக்கு கேக்குறிங்க” என்று வண்டியை முறுக்கினேன்.”நம்மட வீட்டு பெண்ணிண்ட எட்டு பவுன் சங்கிலி அறுத்து போயில்ல”என்றார்.அப்படியா சேட்டா என்று கேட்டு தொடர்வதற்கு மனமில்லை காரணம் அந்த சம்பவத்தின் முழு சாரம்சமும் தெரியும் அவர் வீட்டுப்பெண் என்பதைத்தவிர.

நான் இங்கு வந்து கேள்விப்பட்ட முதல் திருட்டு சம்பவம் அதுதான்.எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலையில் மாலை ஐந்து மணிக்கு வேலை விட்டு வந்துகொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பதம் பார்த்து விட்டனர்.எட்டு பவுன் செயின் என்பதால் அறுக்கையில் கழுத்தில் காயம் மட்டுமில்லாமல் அருகிலிருந்த சாக்கடைக்குள் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.உடலெங்கும் சிராய்ப்புகள்.எட்டு மணிக்கு நான் வீட்டுக்குத் திரும்புகையில் நான்கு போலீஸ்காரர்கள் என்னை ஒரு கொலைக் குற்றவாளிபோல் கடும் விசாரணைக்குட்படுத்தினர்.நல்லவேளை வீட்டு ஓனர் அருகில் இருந்ததால் விரைவில் விசாரணை முடிந்தது.
நெரிசலான மக்கள் நடமாட்டமுள்ள இந்தப் பகுதியிலே திருட்டு என்றதும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.கண்டிப்பாக இந்த ஏரியாவிலுள்ள பழக்கப்பட்ட ஆட்களாகத்தான் இருக்குமென்ற ரீதியில் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.

“எந்தா ஒண்ணும் மிண்டாது”என்றார்.இல்லை சேட்டா நானும் கேள்விப்பட்டேன்.பாவம் இப்ப எப்படி இருக்கு காயம். திருடுனவன கண்டுபிடிச்சிட்டாங்களா என்று கேள்விகளை அடுக்கினேன்.காயம் ஆறியதைத் தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை.பிரதான சாலையில் இறங்கி “பாத்து கவனமா நடந்துக்குங்க தம்பி” என்று நகர்ந்துவிட்டார்.

வீட்டுச் சாவியை எப்போதும் வீட்டு முன்னாலுள்ள தூண் மறைவில் வைப்பதுதான் வழக்கம்.வீட்டைக்கொள்ளை அடித்துவிடுவார்களோ என்று ஒருகணம் பயம்.”ஒரு டிவிப்பெட்டி,அஞ்சாறு பாத்திரம், எடைக்கு போட்டா நூறு ருவா கூட தேறாத புக் இதயெல்லாமா கொள்ளையடிப்பானுவ” என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டே,நூறாண்டு சோகத்தை இமையில் தேக்கிவைத்தவாறு டிரைவர் சீட்டிற்கு பின்னால் நின்ற யுவதியை நோக்கியவாறு பேருந்தைத் தொடர்ந்தது வண்டி.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரேபியாவிலிருந்து பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டு பெரிய வணிகத்தளமாக செயல்பட்ட இடம் கோழிக்கோட்டிலுள்ள மிட்டாய்தெரு.சேரன் செங்குட்டுவன் காலத்தில் இங்குள்ள பெய்ப்பூர் துறைமுகம்தான் மிகச்சிறந்த வணிகத்தளமாக சிறந்து விளங்கியிருக்கிறது.வாஸ்கோடகாமா வந்திறங்கிய அந்த துறைமுகம் சேரர்களின் வாரிசுச் சண்டையில் மணல்கொண்டு நிரப்பப்பட்டு பொலிவிழக்க மிட்டாய்தெருதான் இங்குள்ள மிகச்சிறந்த வாணிப மையமாக விளங்கியிருக்கிறது.

அந்தத் தெருவின் முகப்பில் ஒரு சிலையிருக்கிறது.யாரென்று இதுவரை ஏறிட்டுப் பார்த்ததும் இல்லை.பார்க்க வேண்டும் என்று தோன்றியதும் இல்லை.இன்று எப்படியாவது சென்று பார்க்கவேண்டுமென்று தோன்றுகிறது.காரணம் நேற்று படித்த விசக்கன்னி என்ற மலையாள மொழிபெயர்ப்பு நாவல்.இந்த நாவலை எழுதியவர் எஸ் கே பொற்றேகாட்.கேரளாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.அவர் எழுதிய “ஒரு தெருவின்ட கத” என்ற நாவல் இந்தத் தெருவை மையப்படுத்தி எழுதப்பட்டது.

மிட்டாய்தெருவில் வாழ்ந்த வணிகர்கள்,பிச்சைக்காரர்கள்,தினக்கூலிகள்,வேசிகள்,அனாதைப்பையன்கள் ஆகியோரின் வாழ்வை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அந்த நினைவாக அவர் சிலையை நிறுவி விட்டனர்.இது குறித்து நம்மவர்கள் யாராவது எழுதியிருக்கிறார்களா என்று மேய்ந்ததில் ஆசான் மட்டும் மேலோட்டமாக இரண்டு கட்டுரை வரைந்திருக்கிறார்.இந்த நாவல் தமிழில் மொழிபெயர்ப்பாகி இருக்கிறதா என்றும் தெரியவில்லை.ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு கிடைத்தாலாவது பரவாயில்லை என்று இங்கு அவர் பெயரிலுள்ள நூலகத்துக்குச் சென்றேன்.ஒரு தேசத்திண்ட கத என்ற நாவல் மட்டும்தான் ஆங்கில மொழிப்பெயர்ப்பு உள்ளது என்றார்கள்.அதுவும் நான் கேரள நாட்டின் பிரஜையாக அவதரிப்பித்தால் மட்டுமே புத்தகத்தைத் தருவதாகக் கூறினர்.அருகில் ஒரு சுருட்டைமுடி யுவதி சேர நாட்டின் மினுக்கோடு நின்றுகொண்டிருந்தார்.சிரித்துவைத்துவிட்டு வந்திருக்கிறேன்.

SK_Pottekkat_Bust