Archive for January, 2015

வியா-பாரம்

Posted: January 22, 2015 in கவிதை

தோல்கருத்த கதலிப்பழக் குலையில்
கடைசி இரண்டு சுற்றுகள் எஞ்சியுள்ளன
கண்ணாடி பாட்டிலுக்குள் சிரிக்கின்றன
பூஞ்சை பூத்த நான்கு இனிப்பு அப்பங்கள்
உள்ளிவெட்டி கடலைமாவில் பிசைந்து போடப்பட்ட
போண்டா குளிர்ந்து கிடக்கிறது தகரத்தட்டில்
ஆடைக்கடியில் மறைந்து கொதிக்கிறது
மீந்திய எருமை மாட்டுப்பால்
நெய்பட்டாணி அடைபட்ட மங்கிய பாட்டில்
பல நாட்களாக ஒரே அளவில் நிற்கிறது
கருத்த செவ்வகவடிவ கல்லாப்பெட்டிக்குள்
அடைந்து கிடக்கும் கசங்கிய தாளும் நாணயங்களும்
நாளைய கடலை மாவுக்கும் பாலுக்குமாவது
எஞ்சினால் இன்று நல்ல வியாபாரம்தான்

Advertisements

சொல்வனம் 120-வது இதழில் என்னுடைய சிறுகதை வெளியுள்ளது.சொல்வனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙂

http://solvanam.com/?p=37749

பக்ஷணம்

Posted: January 19, 2015 in அனுபவம்

ஆங்கில எழுத்தின் “C” போல வளைந்து குழிந்து நின்றது குட்டிபுரம் புகைவண்டி நிலையம்.அடைகையில் காலை பதினோறு மணி.குறுகலான தெருவில் ஒடுங்கிய இடுக்கில் பக்ஷணக்கடை.கள்ளிக்கோட்டையிலிருந்து குட்டிபுரத்திற்கு பைக்கில் வந்ததொன்றும் அத்தனை சுலபமாயிருக்கவில்லை.நடுவில் உடுமலையிலிருந்து நுங்கு வெட்டி வந்து விற்பனை செய்யும் பால்ராஜிடம் இளங்கண் நுங்கு இரண்டு தின்றிருந்தது அடித்த வெயிலில் அரைமணி நேரத்தில் ஆவியாகியிருந்தது.வழக்கம்போல புரோட்டா,ஆப்பம்,புட்டு என்றில்லாமல் கஞ்சி கிடைத்தது.குருவை அரிசியில் தேங்காய் துருவலில் ஊறி உப்பேறிய கஞ்சி.குழைய வெந்த குருவை அரிசியின் மணம் தேங்காய் துருவலோடு அற்புதமாக இருந்தது.தொட்டுக்கொள்ள தேங்காய் எண்ணெயில் பூண்டு,மஞ்சள்,வரமிளகாய் அரைத்து பொறித்த மத்தி மீன்.பூண்டை மைபோல் அரைக்காமல் நத்தலும் குத்தலுமாக அரைத்து மொறுமொறுவென பொறித்திருந்தார்கள்.நான்கு சதைப்பற்றுள்ள தடித்த மீன்கள் எந்தத் தடங்கலுமின்றி விறுவிறுவென இரைப்பையை நிரப்பின.

இதேபோல் வேலை பார்க்கும் நிறுவனத்தில் காலை,மதிய உண்வு கொடுத்துவிடுவார்கள்.காலை உணவு பதினோறு மணிக்குத்தான் தயாராகும் என்பதால் மதிய உணவு மட்டும் அங்கு சாப்பிடுவது வழக்கம்.அன்றைய தினம் காலை உணவு அங்கே சென்று சாப்பிடலாம் என்று தீர்மானித்து ஒரேயொரு நேந்திரம் பழத்தின் துணையோடு காத்திருந்தேன்.அதற்கு முன்பாக அங்குள்ள காலை உணவைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

மஞ்சள்,பச்சைமிளகாய்,பூண்டரைத்து குழைய வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு.தொட்டுக்கொள்ள பூண்டு,வெங்காயம்,கருவேப்பிலை,உப்பு,தேங்காய்,புளி மொத்தமாக அம்மியில் வைத்து அரைத்த சம்மந்தி.அது மட்டுமல்ல.துண்டாக்கி குருமிளகிட்டு,குடம்புளி கரைத்து, தக்காளி வதங்கலில் திளைத்த மத்தி மீன்சாறு.குடிப்பதற்கு தேங்காய் துருவியிட்ட பொன்னி அரிசிக் கஞ்சி.இந்த மெனுவில் மாற்றமென்றால் மரவள்ளிக் கிழங்கிற்குப் பதிலாக வேறு ஏதாவது செய்வார்கள்.

  • மரவள்ளிக் கிழங்கையே உடைத்த சிறுபயிறுடனோ/பலாக்காயினுடனோ வேக வைப்பார்கள்.
  • துண்டாக்கிய வாழைக்காயை,சிறு பயிறு,மரவள்ளிக் கிழங்கோடு வேகவைப்பார்கள்
  • அவித்த கொண்டைக்கடலையில் தேங்காய் அரைத்தும்,வறுத்தும் இட்டு குழைத்து கொடுப்பார்கள்.கீறிய காய்ந்த மிளகாய் மணம் அற்புதமாக இருக்கும்.
  • பச்சைப்பயிறு அவித்து தேங்காய் துருவலில் தாளித்து புரட்டி வைப்பார்கள்.

தொட்டுக்கொள்ள வழக்கம்போல மீன்சாறும்,தேங்காய்த் சம்மந்தியும்,கஞ்ஜியும் உண்டு.

நேரம் பத்து மணியாகிருந்தது.பசி வெறித்தனமாய் வெகுண்டெழுந்து குடலைச் சுருட்டிக்கொண்டது.கிளையண்டிடமிருந்து ஒரு அழைப்பு.அவசரமாக மின்சாரவாரிய அலுவலகத்திற்குச் செல்லவேண்டுமென்றும் பத்து நிமிடத்தில் வண்டி வரும் என்றும் கூறினார்.நான் எப்போதெல்லாம் அங்கு சென்று சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறேனோ அப்போதெல்லாம் இப்படி ஏதாவது ஒரு கூத்து நடக்கும்.

அரைமணி நேரம் கழித்து வண்டி வந்தது.கப்பையும்,கஞ்சியும்தான் சாப்பிடவேண்டும் என்று மனதிற்குள் ஆழப்பதிந்ததையும் மீறி ஏதாவது சாப்பிடலாமென்றால் பெரிய ஆப்பிளை வாய்க்குள் திணித்ததைப்போல் அமர்ந்திருந்தார் உடன் வந்தவர்.அவரிடம் அனுமதி வாங்கி ஹோட்டலில் சாப்பிடுவதற்கு பட்டினியே கிடக்கலாம் என்பதால் மதிய உணவை எண்ணியவாறு அமர்ந்துகொண்டேன்.பத்து நிமிடத்தில் சென்றுவிட்டோம்.பார்க்க வரச் சொல்லியிருந்தவர் வந்திருக்கவில்லை.அருகில் கிடந்த தேசாபிமானியில் படங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.அதற்கு பின்பு நடந்ததைக் கூறும் அளவுக்கு மனோ தைரியமில்லை.இறுதியாக இரண்டு மணிக்கு அங்கு கொடுத்த ஆறிப்போன ஒரு கட்டன் சாயா குடித்ததாக நினைவு.

பாதையற்ற மலைச்சரிவில் தோள் உரசி நிற்கும் நாணற்புல் விலக்கி நடக்க வாய்த்தது.பச்சை நாணற்புல் அல்ல.மார்கழி வெயிலில் பச்சையம் இழக்கத் தொடங்கும் முரட்டு நாணற்புல்.அதற்கென்று பிரத்யேக மணம் உண்டு.அதிலும் இங்கு வளர்ந்துள்ள புற்கள் குத்துச் செடியாய் அடர்ந்து வெட்டிவேரைப் போல் மணக்கின்றன.அதன் சுகந்தத்தில் திளைத்தவாறு நடக்கையில் பள்ளக்குடி விளை தாண்டி வெங்காடம்பட்டி செல்லும் ஒற்றையடிப் பாதையின் பின் மார்கழி வாசம் எட்டிப் பார்த்து மறைந்தது.

பின் மார்கழியில் புஞ்சைக் காடுகளுக்கென்று தனி வாசம் உண்டு.வெள்ளைப் பயிறு வெடித்து கிடக்கும் விளையில் பயித்தஞ்செடியின் அடியிலையில் அப்பியிருக்கும் வாசம்.அவைகளினூடே வளரும் காட்டுக் கொடிப்புல்லைப் பிடுங்கி வேலியில் எறிகையில் அது பதமாய் காய்ந்து,வேரில் அப்பியிருக்கும் ஈர மண்ணோடு காற்றில் பரப்பும் வாசம்.மஞ்சணத்திப் பூக்களின் வாசம்.ஓடைக்கருவை மலரின் வாசம்.நாயுருவிச் செடியோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் பெயரறியாக் கொடியின் வாசம்.வழியின் இரு மறுங்கிலும் அடைத்துக் கிடக்கும் கொளிஞ்சிச் செடியின் வாசம்.தும்பைச் செடியின் வாசம்.இவையெல்லாம் கலந்து வரும் காற்றில் மென் வெயிலின் தீண்டலோடு வடிவமற்ற ஒற்றையடிப்பாதையில் நடக்கையில், மூச்சுக் குழலின் சுவரெங்கும் அதன் வாசம் படிந்து பரப்பும் உள்ளக் கிளர்ச்சி ஒரு தனி அனுபவம்.

இதேபோல் நஞ்சை நிலத்து சகதியும்,நீரும்,பாலேறி பொதி தள்ளிய நெல் நாற்றும்,வரப்பில் பூக்கும் நீருள்ளிச் செடியும் ஒருவித வாசம்.களை பறிக்கையில் சகதியும் களைப்புல்லும் கலந்து ஒரு வாசம் வரும்.அதன் பிரத்யேகம் எந்த வாசனைத் திரவியத்திலும் கிட்டாது.

எல்லா மணங்களும் மல்லு கட்டிக்கொண்டு மூச்சுக் குழலுக்குள் சுழன்றாலும் வாசனை நீர் தெளிக்கப்பட்ட இந்த குளிரூட்டப்பட்ட அறையில் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை.

பக்கத்து வீட்டில் பூனை வளர்க்கிறார்கள்.மன்னிக்கவும் என்னைத்தவிர சுற்றியுள்ள எல்லா வீடுகளிலும் பூனை வளர்க்கிறார்கள்.கடந்த வருடத்திற்கு முந்தைய வருட மழைக்காலத்தில் ஒருநாள் புறவாசல் திறக்கையில் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள் புண்ணியவதி.என்னைக் கண்டதும் ரட்சிக்க வந்த கடவுளாக எண்ணினாளோ என்னவோ மீண்டும் மீண்டும் அபலைக்குரலில் தத்தளிக்கத் தொடங்கினாள்.சொல்லொணாத் துயரத்தில் கிடந்தவளைக் காணச் சகிக்காமல் காய்ந்த பழைய துணிகளை அள்ளிக் கொண்டுவந்து நனையாத ஒரு திண்டில் போடவும் சுகப்பட்டு,அதிலேயே ஜீவிதம் நடத்தத் தொடங்கினாள்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் புறவாசல் திறக்கப்படும் என்பதால் அதுவரை அவள் என்ன செய்கிறாள் என்றெல்லாம் ஆராய்வதில்லை.அன்றைய தினம் எலும்புத் துண்டுகளொடு அவளைச் சந்திக்கையில் பேருவகை கொள்வாள். மற்ற நாட்களில் காலையில் வேலைக்குக் கிளம்புகையில் திண்டில் கிடந்து எனக்கு சிக்கன் எப்படா போடுவ என்கிற ரீதியில் பார்த்துக்கொண்டிருப்பாள் அல்லது வழக்கமான மென்சோக ராகத்துடன் குழைவாள். தடவிக்கொடுத்தால் கண்ணை மூடிக்கொள்வாள்.இப்படியாக ஆத்மார்த்தமான சினேகிதத்துடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தவள் அவளுடைய கூட்டாளிகளையும் அழைத்துவந்து இருப்பிடத்தை விசாலமாக்கிக் கொண்டாள்.

குளிர்காலம் தொடங்கியது.என்ன காரணத்தினாலோ பழைய இடம் அவளுக்கு வசதிப்படவில்லை போலிருக்கிறது.போர்டிகோவில் பைக்கின் இருக்கைக்கு இடமாற்றம் செய்துகொண்டாள்.வெறுமனே கிடந்துறங்காமல் காலால் சீட் கவரை பிராண்டத் தொடங்கியவள் அதிலுள்ள பஞ்சைக் கண்டதும் பேரானந்தம் அடைந்திருக்கிறாள் என்பதை அடுத்தநாள் காலையில் உணர முடிந்தது.பாதி கிழிந்த இருக்கையை அதற்கடுத்த நாள் நிறுத்தியதும் துணியால் சுற்றி வைத்திருந்தேன்.முரட்டு கோவக்காரி துணியைக் கிழித்து கந்தலாக்கி துவம்சம் செய்துவிட்டாள்.

சிலகாலம் சீட் கவரை மாற்றாமல் அப்படியே வைத்து ஓட்டிக்கொண்டிருந்தேன்.இவளையும் மறந்துவிட்டேன்.கூர்ந்து கவனிக்கையில் இப்போதெல்லாம் அவள் சீட்டில் வந்து படுப்பதில்லை என்று மட்டும் உறுதியானது.சரி சீட் கவரை மாற்றிவிடலாம் என்று நேற்றுதான் மாற்றினேன்.மாயமாய் எங்கு மறைந்திருந்து பார்த்தாளோ புண்ணியவதி புதிய கவரில் வேலையைத் தொடங்கிவிட்டாள்.இன்றைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.வீட்டு ஓனரிடம் சாக்கு வாங்கித்தான் கட்டவேண்டும்.

இரண்டு இரவுகள் இரணியலில் வாழ்ந்துவிட்டு வந்தது போலிருக்கிறது.திரவி என்ற திரவியத்தின் 15 வயதிலிருந்து 25 வயதிற்குள் அவனுடைய குடும்பத்திலும்,ஊரிலும் நடக்கும் சமுக மாற்றங்களை எந்த பாசாங்கும் இல்லாமல் அப்படியே கண்முன் நிறுத்துகிறது நாவல்.நாவல் முழுக்க மூன்று தலைமுறை ஆட்களின் வாழ்வியல் அற்புதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாவல் வெறுமனே தட்டையாக நகராமல் ஊரிலுள்ள பெரும்பான்மையான குடும்பங்களின் வேர் முதல் துருவி அத்தனை கதைமாந்தர்களையும் கதைக்குள் நேர்த்தியாக பயணிக்கவிட்டு, எந்தத் துருத்தலும் இல்லாமல் அவர்களின் கொச்சையான வாழ்வை அப்படியே பதிவு செய்திருக்கிறது.முக்கியமான கதைமாந்தர்களான திரவி,உண்ணாமலை ஆச்சி,நாகு அக்காள்,குத்தாலம்,நாகு அக்காளின் கணவன்,திரவியின் தந்தை இவர்களுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வந்தாலும் நேர்த்தியாக பின்னப்பட்ட வலைக்குள் சிக்கிய புறவைப்போல இந்த கதாபாத்திரங்கள் நம்மை முழுதும் ஆட்கொள்கின்றன.

நாவலை எனக்கு சுவாரசியமாக்கியது நான்கு விசயங்கள்.

1)நாகர்கோவில் வட்டார வழக்குமொழி.படிக்கும்போதே அவர்கள் பேசும் ராகத்தையும் நினைத்துக்கொள்கையில் அத்தனை சுகமாயிருக்கிறது.கொச்சைச் சொற்கள் கலந்து பேசும் வழக்குமொழி கதைமாந்தர்களை இன்னும் நமக்கு நெருக்கமாக்குகிறது.

2)ஒரு சாதிய அமைப்புக்குள் நடக்கும் அத்தனை சடங்கு சம்பிரதாயங்களையும் நேர்த்தியாக பதிவு செய்கிறது நாவல்.குழந்தை பிறப்பு,காதுகுத்து,ஊர் திருவிழா,கல்யாணம்,பண்டிகைகள் என எல்லாவற்றையும் கதையினூடே சொல்லிவிட்டு,உண்ணாமலை ஆச்சியின் இறப்பில் மரணவீட்டின் நடைமுறை வாழ்வியலை பதிவுசெய்தவாறு கடக்கிறது.

3)ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாத்திரப் படைப்புகள் எப்போதும் நம்மை ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்கிறது.திரவியின் இயலாமையும் வைராக்கியமும்.உண்ணாமலை ஆச்சியின் பழைய சம்பிரதாய வேரிலிருந்து மண்ணை உதிர்த்துக்கொள்ளாத தன்மை,நாகு அக்காளின் தனிமை மனவோட்டங்கள்,குத்தாலத்தின் வெளிப்படையான வாழ்வியல்,நாகுவின் கணவன் ஆண்மையின்மையால் செய்யும் தவறுகள் என ஒவ்வொரு பாத்திரத்தின் மன எழுச்சியும் நிலவியலோடு பயணிக்கிறது.

4)மிகவும் முக்கியமான ஒன்றாய் கருதுவது விவரணைகள்.உதாரணத்திற்கு திரவி பள்ளி முடிந்து அடுப்பாங்கரைக்குள் செல்கிறான்.அம்மா அம்மியில் மசாலா அரைத்துக்கொண்டிருக்கிறாள்.இதை நாவலில் விவரித்திருக்கும் இடம் உச்சக்கட்ட காட்சிப்படிமம்.கதை நெடுக பின்னிப்பிணைந்து கிடக்கிறது நிலவியல் சம்மந்தமான அத்தனை விவரங்களும்.

தன்னுடைய இயலாமையால் ஒரு பெண்ணின் வாழ்வை நாசமாக்கும் ஒருவனின் கதாபாத்திரம் இறுதியில் சட்டென மனநிலை பிறழ்வது,குத்தாலத்தின் மரணம் என்று அடுத்தடுத்து நிகழ்வது மட்டும் சற்று உறுத்தலாக இருக்கிறது.படித்து முடிக்கையில் ஒரு ஊரில் வாழ்ந்துவிட்டு நாமும் திரவி குடும்பத்தைப்போல நடுத்தெருவில் நிற்பதுபோல ஒரு உணர்வு.தமிழில் ஒரு இதிகாசம் என்று வண்ணநிலவன் முன்னுரையில் கூறியிருப்பது எள் முனையளவும் பொய்யல்ல என்பது திண்ணம்.