Archive for February, 2015

பிரபஞ்சம்

Posted: February 17, 2015 in பொது

http://www.tamilpaper.net/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

Advertisements

கொல்லம் ரயில்வே ஸ்டேசனில் இறங்கும்போது இரவு எட்டுமணி.ரயில்வே ஸ்டேசனிலிருந்து பேருந்து நிலையத்தை இணைக்கும் பாலத்தின் பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன.புதிதல்ல கடந்த ஆறு மாதங்களாக நடந்துகொண்டிருக்கின்றன.பாலம் பணி எப்போது முடியும் என்று அந்த ஆட்டோக்காரரிடம் கேட்டது என் பிழைதான்.இருந்தாலும் அவரது அறச்சீற்றத்தை ஆமோதித்துக்கொண்டேன்.இறுதியாக இவ்வாறு முடித்தார்.”என்னு இவமாரு ஈ லோக்கல் ஆள்காரு கொண்டு பணியெடுக்காந் தொடங்கியோ அப்பளே தோற்று”.நல்லவேளை அந்த சமயம் பேருந்து நிலையத்தை அடைந்திருந்தோம்.

வயிறு பசிக்காததுபோல் இருந்தது.இருந்தாலும் தென்காசிக்கான பேருந்து வந்திராததால் இரண்டு சப்பாத்தியைப் பிய்த்துப் போடலாம் என்று அந்த சைவ ஹோட்டலுக்குள் சென்றேன்.ஏன் இவர்கள் சப்பாத்தியை வேக வைக்காமல் பச்சையாக உண்கிறார்கள் என்று விளங்கவே இல்லை.கள்ளிக்கோட்டையிலும் சப்பாத்தி சாப்பிட்டு அதன் மேலுள்ள ஈர்ப்பே போய்விட்டது.மைசூரில் இருக்கும்போது சமைக்க வரும் பெண்மணி மணக்க மணக்க,கருப்பு பொட்டுகளுடன்,பிய்த்தால் நனைந்த பேப்பரைக் கிளிப்பது போன்ற இலகுவான சப்பாத்தியைச் சுட்டு அடுக்குவார்.அங்குதான் சப்பாத்திமேல் அதிக ஈர்ப்பு வந்தது.ஆனால் இங்குள்ளவர்கள் சப்பாத்தியை வேகவைப்பதில்லை.பச்சை மாவாக,நைஸ் பத்திரி போன்று தின்கிறார்கள்.இருக்கட்டும்.ஒருவாறாக இரண்டு சப்பாத்தியை பிய்த்துப்போட்டு நான்கு மிடர் கொதித்து அடங்கிய நீரை விழுங்கினேன்.

கொல்லம் பேருந்து நிலையத்திற்கான சகதியும்,மீனும்,சாக்கடையும் கலந்த பிரத்யேக மணத்தோடு நுழைகையில் மூன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் கொல்லத்திலுள்ள பிரத்யேக ஸ்தலங்களை அடுக்கிக்கொண்டிருந்தன.ஒரு வெற்று பார்வையை அருகிலிருந்த கடைக்குள் செலுத்த ஓடி வந்து கைப்பிடித்துக் கொண்டார் கடைக்காரர்.சேட்டா விடுங்கள் விடுங்கள் என்று புழுங்கினேன்.சர்பத்தோ,சாயாவோ குடித்தேயாகவேண்டும் என்றார்.அங்கு அமர்ந்திருந்த நான்கு பேரின் கண்களும் சோர்ந்து என்னை பரிகசிப்பதுபோல் இருந்தன.இருந்தாலும் ஒரு லைம் சோடா வாங்கிக் குடித்துக்கொண்டேன்.

ராஜபாளையம் செல்லும் பச்சை வண்ணப் பேருந்து வந்தடைகையில் தொண்டை கவ்வ ஆரம்பித்திருந்தது.ஆஸ்துமா நோயாளிபோல் இருமிக்கொண்டிருந்தேன்.பேருந்தில் ஏறும்போது கூட்டம் இல்லை.ஆனால் எல்லா இருக்கையிலும் சாக்குப்பை,தண்ணீர் பாட்டில்,கசங்கிய சீசன் துண்டு,என்று ஏதாவதொன்று கிடந்தது.இருவர் அமரும் இருக்கையில் ஒருவர் தனித்திருந்தார்.அவரருகில் யாரும் வராததால் அமர்ந்துகொண்டேன்.அடுத்தாலுள்ள மூவர் அமரும் இருக்கையில் ஒரு முதிர்ந்த தம்பதியும்,ஒரு பெண்ணும்.என்னை ஜன்னலோரம் அமர்த்தினார் சேட்டன்.அருகிலிருந்த பெண்ணிடம் அவர் பேசிக்கொண்டதிலிருந்து இருவரும் தம்பதியரென்றும்,மற்றவர்கள் பெற்றோரென்றும் புரிந்தது.கண் ஜாடையிலேயே தந்தையை ஏதோ திட்டிக்கொண்டிருந்தார்.

டிரைவர் வந்து சாவியைத் திருகியதும் எங்கிருந்தோ ஒரு கூட்டம் ஓடி வந்து அப்பிக்கொண்டது.அந்த அதிர்வில் என்னருகில் ஒடிந்து போயிருந்த ஜன்னல் கம்பி கைபாரம் தாங்காமல் தொங்க ஆரம்பிக்கவும் கையை வெடுக்கென்று எடுத்தேன்.தம்பி ஒடிச்சிப்புடாதிய குரல் கேட்டு திரும்பினால் என்னருகில் இருந்தவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார் அவர்.அதற்குள் கண்டக்டரும் ஒடுச்சிட்டியளா என்றவாறே ஒரு கயிறெடுத்துக் கட்டத் தொடங்கினார்.அருகிலிருந்தவர் ஸாஜகான் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.முகத்தில் உளைத்துக் களைத்தப் பெருமிதம்.சிரிக்க சிரிக்கப் பேசினார்.கொல்லத்திலிருந்து 12ரூபாய் பேருந்து கட்டண தூரத்தில் இருந்தது அவரது கிராமம்.பொட்டல் புதூர் மசூதிக்குச் செல்வதாகக் கூறினார்.இரவு ஒரு மணிக்கு பேருந்து ஏதும் இல்லையே பொட்டல் புதூருக்கு என்றதற்கு “பஸ் ஸ்டாண்டில் படுத்துறங்கி அதிகாலை ஐந்து மணி வண்டியில் செல்வதாகக் கூறினார்.அன்று மாலையே திரும்புவதாக உத்தேசம்.இத்தனையும் கூறி முடிக்கையில் பேருந்து கொல்லம் எல்லை கடந்து சென்றுகொண்டிருந்தது.நின்றிருந்த மனிதரின் காலிடுக்கு வழி அந்த மூவரின் முகங்களையும் பார்த்தேன்.அசைவற்று எதிலோ நிலைத்திருந்தன.

நான் பேச்சை நிறுத்த “சேட்டா அரபி அரியுமோ’என்று நா பிரண்டார் நின்றவர்.”ஓ”என்று சிரித்தவரிடம் “நானும் கடைய நல்லூரு ஸ்கூல அரபி படிச்சு”என்றார் உடைந்த மலையாளத்தில்.சாராய நெடி முகம் கொள்ள முடியாததால் ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டேன்.நின்றவர் திரும்பி மூவரையும் வெறித்துப் பார்த்துவிட்டு,

“எவட போது”

“பள்ளிக்குப் போவுன்னு”

“எதுக்கு”

“பள்ளிக்கு எந்தின போவும் எல்லாரும்”

“அதான் எதுக்கு”

“அது பறயாம் பற்றில்ல”

“அது யான் பரய முடியாது”

“சேட்டன் வேணங்கில் இவிட இருக்கி.ஞான் நின்னொள்ளாம்”

“எனக்கு என்ன பிரச்சினை.நான் ராஜபாளையம் வரை நின்னே போவும்”

பேச்சு நிற்கவும் அவரைப் பார்த்தேன்.என்னருகில் இருந்தவரையே வெறித்துக்கொண்டிருந்தார்.என்னிடம் சிரித்துக்கொண்டார் அவர்.மீண்டும் தொடங்கினார்.

“சேட்டாவுக்கு குட்டியளு உண்டோ”

“ரெண்டு குட்டியளு உண்டு. ஸ்கூல் படிக்கின்னு”

“குட்டியளயும் விளிக்கணுமில்லா”

“அவருக்கு நாள எக்ஸாம் உண்டு.பின்ன எண்ட வல்லியேட்டன் வீட்டிலா நிக்கினு.அதகொண்டு ஒண்ணும் கொழப்பமில்லா”

பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.இடையிடையே அவரது மனைவி இவரை நோக்கி கண் ஜாடை காட்டி ஏதோ வெறுப்பைப் பிரதிபலித்தார்.கொட்டாரக்கரா வந்ததும் இன்னும் கொஞ்சம் கூட்டம்.என் காலிடுக்கில் ஒரு சாக்குப்பையைத் திணித்துவிட்டு வாசலில் நின்று கொண்டார் ஒருவர்.கால் இரண்டடி உயர்ந்திருந்தது.நின்றிருந்தவர் சற்று நேரத்திற்கு வாசல் படிகளில் இறங்கி அமர்ந்துகொண்டார்.அந்த இடைவெளியில் அந்தப்பெண் அருகிலிருந்தவரிடம் கிசுகிசுத்தார்.மீண்டும் படியில் அமர்ந்தவர் அந்த இடத்துக்கே வந்துவிட்டார்.என் காலடியில் சாக்குவைத்தவர் “வண்டி நிக்கும்போது எறங்கி மூத்திரம் அடிக்க வேண்டியதானயா” என்றார்.அதைக் காதில் கேட்காததுபோல் சாரத்தைத் தூக்கிக் கட்டி வந்து நின்றுகொண்டார்.

சற்று தூரம் சென்றதும் “இவிட பெண்ணுங்களு இருக்கினில்ல.ஒண்ணு மாறி நிக்கு”என்றார் அந்தப் பெண்மணி.அவ்வளவு நேரமும் அந்த சேட்டனிடம் பேசிக்கொண்டே காலால் அந்தப்பெண்ணை உரசிக்கொண்டே வந்திருக்கிறார் என்று அந்தப்பெண்ணின் குமுறலில் தெரிந்தது.கண்ணில் பயமும்,கோபமும்.அருகிலிருந்தவர் “சேட்டா ஒண்ணு டச் செய்யாது நிக்கு.அவருக்கு அது இஸ்டம் ஆவுனில்லந்து பறயினில்ல”என்றார்.

“பாத்தியா.மலயாளம் புத்தியக் காட்டுத.எல்லா பொம்பளயும் என் வீட்டு பொம்பளதான்.உங்கிட்ட இவ்வளவு அன்பா பேசிருக்கென்.நீ உன் புத்திய காட்டுதப் பாத்தியா”

“என்டடுத்து சம்சாரிச்சா எல்லாம் சரியோ”சண்டை வலுக்கவே கண்டக்டர் பதறியடித்து வந்தார்.அந்த முதிய தம்பதியர் செய்வதறியாது திகைத்து அமர்ந்திருந்தனர்.அவரை அப்புறப்படுத்தி முன்னால் டிரைவர் அருகிலுள்ள சிறிய சந்தில் அமர்த்தினார் கண்டக்டர்.அங்கிருந்தும் கத்திக்கொண்டிருந்தார் தென்காசியில் நாங்கள் இறங்கும்வரை.தென்காசியில் வண்டி காலியாகவும் பின்னால் சென்று படுத்துக்கொண்டார்.இறங்கியதும் அந்த நால்வரும் பேருந்து நிலையத்தில் திருநெல்வேலி பேருந்து வரிசையின் மூலையில் கிடந்த இருளை நோக்கி நடந்தனர்.நீண்ட நேரத்திற்கு அந்தக் காட்சி கோட்டோவியமாய் நெஞ்சில் பதிந்து அழுத்தியது.

அடுத்த நாள் அதேபோல் ஆலங்குளத்திலிருந்து திருநெல்வேலி சென்றுகொண்டிருந்தேன்.இதுவரை சென்ற பல்லாயிரக்கணக்கான முறையும் நின்றேதான் சென்றிருக்கிறேன்.அன்றும் இருக்கையில்லை.முன் வாசலில் நின்றிருந்தேன்.கூடவே ராணி அண்ணா கல்லூரிக்கு டிக்கெட் எடுத்த யுவதியர்.வலப்புற வகிடெடுத்திருந்தவர் சிகை ஒப்பனையில்லாமல் அழகாயிருந்தது.அப்போதுதான் நனைந்து துவண்ட நெகிழ்ச்சி.மனோன்மணியம் பல்கலைக்கழக நிறுத்தத்தில் ஏறினார் ஒரு பெண்மணி.சேலை தரையோடு கிடந்து இழுத்துக்கொண்டு வந்தது.கண்டக்டர் வந்து நிற்கவும் உள்ளே செல்ல எத்தனித்தவர் திடீரென “சார் சேலைய உடுங்க சார்.சார் சேலைய உடுங்க” என்று கத்தத் தொடங்கினார்.பதறியடித்து திரும்பினால் பின்னாலுள்ள இருக்கையிலிருந்த அனைவரும் எழும்பி விட்டனர்.பார்த்தால் தரையில் கிடந்த சேலையை தெரியாமல் மிதித்துவிட்டார் கண்டக்டர்.அந்தப்பெண்ணுக்கு சேலை அவிழ்வதுபோல் தோன்றவே பெருங்குரலெடுத்துவிட்டார்.”ஏம்மா தெரியாம மிதிச்சதுக்கு என்னமோ நாந்தான் சேலைய உறிஞ்சமாதி கத்துதிய”என்றதும் அவருக்கு கோபம் தலைக்கேறியது.உங்க வீட்டுப்பொண்ணா இருந்தா இப்பிடி பண்ணுவீங்களா என்று என்னவெல்லாமோ பேசிக்கொண்டேயிருந்தார்.கண்டக்டர் காது கேளாதவர் போல மெல்ல நகர்ந்து பின்னால் சென்று அமர்ந்துகொண்டார்.திட்டிய சுரம் குறையாமலே பழையபேட்டையில் இறங்கிவிட்டார் அந்தப்பெண்மணி.அப்போதும் சேலை தரையில் கிடந்து இழுத்துக்கொண்டு சென்றது.

பேருந்து நிலையத்தில் திரும்பும்போதே கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வந்தது.கைக்குட்டை,கூடைப்பை,காலண்டர்,பழப்பை என்று கைக்கு கிடைப்பதெல்லாம் ஜன்னல் வழி இருக்கையில் எறிந்தனர்.நான் எழும்புகையில் ஜன்னல் வழி ஒரு குழந்தையை நீட்டி “தம்பி இந்த பயல சீட்ல வைங்க” என்றார் ஒருவர்.செய்வதறியாது நிற்கையில் தம்பி உங்களத்தான் என்றதும் அந்தப்பையனை ஜன்னலில் இடிக்காமல் வாங்கி இருக்கையில் அமர்த்தினேன்.குழந்தையின் கண்ணில் வழியாமல் திரண்டிருந்தது கண்ணீர்.