Archive for March, 2015

“டா நிக்கடா”

பைக்கின் முன்னால் கை இரண்டையும் விரித்தவாறு முட்டுப்போட்டார்.பந்துகிண்ணமூட்டிற்கு கீழ் ஒரு கோணத்திலும்,மேல் ஒரு கோணத்திலும் வளைந்திருந்த கால்கள் நிற்க திராணியில்லாமல் நடுங்கிக்கொண்டிருந்தன.வெளிறிய காவி முண்டு.அழுக்கு வண்ண முழுக்கை சட்டையை அக்குள் வரை மடித்துவிட்டிருந்தார்.முகத்தில் குறுக்கும் நெடுக்கும் போதையேறிய நரம்புகள்.

“எந்தா சேட்டா”என்றேன் வண்டியை அணைக்காமல்.

விடுக்கென்று வண்டியை அணைத்து சாவியை உருவிக்கொண்டார்.நண்பருடைய வண்டி என்பதால் பதறியடித்து இறங்கினேன்.எங்கள் பகுதியிலிருந்து பிரதான சாலையை அடையும் இடம் அது.பலசரக்குக்கடையினுள் சேட்டா ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.அதனையடுத்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ஏதோ காரசாரமான விவாதம்.யாருமே எங்களைக் கவனிக்கவில்லை.

“நீ ஆரா”

“சைபர் பார்க்ல பணி எடுக்குன்ன இன்ஜினியராணு.பாபேட்டன் வீட்டிலா தாமஸம்”

“அடடட..நம்மட பாபேட்டன் வீட்டிலா தாமஸிக்குன்னு.நன்னாயி”என்று நீண்ட நாள் பழகியவர்போல் கழுத்தை இறுக்கி அணைத்துக்கொண்டார்.சாராயமா?கள்ளா? குழப்பத்தில் நானும் அணைத்துக்கொண்டேன்.”ஞான் சுந்தரன்” என்று தொடங்கி சிறிது நேரத்திற்குள் அவரைப்பற்றிய முழுமையும் கூறினார்.கடையிலிருந்து சேட்டன் வெளிவந்தார்.

“ராகுல்காந்தி இவிட வந்த சமயத்து ஞானானு புள்ளிக்கு சோடா வேடிச்சு கொடுத்தது”என்று உணர்ச்சிப் பிளம்பாய் வெடித்துக்கொண்டிருக்கையில் கடைக்கார சேட்டன் வந்து “புள்ளி பாவம் ஆனு.ஒன்னு விட்டு வைக்கு.பணிக்குச் செல்லட்ட”என்று சாவியைப் பிடுங்கி கையில் தந்தார்.நானும் பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு வண்டியை எடுக்கையில் “அப்ப காணாம்”என்று கை உயர்த்தினார்.சிரித்து வைத்தேன்.

இந்த சமபவம் நடந்து இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிறது.அதன்பின் எப்போது அந்தப் பகுதியைக் கடந்தாலும் கை காணித்து முகமன் கூறாமல் இருக்கமாட்டார்.நானும்.அந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் அவரைக் கண்டதில்லை.

பின்பொரு நாள் காலையில் வெளிறிய வெள்ளை நிறப் புடவை சுற்றி அந்தக் கடை முன்னால் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார்.நெற்றிச் சந்தனம் பாதி கூட காய்ந்திருக்கவில்லை.ஈரத்தலையை குத்தாக முடிந்து விட்டிருந்தார்.பின்பக்கம் முழுவதும் ஈரம் கசிந்துகொண்டிருந்தது.தூரத்திலிருந்தே அந்தப் பெண்ணைப் பார்த்தவாறு வந்துகொண்டிருந்தேன்.கண் இமைக்கும் நேரத்தில் படாரென்று அந்தப்பெண்ணின் முதுகில் அறைந்தார்.அதற்குள் கடை முன்னாலிருந்தவர்கள் ஓடி வந்து பிடித்துக்கொண்டனர்.”எந்தாடி நினக்கு ஆறேழு புருசம்மாரு வேணொ”என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.மை தீட்டிய விழிகளில் கண்ணீர் நிரம்பியவாறு விறுவிறுவென்று அந்தப்பெண் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று விட்டார்.காணச் சகியாமல் நானும் கிளம்பிவிட்டேன்.

அதன்பின்னும் தொடர்ச்சியாக பார்க்கையிலெல்லாம் கை உயர்த்துவார்.நானும் சிரிப்பதுபோல் பாசாங்கு செய்வேன்.நல்ல வெயில் கொளுத்திய ஒரு மாலையில் அந்தப்பெண்ணை மீண்டும் கடற்கரையில் கண்டேன்.அருகில் வாட்ட சாட்டமான மீசை அடந்த இளைஞர்.கையில் பனிக்கட்டிலில் சர்க்கரைப்பாகு பொறிகடலை கலந்த கலவையை சுவைத்துக்கொண்டிருந்தனர்.சேலை நெகிழ்ந்து கிடந்தது.என்னுடன் வந்தவர் நான் தயங்கி நிற்பதைக்கண்டு ஏதோ சொல்ல எத்தனிக்கும் முன்  நகர்ந்தேன்.

அதன்பின் சாலையில் ஏதோ ஒரு புள்ளியில் சோகமே உருவாய் நடந்துகொண்டிருப்பார்.சேட்டனும் அதே இடத்தில் வழக்கம்போல் ஆஜராகிவிடுவார்.காட்சிகள் தொடர்ந்தது.

எங்கள் பகுதி அசோஸியேசன் சார்பாக டிசம்பர் மாதம் ஆண்டுவிழா நடத்துவார்கள்.எங்கள் பகுதிப் பெண்கள் சிலர் இணைந்து “திருவாதிரைக் கழி” நடனம் ஆடுவர்.அன்று அதில் நடு நாயகமாக நின்றவர் அந்தப்பெண்தான்.அற்புதமான நடனம்.நெழிவு சுழிவோடு பிரமாதப்படுத்திவிட்டனர்.எல்லா பாடலுக்கும் கையை உயர்த்திக்கொண்டு ஒரே லயத்தோடு பின்னால் குதித்துக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு மத்தியில் சேட்டனும் தன்னிலை அறியாமல் காலை உய்ர்த்துவதுபோல் ஏதோ செய்துகொண்டிருந்தார்.இப்படியாக அந்த நிகழ்ச்சி முடியும் வரை ஆடிக்கொண்டிருந்தார்.முடிந்த பிறகு அந்தப்பெண் அவரிடம் ஏதோ பேசுவதுபோல் தெரிந்தது.அவர் தலையை ஒரு இடத்தில் நிறுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்க அந்தப்பெண் கிளம்பி விறுவிறுவென சென்றுவிட்டார்.

அதன் பின்னர் அவரைக் காண்பதே அரிதாகிப்போனது.என்றாவது காண்கையில் வலிய சிரித்தாலும் சுரத்தில்லாமல் நின்றுகொண்டிருப்பார்.மெல்ல மெல்ல அவர் வரத்தே நின்று போனது.அந்தப் பெண்ணும் கண்ணில் சிக்கவில்லை.நானும் யாரிமாவது கேட்க வேண்டும் என்று எண்ணுவேன்.என்னவென்று கேட்பது என்ற தயக்கத்திலேயே கேட்கவில்லை.அப்படியே நினைவிலிருந்து மறைந்துவிட்டார்.

இரண்டு தினங்களாக சம்மந்தமே இல்லாமல் அவரைப் பற்றிய நினைவுகள் வந்து ஆட்கொண்டது.கண்டிப்பாக யாரிடமாவது கேட்டுவிடவேண்டும் என்று எண்ணி கடைக்கார சேட்டனிடம் அரைக்கிலோ பூவன்பழம் வாங்கியவாறு கேட்டேன்.

“ஆரு சுந்தரேட்டனோ.புள்ளி மரிச்சு ஆறெழு மாசம் ஆயி.குடிச்சு குடிச்சு லிவர் அழுகிப்போயி” அதற்குமேல் எதுவும் பேசத்தோணவில்லை.நான் விடுமுறையில் சென்ற ஏதோ தினத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.பழப் பையோடு வண்டியில் ஏறும்போது “ஆ பெண்ணோ?”என்றேன்.

“வோளோ.வோளு பாலாழியில ஒரு சக்கனோடா”

“வேற ஆரும் இல்ல ஆ சேட்டனுக்கு”

“தோ அவிட காணுனில்ல அதானு வீடு.இப்ப கேஸிலா.சுந்தரேட்டன்ட அனியனுக்கும் ஆ கூதரப் பெண்ணுக்கும்”

அவர் சுட்டிய இடத்தில் சிறிய ஓட்டு வீடு மரங்களுக்கிடையில் மங்கலாகத் தெரிந்தது. இத்தனை நாட்களாக அந்த இடுக்கில் இருக்கும் அந்த வீட்டை நான் பார்த்ததேயில்லை.முற்றமெங்கும் செடி மண்டிக்கிடந்தது. திண்ணையில் ஒரு அழுக்கு முண்டு குத்துச் செடியாய் கிடந்தது.

Advertisements

UrbanAsian

After much speculation, the highly controversial documentary, India’s Daughter, makes its way to the World Wide Web. Banned in India, the documentary focuses on the rape case of Jyoti Singh who was brutally beaten and raped in Delhi in 2012.

The documentary highlights the aftermath of the event as well as a one on one interview with assailant Mukesh Singh. While BBC was in high hopes of releasing the video on television for Women’s Day (March 8th), heavy protests against Mukesh Singh’s lack of remorse and despicable comments lead the the ban of the documentary in India.

Directed by Leslee Udwin, the film has now been made available on YouTube.

View original post

பழைய துறைமுகச் சாலையிலிருந்து நகரத்திற்கு பிரிந்து செல்லும் கிளைச்சாலையிலுள்ளது அந்தச் சிறிய கிராமம்.சுற்றிலும் சிதிலமடைந்து கிடக்கும் கட்டிடங்கள் கொண்ட பகுதி.கட்டிடங்கள் என்றால் மிகை கற்பனை வேண்டாம் இரண்டடுக்கு,மூன்றடுக்கு மச்சிகளுடைய ஓட்டு வீடுகள்.உடைந்த ஓட்டுவழி தலை நீட்டி நிற்கும் மரங்கள் அதன் ஆயுளைச் சொல்லிவிடும்.சமீபத்திய ஞாயிற்றுக் கிழமைகள் இதைச் சுற்றித்தான் கழிந்துகொண்டிருக்கின்றன.அந்தக் கிராமத்தின் முகப்பில் இரண்டு சிதிலமடைந்த வீடுகளுக்கிடையில் ஒரு பழைய வீடு உள்ளது.வீட்டிற்கு வெளியில் உள்ள திண்டில் அமர்ந்திருந்த அந்த முதியப்பெண்ணை முதன்முதலாய் பார்த்தபொழுதே எங்கோ பார்த்ததாக ஞாபகம்.வீட்டிற்கு வந்து மண்டையைக் குழப்பிக்கொண்டிருந்தேன்.பிடி கிடைக்கவில்லை.அடுத்தமுறை சென்றபோதும் அதே இடத்தில் கிணற்றில் தண்ணீர் இறைக்கும் ஒரு சிறிய குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.அப்போதும் யாரென்று நினைவிலில்லை.இந்தப்பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று மீண்டும் மீண்டும் குழம்பிக்கொண்டிருந்தேன்.ஒருவழியாக சில நாட்களுக்குப்பின் நினைவுக்கு வந்தார்.

சாய்வு நாற்காலி நாவலில் வரும் ஆசியாதான் அந்தப்பெண்.ஆம் ஆசியாவை அந்தப்பெண்ணைப்போல்தான் கற்பனை செய்து வைத்திருந்தேன்.கசங்கிய அழுக்கான முண்டு கட்டி,குளிக்காமல்,பல் தேய்க்காமல்,சிக்குத் தலையுடன்,கட்டிலிலே சோம்பிக் கிடந்து, நிமிடத்திற்கொருமுறை சோம்பல் முறித்து வாய் பிளக்கும் அந்தக் கதாபாத்திரம் சா.நா யில் மிகச்சிறந்த வடிவமைப்பு.அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்ப்பட்ட நாவல் சா.நா எனபதென் துணிபு.அதைவிட அந்த சவ்தா மன்ஸிலின் சித்தரிப்பு இன்னும் மனதில் எலிச் சத்தத்தோடு மண்ணடைந்து கிடக்கிறது.அந்த பெண் வசித்த வீடும் கிட்டத்தட்ட சவ்தா மன்ஸில் போன்றே அப்போது தோன்றியது.

நாவலில் முஸ்தபாக்கண்ணு சாய்வு நாற்காலியில் கிடந்தவாறு காலை ஆட்டிக்கொண்டே மனைவி மரியத்தை “குட்டியேய்”என்று விளிப்பதெல்லாம் கவிதை.பழைய சித்தாந்தங்களில் ஊறிக்கிடந்து முஸ்தபாக் கண்ணு செய்யும் அட்டகாசங்கள்,சதா போக சிந்தனையுடன் அந்தக்குட்டிபெண் ரைஹானத்துடன் உறவுகொள்ளத் துடிக்கும் மனோபாவம் எல்லாம் அப்படியே மனதில் கோட்டோவியமாய் உறைந்து கிடக்கின்றன.முஸ்தபாக்கண்ணுவால் வீட்டிலிருந்து பிடுங்கி விற்கப்படும் ஒவ்வொரு பெருளுக்குப் பின்னாலும் இருக்கும் கதை நாவலின் முதுகெலும்பு.விற்கப்படும் பொருட்களை வாங்கும் ஆட்கள் யார் என்பதில் காலத்தை சமன் செய்கிறார் மீரான் பாய். எலிப்புழுக்கையின் நாற்றம்,முஸ்தபாக்கண்ணின் சிகரெட்,மூத்திர நாற்றம் என்று இன்னும் சவ்தா மன்ஸிலின் கவிச்சி வாடை மனதிற்குள் சுழன்றுகொண்டேயிருக்கிறது .

அந்த வீடும் ,அந்தப்பெண்ணும் எனக்கு சாய்வு நாற்காலியை கண்முன்னே நிறுத்திவிட்டனர்.கடந்த ஞாயிறு அந்த வழியாகக் கடக்கும்போது வீட்டுமுன் வெள்ளை முண்டு கட்டிய மனிதர்கள் கூட்டம். வாழ்ந்துகெட்ட குடும்பங்களைக் காண்கையில் மனைதை அழுந்தப் பற்றும் ஒரு பாரம்.

முயல்கறி சாப்பிட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இருக்கும்.இங்கு வந்தபிறகு இரண்டு வருடங்கள் கழித்துதான் முயல்கறி கிடைக்கும் அந்த ஒரு ஹோட்டலும் அறிமுகமாகியது.ஒரு தட்டு குறுமிளகிட்டு வறுத்தது இருநூற்றி ஐம்பது ஓவா என்பதால் மாதத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ விஜயம்.இந்த ஆறுமாத இடைவெளி எப்படியோ விழுந்துவிட்டது.இரண்டு நாட்களாக முயலின் குறுத்தெலும்பு ருசி நாவில் திரண்டெழுந்துகொண்டிருந்தது.ஊரில் இருக்கையில் முயல் கறி வேண்டுமென்றால் வேட்டை நாயை அழைத்துக்கொண்டு ஊரை அடுத்துள்ள காட்டிற்குள் நண்பர்களோடு ஒரு சுற்று சுற்றி வந்தால் மூன்று நான்கு முயல்கள் கிடைத்துவிடும்.அதைக் காட்டிலேயே சமைத்து உண்பது தனிச்சுவை.வெறும் உப்பும் ,வத்தலும் தடவி நீர் நீங்க தீச் சுவாலையில் காட்டி அற்புதமாக பொறித்தெடுப்பான் முனியாண்டி.

இன்று மதியம் எல்.ஐ.சி அலுவலகத்திற்கு செல்லவேண்டியிருந்தது.அதனருகில்தான் முயல்கறி கிடைக்கும் மே பிளவர் ஹோட்டலும் உள்ளது.எட்டாவது தளத்தில் உள்ள அலுவலகத்திற்குள் நுழைகையில் வாசல்வரை வரிசை நீண்டிருந்தது.வரிசையில் நின்றவாறே மைதானம் போல் விரிந்து கிடந்த அலுவலகப் பரப்பை நோக்கினால் மருந்துக்குக் கூட ஒரு ஆண் இல்லை.அவ்வளவு பேரும் நாற்பது வயதுக்கு மேலுள்ள பெண்கள்.ஒரே ஒரு முதியவர் சட்டையின் இரண்டாவது,மூன்றாவது பொத்தான்கள் இழந்து பாதுகாவலர் உடையோடு வாசலில் அமர்ந்திருந்தார்.குழிந்த வயிறு முதுகோடு ஒட்டிக்கிடந்தது.எட்டி நோக்குகையில் பணம் வசூலிப்பவரும் ஒரு ஆண்மகன் என்று தெரிந்தது.தூரத்தில் இரண்டு பெண்கள் ஒரு அம்மாவை ஏதோ கோப்பு காணவில்லை நீதான் தொலைத்துவிட்டாய் என்று வட்டமிட்டு வழக்குரைத்துக்கொண்டிருந்தனர்.திருச்சூர் வழக்குமொழி.மூன்று நான்கு சொற்களை ஒன்றுதிரட்டி ஒரே சொல்லாக்கினால் திருச்சூர் பாஸை பேசிவிடலாம்.

உதாரணத்திற்கு ஞான் அவட நோக்கில்ல என்பதை ஞான்வடய்க்கில என அடுக்குச் சொற்களாக்கி பேச வேண்டும்.சொற்சுவை நிறைந்த செழுமையான உரையாடல்!!மக்கள் தொடர்பு வரிசையில் அமர்ந்திருந்த மூன்று பெண்களும் சிரித்தே மாமாங்கம் ஆகியிருக்கும் போலிருந்தது.அத்தனை பேரின் முகத்திலும் கடுகடு சிடுசிடு.வரிசையில் நிற்பவர்கள் அதற்கும் மேல்.மூன்று ஆளுக்கு முன்னால் நின்றிருந்தவர் ஏதோ அழைப்பு வர இப்போது வருகிறேன் என்று வெளியே சென்று பேசிவிட்டு வந்தார்.அதற்கு அவரிடம் சிண்டு முடிந்துகொண்டிருந்தார் பின்னாலிருந்தவர்.உயர் ரத்த அழுத்தம் அனைவருக்கும்.பணம் கட்டி முடிக்கையில் ரசீது வாங்குவதற்குள் என் பின்னாலிருந்தவருக்கு அத்தனை அவசரம்.இடித்து வலப்பக்கம் தள்ளிவிட்டார்.விழப்போன இடத்தருகே ஏதோ இறைச்சி வாசம் வந்தது.தடுப்புக்கு மறு பக்கத்தில் யாரோ புசித்துக்கொண்டிருந்தார்கள்.சிரிப்பொலி வேறு.நல்ல பசி என்பதால் இப்போதைக்கு மேபிளவர் என்று தீர்மானித்து,தள்ளியவரிடம் வாதிக்காமல் வாசலில் சோகமே உருவாய் நின்ற முதியவரிடம் முகமன் கூறி வெளிவந்தேன். அப்போதும் திருச்சூர் மலையாளம் ஒலித்துக்கொண்டேயிருந்தது.அற்புதம்.

அந்த அலுவலகத்திலிருந்து மிக அருகில் வலப்புறம் வீற்றிருந்த ஹோட்டலுக்கு செல்லவேண்டும் என்றால் இடப்புற ஒருவழிச்சாலை வழியாக இரண்டு கிலோமீட்டர்கள் கிறங்கி வரவேண்டும்.பாத்தும்மாவுடைய ஆடு முன்கால் இரண்டையும் தூக்கியவாறு நின்ற சிலையை சுற்றித் திரும்புகையில் சேட்டன்களும்,சேச்சிகளும் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்தனர்.அவசரம் அவசரம்.எல்லோருக்கும் அவசரம்.இடப்புறம் திரும்பினால் கிஸ் ஆஃப் லவ் குழுவினர் பசு மாட்டு படத்தோடு திரண்டிருந்தனர்.வண்டியை நிறுத்த எத்தனிக்கையில் நிற்கவிடாமல் விரட்டியடித்தார் போக்குவரத்து ஒழுங்காளர்.

ஹோட்டலுக்கு வந்தாயிற்று.முயல்கறியும்,முட்டையிட்டு வறுத்த சோறும் ஆர்டர் கொடுத்துவிட்டு நால்வர் அமரும் சுற்று இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தேன்.இருவர் வந்து எதிரெதிரே அமர்ந்தனர்.தங்கச்சட்டம் பூட்டிய துளசிமாலைக் கழுத்தில் மின்னியது.நெற்றித் திலகம் கனக்கச்சிதம்.அவர்கள் ஆர்டர் செய்ததும் உடனடியாக சோற்றுக் குவியல் வந்தது சாம்பார்,ரசம்,கூட்டு பரிவட்டங்களோடு.உள்ளங்கை போட்டு நொறுங்கப் பிசைந்து பின்னங்கை ஒழுக மூச் மூச்சென்று வாரி இறைத்தனர்.நானும் கங்கணம் கட்டிக்கொண்டேன்.முயல்கறி வரட்டும் ஒருகை பார்த்துவிடலாம் என்று.முயல் கறியில் எனக்கு மிகவும் பிடித்தது வரிவரியாக பின்னிப் பிணைந்திருக்கும் குறுத்தெலும்புகளுக்கிடையில் நூலிழை போல் அடுக்கடுக்காக இருக்கும் மாமிசத் துணுக்குகள்.நல்ல மசாலா குடித்து வெந்த நெஞ்சுக்கறியை கடித்து உறிஞ்ச வேண்டும்போல் தோன்றியது.அவர்கள் முதல் சுற்று முடிக்கையில் ஆவி பறக்க கொண்டு வந்தார் சேட்டா.வெறித்தனமாக முயலைப் பற்றுகையில் பள்ளி மாணவிகள் நான்குபேர் அருகிலுள்ள இருக்கையில் வந்தமர்ந்தனர்.சிறிய கூச்சம் தொற்றிக்கொண்டதால் நினைத்ததுபோல் புசிக்க இயலவில்லை.சிறு சிறு துணுக்குகளாக கொரித்துக்கொண்டிருந்தேன்.சேட்டனுக்கு அப்போதும் வெறி அடங்கியிருக்கவில்லை.ரசத்தோடு மல்லு கட்டிக்கொண்டிருந்தார்.

நான் முடிக்கும் தருவாயில் அவர்கள் இருக்கையும் உணவுத் தட்டுகளால் நிரம்பியது.இரண்டு பெரிய தட்டுகளில் சுண்டு விரலளவு நீளவாக்கில் துண்டுகளாக்கி பொறித்த மாட்டிறைச்சி.கூடவே சோற்றுக்குவியல்.மிகுந்த மன உளைச்சலாயிருந்தது.வாழ்நாளில் ஒரு நாளாவது இப்படி சாப்பிட்டு விட வேண்டுமென்று.அந்த அளவிற்கு வெறிகொண்டு விளாசித் தள்ளினர்.நானும் கூச்சம் விலக்கி கடைசியாகக் கிடந்த ஒரு எலும்புத் துண்டில் முழுப்பலத்தையும் காட்டினேன்.மேவாயில் குத்திக்கொண்டது.கண்ணீர் வரும்முன் கை கழுவும் இடத்திற்குச் சென்றுவிட்டேன்.வெளியேறும்போது எட்டிப் பார்த்தேன்.அடுத்த சுற்று தொடங்கியிருந்தது.

எனது சிறுகதை “செல்லம்மாவின் குறுக்குவலி” சொல்வனம் இதழில் வெளிவந்துள்ளது.சொல்வனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

http://solvanam.com/?p=38421