Archive for April, 2015

நண்பன் பெங்களூரிலிருந்து வந்திருந்தான்.மாலையில் பீச்சில் அமர்ந்து கதைக்கையில் எதிரே வந்தமர்ந்தார் ஒரு நவநாகரீக யுவதி.தி.ஜா பாணியில் சொல்வதென்றால் “முகம் நிறையக் கண்.கண் நிறைய விழி.விழி நிறைய மர்மங்கள்.உடல் நிறைய இளமை.இளமை நிறையக் கூச்சம்.கூச்சம் நிறைய நெளிவு.நெளிவு நிறைய இளமுறுவல்”.யோசித்துக்கொண்டிருக்கையில் விறுவிறுவென எழும்பிச் சென்று பீச் ஹோட்டலுக்கு அருகில் நின்றிருந்த காரில் ஏறிக்கொண்டார்.நண்பனுக்கு பீச் ஹோட்டல் என்பது விசித்திரமாகத் தெரிய வினவினான்.பீச் ஹோட்டல் என்பது வெறும் இடம் மட்டுமல்ல.அது ஒரு வரலாறு.டச்சுக்காரர்கள் முதன் முதலில் வந்த சமயத்தில் என்று பேச்சைத் தொடங்கியதுமே அது எங்குபோய் முடியும் என்பதை அவன் உணர்ந்திருந்ததால் “எனக்கு இப்ப பீச் ஹோட்டல்ல குடிக்கணும்” என்றான்.

பச்சைப் புல்வெளியில் அமர்ந்தோம்.ஆர்ப்பாட்டமில்லாத காற்று.பட்வைஸர் பியர்.குடித்து முடித்துக் கிளம்புகையில் ஒரு எட்டு மணி இருக்கும்.வாசலைக் கடந்து ஒரு யூ டர்ன் எடுக்கவேண்டும்.வளைவில் திரும்பும் முன்னே zero dark thirty படத்தில் பின்லேடனை சுற்றி வளைப்பதுபோல் பிடித்துவிட்டனர். இறங்கியதும் “குடிச்சிருக்கியா?”என்றார்.மது விடுதி வாயிலில் நின்றுகொண்டு வெளிவருவோரிடம் கேட்கக்கூடிய நியாயமான கேள்வியா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.ஆமா லைட்டா ஒரு பீர் என்றேன்.உடனே வண்டிச் சாவியைப் பிடுங்கி என்னை இறக்கிவிட்டு ஒரு காவலாளி வண்டியில் ஏறி,என்னை பின்னால் ஏற்றிக்கொண்டு விருட்டென்று விரைந்து விட்டார்.கண நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த செயலால் புதிதாக வந்திருந்த நண்பன் தனிமரமாக நிற்க வேண்டியதாயிற்று. நண்பனை வழியனுப்ப வேண்டும் என்னை விட்டுவிடுங்கள்.பாவம் அவன் வேறு புதியவன்.ப்ளீஸ் விட்டு விடுங்கள் என்று கெஞ்சியிருக்கலாம்.ஆனால் இன்ஸ்பெக்டர் பையனே நண்பனாக இருக்கும்போது இவன் என்ன டுபாக்கூர் என்ற ஆணவத்தில் அமர்ந்திருந்தேன்.

போலிஸ் ஸ்டேசன்.தடுப்பு கம்பிக்கு மறுபுறம் பத்து பதினைந்து பேர் நிறைபோதியில் அமர்ந்திருந்தனர்.நிற்க முடியாமல் இருவர் படுத்துக் கிடந்து ஏதோ உளறிக்கொண்டிருந்தனர்.ஒருவர் எனக்கு வயிறு பசிக்கிறது சாப்பாடு வேண்டும் என்று வயிற்றில் அடித்துக்கொண்டிருந்தார்.”பட்டினி கெடந்து மரிச்சா நிங்களு உத்தரவாதம் பறையோ”என்று விழி குத்தி நின்றார்.எந்தாடா என்று முறிந்து கிடந்த பிரம்பிற்கு உயிரூட்டினார் ஒரு மெலிந்த காவலாளி.ஒரு அடியில் முற்றிலும் அடங்கியவராய் அருகில் வந்தார்.”சேட்டன் எந்து தெற்று செய்து”மெல்ல ஆரம்பித்தேன்.”அதே நிங்களு தன்னே பறயு.ஈ பீச்சில கடல விக்கின்ன எண்ட கூட்டாரனல்ல.தோ அவட இருக்கினு”கண் சிமிட்டிய திசையில் நோக்கினால் இடுங்கிப்போய் கிடந்தார் ஒரு சேட்டன். இவருடைய நண்பனாம்.தொடர்ந்தார்.”எண்ட கையில ஒரு ஆப் உண்டாயிருந்நு.அப்போ புள்ளிட கூட ஆ பீச்சில சைடுலருந்து ஒரு பெக் அடிச்சிட்டே உள்ளு.அதுனகத்து இவமாரு பொக்கிக் கொண்டுவந்நு”.சரிதான் பீச்சில உக்காந்து குடிச்சா மணத்துவாங்களங்கும்.சேட்டன் முரட்டு ரவுடியாட்டம் இருப்பார்போல- எண்ணிக்கொண்டேன்.

முதல் தடுப்புக்கு அப்பாலுள்ள சிறிய இடைவெளியில் ஒரு காவலர் அமர்ந்து எனது பூர்வ விலாசத்தைக் குறித்துக்கொண்டார்.பைக் சாவியை சீல் வைத்து ஒரு மரப்பெட்டிக்குள் அடைத்துவிட்டனர்.குடித்து விட்டு வண்டி ஓட்டினால் மனித வெடிகுண்டு என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது என்று யாரோ ஒரு போலிஸ்காரர் கூறும் குரல்கேட்டது.முழு விசாரிப்பு முடிந்ததும் சொந்தமல்லாத இருவரை ஒரு மணி நேரத்திற்குள் அழைத்துவிட்டால் ஜாமீனில் விட்டுவிடுவோம்.மறு நாள் வந்து நீதிமன்றத்தில் அபராதம் கட்டி வண்டி எடுத்துக்கொள்ளலாம் என்றனர்.தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது.

நண்பர் ஒருவருக்கு சில மாதங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவம் நிழலாடியது.பரபரப்பான சாலையில் சென்றுகொண்டிருக்கையில் கைப்பேசிக்கு அடுத்தடுத்து அழைப்புகள் வர, அருகில் வண்டியை நிறுத்தி தலைக்கவசத்தைக் கழற்றி வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.அள்ளிச்சென்றுவிட்டனர்.யாரோ ஒரு நண்பர் உதவியுடன் ஜாமீன் எடுத்தாலும் அடுத்த நாள் முழுவதும் வண்டி ஓட்டுதல் குறித்த முழுமையான பயிற்சி வகுப்பில் பங்கெடுத்து அவர்கள் கொடுத்த நற்சான்றிதழ் நகல் கொடுத்த பின்புதான் வண்டியைக் கொடுத்தனர்.நீதிமன்றத்தில் சென்று பணம் கட்ட ஒரு மாதம் ஆகியது.

எனக்கு அடுத்த நாளே முக்கியமான மீட்டிங்.பயிற்சி வகுப்பிலிருந்து எப்படி தப்பிப்பது என்றெண்ணி இன்ஸ்பெக்டரின் மகனான எனது நண்பனுக்கு அழைத்தேன்.தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தான்.மகிழ்ச்சி.அரைமணி நேரம் அவனுக்கு அழைத்தும் கிடைக்காததால் பதற்றம் வரவேண்டுமல்லவா.எதுவுமே அறியாமல் பீச்சில் தட்டழிந்து நிற்கும் நண்பனை நினைத்து சிரிப்பு வந்தது.இதற்கிடையில் வாட்ஸப்பில் எங்கள் புரட்சி குரூப்பில் ஏதோ வீடியோ அனுப்பாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என்று நண்பனொருவன் விரக்தியிலிருந்தான்.சாட் செய்கையில் “விழிச்சோ விழிச்சோ”என்ற அதிகார தொனியில் ஒருவர் வந்தார்.”போன் நாட் ரீச்சபுளானு சார்.எனிக்கி வேற ஆரும் அறியல்ல”என்றேன்.”அப்போ அவட இருந்தொள்ளு.ராவில போவாம்”என்றார்.

இதற்கிடையில் நம்ம சேட்டன் மெல்ல பூனை போல் தவழ்ந்து வாசலருகில் இருந்த அவருடைய பையைப் பற்றிவிட்டார்.அதனுள் வைத்திருந்த மிஞ்சிய சரக்கை எடுத்து ராவாக கவிழ்த்துகையில் காவலாளி பார்த்துவிட்டார்.அதற்குப் பிறகு நடந்தவை அனைத்தும் சென்சார் செய்யப்படுகிறது.

மீண்டும் எண்களை ஒத்தினேன்.அதே குரல்.வேறு வழியில்லாமல் வீட்டு முதலாளியை இறுதியாக அழைத்தேன்.பத்து நிமிடத்திற்குள் பதறியடித்து ஓடிவந்தார்.அதுவரை அவர் என்னைப்பற்றி கட்டமைத்து வைத்திருந்த பிம்பங்கள் அத்தனையும் சிதறியதாக வருந்தினார்.பரிதாபமாக இருந்தது.சிறிது நேரத்திற்குள் அவருக்கு தெரிந்த ஒரு நபரை வைத்து வெளியில் எடுத்துவிட்டார்.மறுநாள் வேறொருவரையும் கூட்டிச்சென்று கையொப்பமிட்டால்தான் வண்டியைத் தருவோம் என்றனர்.அந்தப் பயிற்சி வகுப்பு என்று தலை சொறிந்தேன்.வேண்டாம் என்பதுபோல் கண்ணடித்து சைகை செய்தார் என் வீட்டு முதலாளி.

ஆட்டோ பிடித்து பீச்சிற்கு சென்று நண்பனை அழைத்தேன்.ஏற்கனவே NH10 படத்திற்கு டிக்கெட் புக் செய்திருந்ததால் அந்த கோபத்தில் நின்றுகொண்டிருந்தான்.சுற்றி புகை மண்டலம்.ஒன்பதரைக்கு காட்சி.மணி ஒன்பது இருபது ஆகியிருந்தது.ஆட்டோ பிடித்து தியேட்டர் வாசலில் இறங்கியதும் தொண்டையை கவ்வுவதாகவும் சர்பத் குடிக்கவேண்டும் இல்லையென்றால் இவ்விடமே மறித்துவிடுவேன் என்றும் பிதற்றினான்.சரியென்று அருகிலிருந்த கடைக்கார சேட்டனிடம் சர்பத் சொல்லிவிட்டு சிகரெட்டை பற்றவைத்தோம்.சேட்டன் ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்ட நினைக்கிறார்.அதுவோ நழுவிக்கொண்டே இருக்கிறது.மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்.ம்கூம்.இறுதியாக குத்தித் துளையிட்டு எப்படியோ கிளாசில் வடித்துவிட்டார்.அடுத்து நன்னாரி சேர்க்க வேண்டுமல்லவா? பாட்டிலைத் திறக்கும் முன்பு எங்களை ஒருமுறை ஏறிட்டு :எதுக்குல இங்க நிக்கிய”என்பதுபோல் நோக்கினார்.இன்னும் இரண்டு நிமிடத்தில் படம் போட்டுவிடுவான் என்பதால் நண்பனுக்கு கை நடுக்கம்.முதல் காட்சியிலேயே அற்புதமான முத்தக்காட்சி இருக்கிறது என்று அவனுக்கு முன்பே கூறியது அவனை மீண்டும் கொலைவெறியாக்கியது.

நன்னாரி பாட்டிலைத் திறந்துவிட்டார்.ஆனால் அவரால் அதை மூட முடியவில்லை.திணறிக்கொண்டிருந்தார்.அது வழுக்கிச் சென்று குப்பையாய்க் கிடந்த தரையில் எங்கோ விழுந்தது.குனிந்தவர் நிமிரவேயில்லை.யோவ் சர்பத்த கலக்கி குடுத்துட்டு தேடுய்யா என்று சொல்வதற்கு பதிலாக நண்பன் “எல பைத்தியக்காரனாட்டம் இருக்கான்.ஆளயும் மூஞ்சியயும் பாரு.வா போவோம்”என்றான்.எழும்பி நின்றவர் பார்வை எங்களை சுட்டெரித்தது.தமிழ் தெரியுமோ?என்று குழம்பி நிற்கையில்”சர்பத்து வேணொ”என்று கூறிவிட்டு சிரித்தார்.பைத்தியக்காரன் என்பது உறுதியான மகிழ்ச்சி இருவருக்கும்.கலக்கி வைத்த சர்பத்தை ஒரு நொடியை மூன்றால் வகுத்தால் ஆகும் கண நேரத்தில் குடித்துவிட்டு நூறு ரூபாய் தாளை நீட்டினேன்.”ரெண்டு சர்பத்தல்ல” இந்த வாசகத்தை மூன்று முறை கேட்டுவிட்டார்.சில்லறை எடுத்த பாடில்லை.ஒரு வழியாக ஒன்பது நாற்பதுக்கு எங்கள் கணக்கு முடித்து வைக்கப்பட்டது.

அனுஸ்கா பாத்ரூமில் அமர்ந்து புகைக்கையில் நுழைந்தோம்.முத்தக்காட்சி முடிந்ததில் வெறி கூடியிருந்தது.படம் முடிந்து வெளிவந்ததும் ஒரு ஆட்டோ கூட இல்லை.பேருந்து நிலையத்திற்கு மெல்ல நடக்க ஆரம்பித்தோம்.அதிகாலை ஆறு மணிக்கே வரச் சொல்லியிருந்தார்கள்.வீட்டை அடைகையில் ஒரு மணி.

(தொடரும்)

Advertisements

மஞ்சள் வெயில்

முற்றத்து வேப்பமர இலைகளை மினுக்கி

மென்சூடு பரப்பியிருந்த

இதே போன்றொரு ஈஸ்டர் தினத்தில்தான்

அமலம் அக்கா ஊர் திரும்பியிருந்தாள்.

அதற்கு முந்தைய வருடத்தில்

தேவன் உயிர் நீத்த துக்க தினத்தில்

தொலைந்தவளுக்காக

தேவனுக்கு சிந்திய கண்ணீரோடு அவளுக்காகவும்

உப்புநீர் சிந்தி பாவங்களைக் கழுவினோம்.

முட்டை ஓடுடைத்து குஞ்சு உயிர்ப்பதுபோல

தேவனாகிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அத்தினத்தில்

அமலம் அக்காவும் புதுப்பிறவி எடுத்திருந்தாள்.

அப்பிறவியில்

எங்கள் யாரையும் இனம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு

எவனோ ஒருவனின் பாவங்கள் அவளுக்குள் விதைக்கப்பட்டிருந்தன.

தேவாலயத்தின் அடந்த பெருமணி ஓசையும்

அவள் இப்போது கிடக்கும் நுண்ணிய வேப்பம்பூ நிறைந்த முற்றமும்

அவளை மீண்டும் உயிர்ப்பிக்கட்டும்.

மனதை மயக்கும் குமரித்தமிழையும்,தென்னை,வாழை அடர்ந்த பச்சை வாசம் வீசும் அந்த நிலப்பரப்பையும் கதைகளில் படிக்கும்போது மனதிற்கு அவ்வளவு சுகமாயிருக்கிறது.எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாசிக்கத் தொடங்கிய இந்த நாவலை முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.அந்த அளவிற்கு அதன் செழுமையான நடையும் கதாபாத்திரங்களும் ஆட்கொள்கின்றன.

தோப்புவிளை என்ற ஒரு சிறிய நிலப்பரப்பில் உள்ளுக்குள் காம இச்சைகளோடும் வெளியில் அதை மறைத்து புனிதனாகத் திரியும் நிலக்கிழார் குருஸ்வாமி.அவரை நம்பிப் பிழைக்கும் நான்கைந்து குடும்பங்கள். இவ்வளவுதான் கதைக்களம்.உயரப்பறக்கும் கிருஷ்ணப் பருந்தாக சித்தரிக்கப்படும் குருஸ்வாமியின் மனப்போராட்டங்கள்தான் கதையின் உயிர் நாடி.வெறும் மனப்போராட்டங்களை மட்டும் சித்தரிக்காமல் அந்த நிலப்பரப்பின் தன்மையையும்,பிரதான கதாபாத்திரங்களாக வரும் பார்வதி,ராணி,வேலப்பன்,பெயிண்டர் ரவி போன்றவர்களின் உருவச் சித்திரங்களையும் அற்புதமான நீர் ஓவியமாக வரைந்து செல்கிறது எழுத்து நடை.

தோப்புவிளையில் ஒரு தறவாட்டு தேவி கோவில் உள்ளது.அதன் வெளிப்புறச் சுவற்றில் காமகினியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.அவரது படுக்கையறையிலும் அதைப்போல் ஒரு ஓவியம்.குருஸ்வாமியின் மன இச்சைகள் பொழுதும் அவைகளைத் தரிசிப்பதில்தான் அடங்கி அடங்கி எழுகின்றன.அந்த ஓவியத்தை விவரிக்கும் இடம் அற்புதம்.//திரண்ட முலையும்,திறந்த பெண்மையுமாக ஜன்ன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி,அத்தனை காமவெறியையும் பஸ்மீகாரம் செய்துவிட்டு காம சொரூபியான காமாக்னியை வென்ற அகிலாண்ட பரமேஸ்வரி//இப்படியே நீள்கிறது அந்த நடை.

எப்போதுமே கதைகளில் அந்தப் பகுதியின் உணவுப் பழக்கங்கள் செறிவாக எழுதப்படும்போது மனதிற்கு மிக நெருக்கமாகிவிடுகிறது.ஆவியில் அவித்த நேந்திரம்பழம்,பருப்பில் குழைய வேக வைத்த கொழும்புக்கீரை

எனும்போது அதன் சுவை நாவில் திரண்டுவிடுகிறது.இவையெல்லாம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது.

சிறு வயதில் அம்மு அம்மை தந்தையுடன் உறவில் ஈடுபடுவதைக் கண்டதால் பெண்கள் என்றாலே அசிங்கம் என்று வளரும் குருஸ்வாமிக்கு அதன் இச்சைகள் புரியத் தொடங்குகையில் திருமணமாகிறது.இருந்தாலும் வெற்றுடலோடு அம்மு அம்மையைக் கண்ட காட்சிகள் அவருக்குள் ஒரு அருவருப்பை ஏற்படுத்தி மனதில் புதைந்து கிடந்து அவ்வப்போது திரண்டெழுகின்றன.மேலும் போக சிந்தனையுடன் அலைந்த தந்தையைப்போல் தானும் ஆகிவிடக்கூடாது என்ற பிடிவாதமும் அவரைப் பெண்களிலிருந்து அன்னியப்படவைக்கிறது.

சுப்புலக்ஸ்மி என்ற பெண்ணை மணந்து, பிரசவிக்கையில் அவள் இறந்துவிட அன்றுமுதல் தனி மரமாகிறார்.சுப்பு லக்ஸ்மியுடனான முதலிரவை விவரித்திருக்கும் இடம் கவிதை.//அன்றிரவு பாட்டுப் பாடவில்லை.ஆனால்,எல்லா ராக லயங்களையும் அழுத்திப் பார்த்த நிறைவிருந்தது.சுப்புலக்ஸ்மி நல்ல வீணை.நல்ல துல்ய நரம்பின் ரீங்காரக்காரி.சுவர ராக சிருங்காரவல்லி.நல்ல த்வனியின் கமகக்காரி.ஆனால்,கீழ் ஸ்தாயி வரவர ஆலாபனை போல அமைதியானவள்.இழைவானவள்.குழைவானவள்//எவ்வளவு நேர்த்தியான விவரணை.அதிலும் வெளிச்செண்ணை விளக்கொளியில் ஊதுவத்தியின் மணம் என்று விவரிக்கும் இடம் மூச்சுக்குழலெங்கும் அதன் சுகந்த வாசனையோடு கிளர்த்துகிறது.

மகனைப்போல் இருக்கும் வேலப்பன் ஒரு கட்டத்தில் பருந்தின் கூரிய கண்களின் கருமைக்கடியில் கிடக்கும் காம இச்சைகளைக் கண்டடைகிறான்.அன்றுமுதல் அவரிடமிருந்து விலகி அவருக்கெதிரான நிலையெடுக்கிறான்.அவருக்கோ பால்வாசனையோடு பச்சைக் குழந்தை சகிதம் வீட்டிற்கு வரும் வேலப்பனின் மனைவி ராணியைக் காண்கையில் மனதிற்குள் ஓவியங்களாய் புதைந்து கிடக்கும் அத்தனை இச்சைகளும் கிளர்ந்தெழுகின்றன.

பருந்து அதன் கூரிய கண்களால் அந்த இச்சைகளைக் கடக்கும் சமயத்தில் கதையை முடிக்கிறார்.அவரது தாடிக்குள் குறுகுறுத்த நமட்டுச் சிரிப்பு தாடி எடுக்கப்படுகையில் நிர்வாணமாகச் சிரிக்கிறது.

நாவலை வாசித்து முடிக்கையில் இவரது அத்தனை படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்ற பேராவல் என்னைப்போல் எல்லோருக்கும் எழும் என்பது திண்ணம்.

கிருஷ்ணப் பருந்து-ஆ.மாதவன்

நற்றிணை பதிப்பகம்-ரூ.120