Archive for May, 2015

பிரேமம்

Posted: May 30, 2015 in பொது

தென் கேரளத்தின் குறுக்கு வெட்டாக பல்வேறு கடைநிலை கிராமங்களுக்கு நடைபயணியாக திரிந்தவன் என்ற அடிப்படையில் அந்த நிலப்பரப்பின் மேல் தீராக்காதல்.பழைய பத்மராஜன்,பரதன் படங்களில் சமச்சீரற்ற அந்த நிலப்பரப்புகளே ஒரு பாத்திரமாக படம் நெடுகிலும் கதாபாத்திரங்களின் உணர்வைப் பிரதிபலிக்கும்.அந்த வகையில் பிரேமம் படத்தில் முதலில் பிடித்தது அந்த இடைநிலை கிராமத்தின் நிலப்பரப்பு. பள்ளியில்,கல்லூரியில்,பணியில் என்று காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ காதல்களை கடந்துபோய்,வாழ்வின் ஏதோ ஒரு முட்டுச் சந்தில் வைத்து சற்றும் எதிர்பாராத ஒரு பெண் வாழக்கைத் துணையாய் அமைவது என்ற தளத்தில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் பிரேமம் அதன் உருவாக்கத்தில் தனித்து நிற்கிறது. படத்தின் முதல் அத்தியாயத்தில் ஒடுங்கிய நீளமான பாலம் வருகிறது.அதன் ஒருபுறத்தின் முடிவில் பள்ளத்தில் சிறிய பள்ளியும் அதையொட்டி, STD பூத்துடன் கூடிய ஒரு டீக்கடையும் கதை நிகழும் அந்தக் காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன.அடுத்த அத்தியாயத்தில் வரும் கல்லூரியும் வகுப்பறையும் அதன் தனித்த அழகியலோடு காதலை சுமந்து திரியும் பிரதான கதாபாத்திரங்களாகின்றன.நிவின் தங்கியிருக்கும் வீடு,கறை படிந்த அதன் சுவர்கள்,கல்லூரியின் கேண்டின் எல்லாமே கச்சிதம். அடுத்து படத்தில் வரும் நாயகிகள்.சமீபத்தில் எந்தப் படத்திலும் நாயகிகள் இவ்வளவு நேர்த்தியான முகபாவனைகள் வெளிப்படுத்திப் பார்த்ததில்லை.பார்வதிமேனன் விதிவிலக்கு.தமிழில் எதார்த்த சினிமா என்ற பெயரில் ஒரு இயக்குனர் கேமராவைத் தூக்கிக் கொண்டு மனிதக் காலடித்தடமே படாத இடத்திற்கு ஓடுகிறார்.கூடவே யானையையும் கூட்டிக்கொள்கிறார்.சரி போகட்டும்.உணர்வுகளையாவது உண்மையாகப் பிரதிபலிக்கிறாரா என்றால் உலகத்திலே எந்தப் பெண்ணும் செய்யாத முக பாவனைகளையெல்லாம் பாவப்பட்ட நாயகிகளைச் செய்ய வைத்து,போலி உணர்ச்சிகளை கட்டியெழுப்புகிறார்.அந்த இயக்குனர் இந்தப் படத்தைப் பார்த்து பெண்களின் நுண்ணிய முகபாவனைகளை எப்படிப் படம் பிடித்திருக்கிறார்கள் என்று கண்டுணர்ந்து செயல்பட வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன். கல்லூரியில் டீச்சராக வரும் சாய் பல்லவியின் அபாரமான உடல்மொழியும், குழைந்து சிரிக்கும் விழிகளும்,ஒல்லியான தேகமும் அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன.பள்ளிப் பருவத்து பெண்ணாக வரும் சிறுமியும் அசத்தியிருக்கிறாள். தமிழில் விஜய் சேதுபதி என்றால் மலையாளத்தில் நிவின்.அற்புதமான நடிகன்.பெண்களிடம் பேச பள்ளிக்காதலில் தோன்றும் கூச்சமாகட்டும்,மோதலில் உண்டாகும் ஆக்ரோஸம்,காதல் கை கூடாது என்று தோன்றும் வேளையில் உண்டாகும் விரக்தி,கோபம் அனைத்தையும் அசாத்தியமான உடல்மொழியோடு கடத்துகிறான்.கூடவே வரும் நண்பர்களும் அவர்களின் எதார்த்தமான நகைச்சுவை கலந்த உரையாடல்களும் படத்தை தொய்விலிருந்து தூக்கி நிறுத்தியிருக்கின்றன. அல்போன்ஸ் இயக்குனர் என்பதைவிட எடிட்டராய் நேரம் படத்தில் அவ்வளவு பிடிக்கும்.இந்தப் படத்தில் இயக்குனராய் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும் வேளையில் இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் கத்திரி இன்னும் கொஞ்சம் விளையாண்டிருக்கலாம் என்று தோன்றியது.கல்லூரியில் குடிப்பதுபோல் காட்சி வைப்பது,வயது மூத்த ஆசிரியையை சைட் அடிப்பது,பள்ளிக் குழந்தையை காதலிப்பது-இதெல்லாம் தவறென்று ஏற்கனெவே கேரள சமூக ஆர்வலர்கள் வாதத்தைத் தொடங்கிவிட்டனர்.இதில் சற்று சினிமாத்தனம் தூக்கலாகத் தெரிவதும் உண்மை.இது கலைத்துப் பார்த்தால் ஒரு நல்ல கலைப் படைப்பு பிரேமம். கோலிவுட்டிலுள்ள சில போலி இயக்குனர்கள் படத்தைப் பார்த்துவிட்டு ரீமேக்கிற்காக துண்டு விரிக்காமல் இதைப்போல எளிய உணர்வுகளை,நிலவியலோடு பிரதிபலிக்கக் கூடிய படங்களை உருவாக்க முற்படுவார்களேயானால் மெச்சலாம்.

11390294_805371056199172_4153488636220892508_n

Advertisements

தரையில் முட்டி மடக்கியவாறு தூக்குக் கயிற்றோடு சடலமாகக் கிடந்த சிறுவன் ஒருவனின் புகைப்படத்தை பேஸ்புக்கின் வெள்ளோட்டத்தில் காண நேர்ந்தது.துயரத்தின் ஒட்டுமொத்த வடிவாய் நெஞ்செலும்பு துருத்தியவாறு கிடந்த அந்த உருவம் என் ஞாபக அடுக்குகளின் ஆழத்தில் பாசி பிடித்து கிடந்த,நான் நேரிட்டு கண்ட சடலங்கள் அனைத்தையும் உயிர்த்து எழுப்பி விட்டது.வாழ வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணிகள் இருக்க, கயிற்றைக்கொண்டு குரல்வளையை முறிப்பதற்கு மெல்லிய நூலிழை போன்ற சிறிய காரணமே போதுமானதாக இருந்திருக்கிறது அவர்களுக்கெல்லாம்.

வடக்கு பம்பிற்கு துரச்சி அக்கா நீரெடுக்க வருகிறாளென்றால் சிறுவர்களாகிய எங்கள் தோள் தாங்கியவாறு மையம் கொண்டு நிற்பார்கள் ஊரின் அத்தனை வாலிபர்களும்.மினுக்கமான கருப்பு நிறம்,தெளிந்த அகலமான கண்,வரிவரியாய் சிவந்த உதடுகள்,இடுப்பு தெரிய உடுத்திய சேலை என கோகுல் சாண்டல் பவுடர் வாசத்தோடு அவள் கடக்கையில் நாமும் வாலிபத்தை எட்டவில்லையே என்ற ஏக்கம் மிஞ்சி நிற்கும்.நெட்டக்கால் அதிசயத்தை அவளுக்கு ஏனோ பிடித்துப் போயிருந்தது.அவனுக்கும் அவளைப் பிடிக்கும் என்றுதான் நம்பியிருந்தாள்.அவளின் நம்பிக்கையை உறுதிப்படுத்த எண்ணியவன் ஒருமுறை தங்க நாடான் கிணற்றடியில் யாருமில்லாத ஒரு மழை நாளில் ஆடைக்கடியில் மறைந்திருந்த அவளின் மேனி பார்த்ததாக எங்களிடம் கூறினான்.அவனுக்குத் தேவை துரச்சி அக்கா அல்ல.ஆடை மறைத்த பிரதேசங்கள்தான் அதுவும் யாருடையதாயினும் என்பதை அவள் கண்கூடாக கண்ட நாளில் நடு உத்தரத்தில் அவளின் வெற்றுடல் ஆடிக்கொண்டிருந்தது.வெகு நாட்களாக துரத்திக்கொண்டே வந்து காலவோட்டத்தில் சோர்ந்து போயிருந்த, ஜன்னல் இடுக்குவழி கண்ட அந்தக்காட்சி அதன் முழு வீரியத்தோடு பரிணமித்துவிட்டது.அன்று ஊரைவிட்டு ஓடியவனைப் பற்றிய எந்த தகவலும் அதன்பின் இல்லை.சமீபத்தில் இடுங்கிய கண்களோடு உருக்குலைந்தவனாய் வந்து ஊரின் தெற்கு கோடியிலுள்ள அவனுடைய குடிலின் திண்ணையில் கிடந்து உயிர் நீத்தான்.பம்பாயின் கோர முகங்கள் அவனை உருத்தெரியாமல் சிதைந்திருந்தன.

முருகன்.புத்தி சுவாதீனமற்றவன் என்று எல்லோரும் சொல்வார்கள்.ஆனால் கோளவடி தாத்தாவிற்கு அவன் ஒருவன்தான் உலகிலேயே புத்தியுள்ளவன்.எல்லோரும் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதுதான் உண்மை.ஊர் கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றக் குதித்தவனுக்கு ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றிக் கரையில் விட்டதும் காக்கா வலிப்பு வந்துவிட்டது.வாயில் நுரை வழியக் கிடந்தவனை மடியில் வைத்து ஏந்திக்கொண்டார் கோளவடி தாத்தா.சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த யாருக்கும் நீருக்குள் குதிக்க வேண்டும் என்ற எண்ணமே உதிக்காத வேளையில் அவனின் அந்தச் செயலால் கோளவடி தாத்தா தாரை தாரையாய் கண்ணீர் உகுத்து அவனைக் கட்டிக்கொண்டார்.இந்த சம்பவத்துக்குப் பின் எனக்கும் அவனைப் பிடித்துப் போயிருந்தது.இதைப்போல் அவனுடைய பல சம்பவங்கள் மனிதர்களுக்கு இடையூறு உண்டு பண்ணுபவையாகவும்,மனிதன் தவிர்த்த ஏதோ ஒரு உயிருக்கு நன்மை உண்டாக்குபவையாகவும் இருந்தன.பிறிதொரு நாளில் கோளவடி தாத்தா கண்களில் அப்பியிருந்த சந்தனம் காயும் முன்னரே வீட்டிற்குள் கால் நிலத்தில் படாமல் விறைத்து நின்றது.நிலை குத்தி நின்ற கண்களிலிருந்து கடைசியாக வழிந்த கண்ணீரின் தடம் இந்தச் சிறுவனைக் கண்டதும் துலங்கத் தொடங்கியது.

மைசூரில் பணியிலிருந்த சமயம்.மேற்கு வங்காளத்தைச் சார்ந்த தகப்பனும் மகனுமாய் சேர்ந்து house keeping வேலையிலிருந்தார்கள்.ஹிந்தி அறியாத அவர்களிடம் நம்மவர்கள் ஹிந்தி போன்ற ஒரு மொழியில் வேலைகளை அடுக்குவர்.எந்தச் சலனமும் இல்லாமல் அதைப் புரிந்து பணியெடுப்பார்கள்.அந்தச் சிறுவனுக்கு அடுத்த மாத சம்பளத்தில் மொபைல் வாங்கித் தருவதாகக் கூறியிருக்கிறார் அவனுடைய தந்தை.அவர் கூறிய அடுத்த மாதத் துவக்கம் முதலே இருவருக்கும் பயங்கரமான சண்டை.மொபைல் வாங்கித் தர முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு முன்பாகவே fire shaft க்குள் நைலான் கயிற்றில் கழுத்து இறுகிக் கிடந்தான்.தலையில் அடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்த அந்த தகப்பனின் உருவம் அவ்வளவு எளிதில் மறையாது.பிரேத்தை மைசூரின் இடுகாட்டிலே எரித்து சாம்பலை அள்ளிக்கொண்டு காவேரி நதியை நோக்கி நடந்தவருக்கு மேற்கு வங்காளத்தில் மனைவியோ வேறு மக்களோ கிடையாது.

ஆசை ஆசையாய் வாங்கிக் கட்டிய சேலையோ,நைலான் கயிறோ,ஆட்டுப் புழுக்கை வாசத்தோடு கிடக்கும் தொழுவத்தின் கயிறோ,அரசாங்கத்தால் பின்னப்பட்டு தூக்கு மேடையில் தொங்கும் வழுவழுப்பான கயிறோ ஒரு உயிரை எட்டி நெறித்துக் கொல்லுமாயின் தூக்குக்கயிறே மரித்துப் போகட்டும்.

கால்நடைகள் புசிக்காமலிருக்க சுற்றிலும்
மூங்கில் வேய்ந்து ஆசையாய் வளர்த்த மாமரம்
அசுர வளர்ச்சியடைந்து குடிசையின் தெற்குச்சுவரை
வேர் நுழைத்துப் பிளந்து வைத்திருக்கிறது

சித்திரைவிசு தினத்தில் சுகுமாரன் ஆசாரி
தெக்குமேட்டு புளியமரம் அறுத்து உண்டாக்கிய
தலைவாசல் கதவு கரையான் புற்றாகியிருக்கிறது

துவைப்பதற்காக கல் குவாரியிலிருந்து
கொண்டு வந்து வளவுக்குள் பதித்த
பாட்டமான கருங்கல்லைச்சுற்றி
புதர் மண்டிக்கிடக்கிறது

முற்றத்து முருங்கை மரத்திற்கும்
வேலியில் நிற்கும் வாதமுடக்கி மரத்திற்கும்
கட்டப்பட்ட துணி காயப்போடும் நைலான் கயிறு
அறுந்து நிறமிழந்து பிரியாகி தொங்குகிறது

காற்று பிடுங்கி வழித்தெறிந்த கூரை வழி
வானம் பார்த்து கரையான் தின்று கிடக்கிறது
உணர்ச்சியற்ற வெற்று புணர்வுக்குப்பின்
சுருட்டி எறியப்பட்ட பாயும் கிழிந்த சேலையும்

இவைகளைத் தவிர அங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லை.