Archive for the ‘கட்டுரை’ Category

தென்னகத்தின் வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு சிறந்த சமயமாக நான் கருதுவது ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்டு மாதம்.ரயிலிலோ,பேருந்திலோ வேறு இடங்களில் இருந்து வருபவர்கள் நெல்லையிலிருந்து வாகனம் அமர்த்திக்கொள்ளுங்கள்.காலையில் அங்கிருந்து கிளம்புவதுபோல் தயாராகிக்கொள்ளுங்கள்.அதிகாலை நேர இளங்குளிரும்,வெறிச்சோடி கிடக்கும் சாலையும்,24 மணி நேரமும் இயங்கும் டீக்கடையும்,காலத்தின் சாட்சியாய் நிற்கும் மேம்பாலமும் பயணத்திற்கு வரவேற்று காத்துநிற்கும். மெல்ல திருநெல்வேலியின் எல்லையிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து தென்காசி பைபாஸ் சாலையில் விரையுங்கள் குற்றாலம் நோக்கி.ராணி அண்ணா காலேஜ்,மனோன்மணியம் பல்கலைக்கழகம் கடந்தால் முழுவேகத்தை எட்ட முடியும்.சாலையின் இருபக்கமும் ஆயிரங்காலத்து வரலாற்றை சுமந்து கடந்து கொண்டிருக்கும் கருவேலமரங்களும்,சிறு கிராமங்களும். காலை டிபன் ஆலங்குலம் தவசி ஹோட்டலில் சாப்பிடுவது உகந்தது.நான்கு வகை சட்னி,சாம்பாருடன் ஆவி பறக்கும் பூப்போன்ற இட்லி வாயில் இட்டவுடன் கரைந்து இரைப்பையை அடைந்துவிடும்.இறுதியாக ஒரு காப்பி குடித்துவிட்டு காலை டிபனை நிறைவு செய்யலாம்.வெளியில் வந்தால் லுங்கி கட்டிய மனிதர்களும்,வியாபாரிகளும்,பள்ளி/கல்லூரி மாணவ,மாணவிகளும் சாலையெங்கும் வியாபித்திருப்பார்கள்.பெரும்பாலான காய்கறிகள் இங்கிருந்துதான் கேரளாவின் தென் பகுதிக்கு எற்றுமதியாகின்றன என்பது சிறப்பு. அங்கிருந்து கிளம்பி எல்லை தாண்டியதும்,கழுவி வைத்ததுபோல் தெளிவான மேற்குத்தொடர்ச்சி மலையின் பிரம்மாண்டம் விரியத்தொடங்கும்.சிலேட்டில் சிறுபிள்ளை கிறுக்கிய வெள்ளை கோடுகளாய் நெளியும் தூரத்து அருவிகள்.மேற்கிலிருந்து மூலிகை வாசத்தை சுமந்து வரும் தென்றல் காற்றும்,சிறுதூறலும் இதயத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.நாசித்துளைகளில் அறியலாம் உள் சுத்தம் அடைந்துவிட்டீர்கள் என்று. Image சாலையின் இருபுறமும் பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும் புளியமரம் தெங்காசி எல்லையை தொடும்வரை சாட்சியாய் கூடவரும்.குற்றாலத்திற்குள் நுழைவதற்கு முன்பே அருவியின் பேரிரைச்சலும்,காற்றில் மிதந்து வரும் மூலிகை வாசமும்,வாசத்தை இரையாக்கி தின்றுகொண்டிருக்கும் சாரலும் தங்களை வரவேற்கும். குளிப்பதற்கான உடைக்கு மாறி அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் அடைந்தால் ஒரு புது உலகம் வரவேற்று காத்திருக்கும்.சாலையின் இருபுறமும் பலதரப்பட்ட கடைகள் களைகட்டியிருக்கும்.உள்ளாடை முதல் தங்க நகை வரை அனத்தும் கிடைக்கும்.சாலையின் குளிர்ச்சியும்,மக்களடர்த்தியும்,அருவியின் அவலமும்,பாதாம் பால் காய்ச்சும் வாசமும் அந்த சாலையின் வெளியெங்கும் நிறைந்திருக்கும். குளிக்க செல்லும்முன் முதலில் வரவேற்பவை மசாஜ் செண்டர்கள்.நல்லெண்ணெயுடன் கரிசலாங்கண்ணி,மற்றும் சிலமூலிகைகள் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் செய்யப்படும் மசாஜ் பிரசித்திபெற்றது.மன திடம் உள்ளவர்கள் மட்டும் அங்கே செல்வது நல்லது.அரை மணி நேரம் உள்ளாடையோடு அமரவைத்து,எண்ணெயை உச்சி முதல் பாதம் வரை தடவி விட்டு மெல்ல ஆரம்பிப்பார்கள்.சருமத்தின் துளைகளினூடே எண்ணெய் ஊடுருவி பின்னர் கசியும் நேரம் தொடங்குவார்கள் தாளத்தை.சமட்டியால் அடித்ததுபோல் இருக்கும் ஒவ்வொரு அடியும்.ஆவி பறக்க அடிக்கும்போது மூலிகைச்சாறு கலந்த எள்ளெண்ணெய் ரத்தத்தில் கலந்து சுத்தம் செய்ய தொடங்கும்.ரத்த ஓட்டம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம். Image மசாஜ் முடிந்ததும் ஒரு அரை மணி நேரம் அருவியின் அழகை,பிரம்மாண்டத்தை,மக்களின் ஆரவாரத்தை ரசித்தவாறே பொழுதுபோக்குவது அத்தனை அலாதியானது.எண்ணெய் சருமத்திலிருந்து வெளிவரும் சமயம் குளிக்க சென்றுவிடுவது உகந்தது.அருவிக்குள் சென்றதும் இதயத்துக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு மெல்ல குறையும்.ஐஸ்கட்டியின் குளிர்ச்சி என்று சொன்னால் இதற்கு பொருந்தாது.ஒருவிதமான மயக்கும் குளிர்ச்சி அது.உடம்பின் எண்ணெய் பிசுக்கினூடே சருமத்தினுள் ஊடுருவும் குளிர்ச்சி ரத்தத்தை சூடாக்கிக்கொண்டிருக்கும். அருவியின் நடுப்பகுதிக்கு சென்று தலைகொடுத்து திரும்பும்போது,தலைமுடி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது நல்லது.எந்த சாம்பு போட்டாலும் கிடைக்காத மென்மையடைந்திருக்கும் கூந்தல்.அருவியை விட்டு வெளியே வந்தாலும் சாரல் தூறிக்கொண்டே இருப்பதால் உடலின் குளிர்ச்சியும்,மனதின் குளிர்ச்சியும் ஒரு உன்னத நிலையை அடைந்திருக்கும்.ஒரு பாதாம் பால் குடித்துவிட்டு மீண்டும் ஒரு குளியல்.உடலும் உள்ளமும் சுத்தமடைந்த ஒரு தியான நிலையை உணரலாம். உடை மாற்றிவிட்டு சாரலில் நின்றவாறே மக்களின் ஆரவாரத்தையும்,அருவியின் ஆங்காரத்தையும்,சாலையோரம் குவிக்கப்பட்டிருக்கும் சீசன் பழங்களையும் ரசிப்பது ஒரு அலாதியான சுகம்.காட்சிகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே பசி வயிற்றை கிள்ளுவதை உணரலாம்.செல்ல வேண்டிய இடம் பார்டர் புரோட்டாக்கடை. அங்கிருந்து வடமேற்காக கேரள சாலையில் முன்னேறினால் செங்கோட்டையில் உள்ளது பார்டர் புரோட்டாக்கடை.அறுபது பேர் அமர்ந்து உண்ணும் அளவுக்கு விசாலமான இடமென்றாலும்,எப்போதும் டேபிளின் பின்னால் அடுத்த அமர ஒரு கூட்டம் நின்று கொண்டே இருக்கும்.மற்ற புரோட்டாக்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு அதன் மென்மையும் அதனுடன் ஊற்றப்படும் மூன்று சால்னாவும்தான்.புரோட்டாவை பிச்சிப்போட்டு,மூன்று சால்னாவையும் ஊற்றி குழைத்து,ஆம்லேட்டுடன் கலந்து வாயில் வைத்தால் நுனி நாக்கில் தொடங்கும் சுவை அடிவயிறு வரை ருசிக்கும்.அதனூடே மிளகு பொடியிட்டு பொரித்த நாட்டுகோழிக்கால் எடுத்துவருவார்கள் ஒரு பெரியபாத்திரத்தில்.எலும்பிலிருந்து பிரிவதே அறியாமல் தொண்டைக்குள் இறங்கும்.இது இல்லாமல் பிரியாணி பிரியர்களுக்கு பிரியாணியும் கிடைக்கும்.ஐந்து புரோட்டா,நான்கு கோழிக்கால் என்பது அசாத்தியமானதல்ல என்பதை வெளியே வரும் போது உணர்வீர்கள். Image வெளியே வந்து சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு,மேற்கே கண்ணுப்புளி மொட்டு என்ற பகுதிக்கு செல்லுங்கள்.ஒரு குறிப்பிட்ட பகுதிக்குமேல் வாகன அனுமதி இல்லை.காட்டிற்குள் அரைமணி நேரம் நடந்தால் அந்த சிறிய அடர்த்தியான அருவியை அடையலாம்.அமர்ந்து அனுபவித்து குளிக்க சிறந்த இடம்.மாலை நேரத்தில் அருவி முடியுமிடத்திலுள்ள அணைக்கட்டில் அமர்ந்து,தவழ்ந்து வரும் தென்றலை அணைத்தல் ஒரு சுகம். Image தென்காசியில் எல்லாத்தர லாட்ஜுகளும் உள்ளன.தங்கள் வசதிக்கேற்றாற்போல் தங்கிக்கொள்ளுங்கள்.அன்றைய தினத்தின் அலைச்சலும்,உடலின் அசதியும்,எண்ணையின் மகிமையும் ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும். இரண்டாவது நாள் செண்பகாதேவி அருவி,ஐந்தருவிக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு பாபநாசத்தை நோக்கி நகர்ந்து விடுங்கள்.தென்காசியிலிருந்து கடையம்,பொட்டல்புதூர்,ஆழ்வார்குறிச்சி,ஆம்பூர்,டானா வழியாக தமிழின் பிறப்பிடமாம்,பொதிகைமலை அடிவாரத்தை ஒரு மணி நேரத்தில் அடையலாம்.இடையில் பொட்டல் புதூரிலிருந்து ஆம்பூர் வரை சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சை வயல் மனதை கொள்ளைகொள்ளும்.பச்சைகம்பளத்தின் நடுவே கருப்புகோடு போல நெழிந்து செல்லும் தார்சாலை.பாபநாசர் கோவிலை அடைந்ததும் தாமிரபரணியின் பிரம்மாண்டத்தை உணரலாம்.படர்ந்து,விரிந்து,மலையடிவாரத்தை குடைந்து பலநிலைகளை கடந்து வரும் ஆற்றுநீரை காண்பது ஒரு அலாதி சுகம். Image அங்கிருந்து சற்று மேலே சென்றால் அகஸ்திய முனிவர் தவம் புரிந்ததாக கருதப்படுமிடம்.அங்குள்ள அகஸ்தியர் அருவி மற்றுமொரு அதிசயம்.அதில் ஒரு குளியல் போட்டுவிட்டு அப்படியே மேலே சென்றால் காரையார்.சூரியனை அதிகம் கண்டிராத சாலைகள்,பிரம்மாண்ட தேக்கு மரங்களினூடே நடந்து சென்றால் அணையின் ஒருபகுதியை சென்றடையலாம்.அங்கிருந்து அரைமணி நேர படகு பயணத்தில் பாணதீர்த்தம் அருவியை அடையலாம்.மக்கள் நடமாட்டம் குறைவான,நீர்ச்சுழல் நிறைந்த பகுதி.அந்த இட்த்தின் தனிமையும்,சுற்றி எங்கும் நிறைந்திருக்கும் நீரும் மனதின் அடியாழம் வரை ஊடுருவி துயர்துடைத்தெறியும். பின்னர் அம்பாசமுத்திரம் வந்து அறை எடுத்து தங்கிகொள்ளுங்கள்.அம்பையின் அழகை காலைக்கதிரவனூடே காண்பது அத்தனை அழகு.வீதியெங்கும் நிறைந்திருக்கும் கோவிலும்,கோலமிடப்பட்ட வீட்டு வாசல்களும்,குளித்து முடித்து பள்ளி,கல்லூரி செல்லும் பெண்களும் ஒரு கிறக்கத்தை உண்டுபண்ணும்.எந்த மெஸ்ஸில் உணவு உண்டாலும் அதன் சுவை தனித்துவமானதாக இருக்கும். அங்கிருந்து கிளம்பி கல்லிடைக்குறிச்சி கடந்து,மணிமுத்தாறு நோக்கி செல்லுங்கள்.காட்டினுள் பரந்து,விரிந்து கிடக்கும் அணையும்,அருவிகளும் ஒரு உற்சாகத்தை உண்டுபண்ணும்.பெரும்பாலும் கடைகள் எதுவும் அங்கு இருக்காது என்பதால் தேவையான உணவு பொருட்களை கீழேயே வாங்கிக் கொள்வது நல்லது.அங்கு ஒரு குளியல் முடித்துவிட்டு மேலே பயணித்தால் மாஞ்சோலை எஸ்டேட் உங்களை வரவேற்கும்.வெயிலே கண்டிராத ரம்மியமான இடம்.பாசமான மக்கள்.காவல்துறை கட்டுப் பாட்டிற்குட்பட்ட பகுதி.ஒரே ஒரு பேருந்து மட்டும் இயங்கும் அங்கிருந்து திருநெல்வேலிக்கு.அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு எஸ்டேடை சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் நெல்லை நோக்கி பணியுங்கள். நெல்லை டவுணை அடைந்ததும் இருட்டுக்கடை அல்வாவை சுவைத்துவிட்டு,நெல்லையப்பரை வணங்கிவிட்டு,கடைத்தெருவில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கள் இருப்பிடம் நோக்கி நகருங்கள். மீண்டும் மற்றொரு பயணத்தில் சந்திக்கலாம்.

Advertisements