Archive for the ‘கவிதை’ Category

கால்நடைகள் புசிக்காமலிருக்க சுற்றிலும்
மூங்கில் வேய்ந்து ஆசையாய் வளர்த்த மாமரம்
அசுர வளர்ச்சியடைந்து குடிசையின் தெற்குச்சுவரை
வேர் நுழைத்துப் பிளந்து வைத்திருக்கிறது

சித்திரைவிசு தினத்தில் சுகுமாரன் ஆசாரி
தெக்குமேட்டு புளியமரம் அறுத்து உண்டாக்கிய
தலைவாசல் கதவு கரையான் புற்றாகியிருக்கிறது

துவைப்பதற்காக கல் குவாரியிலிருந்து
கொண்டு வந்து வளவுக்குள் பதித்த
பாட்டமான கருங்கல்லைச்சுற்றி
புதர் மண்டிக்கிடக்கிறது

முற்றத்து முருங்கை மரத்திற்கும்
வேலியில் நிற்கும் வாதமுடக்கி மரத்திற்கும்
கட்டப்பட்ட துணி காயப்போடும் நைலான் கயிறு
அறுந்து நிறமிழந்து பிரியாகி தொங்குகிறது

காற்று பிடுங்கி வழித்தெறிந்த கூரை வழி
வானம் பார்த்து கரையான் தின்று கிடக்கிறது
உணர்ச்சியற்ற வெற்று புணர்வுக்குப்பின்
சுருட்டி எறியப்பட்ட பாயும் கிழிந்த சேலையும்

இவைகளைத் தவிர அங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லை.

Advertisements

மஞ்சள் வெயில்

முற்றத்து வேப்பமர இலைகளை மினுக்கி

மென்சூடு பரப்பியிருந்த

இதே போன்றொரு ஈஸ்டர் தினத்தில்தான்

அமலம் அக்கா ஊர் திரும்பியிருந்தாள்.

அதற்கு முந்தைய வருடத்தில்

தேவன் உயிர் நீத்த துக்க தினத்தில்

தொலைந்தவளுக்காக

தேவனுக்கு சிந்திய கண்ணீரோடு அவளுக்காகவும்

உப்புநீர் சிந்தி பாவங்களைக் கழுவினோம்.

முட்டை ஓடுடைத்து குஞ்சு உயிர்ப்பதுபோல

தேவனாகிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அத்தினத்தில்

அமலம் அக்காவும் புதுப்பிறவி எடுத்திருந்தாள்.

அப்பிறவியில்

எங்கள் யாரையும் இனம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு

எவனோ ஒருவனின் பாவங்கள் அவளுக்குள் விதைக்கப்பட்டிருந்தன.

தேவாலயத்தின் அடந்த பெருமணி ஓசையும்

அவள் இப்போது கிடக்கும் நுண்ணிய வேப்பம்பூ நிறைந்த முற்றமும்

அவளை மீண்டும் உயிர்ப்பிக்கட்டும்.

வியா-பாரம்

Posted: January 22, 2015 in கவிதை

தோல்கருத்த கதலிப்பழக் குலையில்
கடைசி இரண்டு சுற்றுகள் எஞ்சியுள்ளன
கண்ணாடி பாட்டிலுக்குள் சிரிக்கின்றன
பூஞ்சை பூத்த நான்கு இனிப்பு அப்பங்கள்
உள்ளிவெட்டி கடலைமாவில் பிசைந்து போடப்பட்ட
போண்டா குளிர்ந்து கிடக்கிறது தகரத்தட்டில்
ஆடைக்கடியில் மறைந்து கொதிக்கிறது
மீந்திய எருமை மாட்டுப்பால்
நெய்பட்டாணி அடைபட்ட மங்கிய பாட்டில்
பல நாட்களாக ஒரே அளவில் நிற்கிறது
கருத்த செவ்வகவடிவ கல்லாப்பெட்டிக்குள்
அடைந்து கிடக்கும் கசங்கிய தாளும் நாணயங்களும்
நாளைய கடலை மாவுக்கும் பாலுக்குமாவது
எஞ்சினால் இன்று நல்ல வியாபாரம்தான்

வீட்டிலிருந்து கிளம்பி மரங்களற்ற மண்சாலையில்

வெகுதூரம் வந்துவிட்டார்

இப்போதுதான் நினைவுக்கு வருகிறது

கால் மாற்றியணிந்த முதிர்ந்த செருப்பின் உறுத்தல்

தூரத்து செம்மண் தரையில் கிறுக்கிய கோடுகளாய்

நிழல் பரப்பி நிற்கும், இலை களைந்த தூர் பருத்த

சீமைக்கருவேல மரத்தை அடைந்தபின்தான்

செருப்பை சரியாக அணியவேண்டும் என்கிறது உள்ளுணர்வு

இதுவரை உள்ளுக்குள் கழன்று கொண்டிருந்த

மற்ற எண்ணங்களுக்கு மத்தியில்

அதன் உறுத்தல் ஒன்றும் பெரிய விசயம் அல்ல

என்றாலும் சென்னி முடியிலிருந்து கசியும் வியர்வை

விரலிடுக்கு வழி அழுக்கேறிய கைத்தடியிலும் பிசுபிசுப்பது

நடக்க உவப்பானதாயில்லை

மெல்ல குனிந்து செம்மண் சூட்டில் கை நனைத்து

வியர்வையை துவட்டி விடுகிறார்

இதற்கிடையில் இடக்கைக்கு மாறியிருந்த

கைத்தடியை நுகர்கிறது கருத்த பெட்டை நாய்

அவரின் கால் நகர்ச்சியோடு ஒத்திசைகிறது

நாயும் அதன் நிழலும்..

வாழ்வாதாரம்

Posted: November 25, 2014 in கவிதை

செங்காந்தள் மலர் படந்துள்ள கள்ளி வேலிக்கும்
ஆம்பல் மிதக்கும் நீள்வட்ட குட்டைக்குமிடையில்
கருந்துளசி,கொளிஞ்சிச் செடிகளோடு மண்டிக்கிடக்கிறது குறுந்தட்டி
வருடா வருடம் குறுந்தட்டிவேரையும்
கண்ணுவலிக் கிழங்காகிய செங்காந்தள் வேரையும்
விற்க வெட்டிச்சென்றாலும்
பூமித்துகளின் ஏதோ ஒரு மூலையில்
அதன் எச்சம் ஒட்டிக்கிடப்பதாலேயே
கல்லுடைப்பே ஜீவனாய் வாழும்
கீழச்செவல் கருப்பசாமிக்கு
குவாரியில் நீர் பெருகி கல்லுடைப்பற்ற
இந்த மழைக்கால மாதத்தின்
வாழ்வாதாரம் தளிர்க்கிறது

கல்பதித்த மாடசாமித் தெருவுக்கும்
அவர் வீட்டுக்கும் இடைப்பட்ட
கருங்கல் இருக்கையைச் சுற்றி
தரைபிளந்து தலை நீட்டுகிறது
ஒருகுத்து கொடுக்காப்புளி விதையும்
நான்கு புளியவிதையும்
அவைகளினூடே சற்று சாய்ந்து
தளிர்த்துள்ள ஒற்றை பேரீச்சை
மகளைக் காணச்சென்று
பின்பு அங்கேயே தங்கிவிட்ட புஸ்பம்
பேரீச்சம்பழம் கொடுத்தநாளையும்
அவள் நினைவுகளையும் கிளறுகின்றன
அடைமழைக்கால
காலைநேர சுளீர் வெயிலின் சுகத்தோடு.

உபயோகப்படாத துருப்பிடித்த தகரப்பெட்டியின்
தாழ்வாரத்தில் கிடக்கிறது
அத்தை பிரியமாகப் படித்த
காக்கிவண்ண அல்லியரசாணிமாலை
எதேச்சையாக பக்கங்களைத் திருப்புகையில்
வலப்புறம் சாய்த்து நேர்த்தியாக எழுதப்பட்ட
“து” வின் கொம்பு மட்டும்
தூக்கிய யானைத் தும்பிக்கைபோல் சுருண்டுள்ள
முத்துலட்சுமி என்ற கையெழுத்தும்
அடுத்த பக்கத்திலுள்ள அத்தையின் வெளிறிய
மல்லிகைப்பூ முன்பக்கம் இழுத்துவிடப்பட்ட
கருப்பு வெள்ளைப் புகைப்படமும்
மக்கிய புத்தகத்தின் வாசமும்
எலும்பும் மண்ணாகிப்போன அத்தையின்
நினைவை அடுக்கிக்கொண்டே செல்கின்றன..

கிழக்கு பார்த்த சிறிய தேவாலயம்
பரந்த மைதானத்தின் ஓரத்தில் நிற்கிறது
வேப்பம்பூ நிரம்பிய ஒற்றை வேப்பமரம்
“என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்”
என்று ஒலிப்பெருக்கியில் உருகுகிறது
அவளையொத்த ஒரு பெண்ணின் குரல்
அந்த வேப்பமர நிழலும் வேப்பம்பூ வாசமும்
அந்தக் குரலும் ஆசுவாசமாயிருக்கிறது
இரண்டு மணிநேரம் ஜெபித்து முடித்து
அகன்ற இரும்பு கேட்டின் கைப்பிடி தளர்த்தி
வெளிக்கடக்க எத்தனித்த
முதிர்கன்னி அமலத்திற்கு

வலப்புறக்கண்ணோரத்தில்
சிறிது நீண்டுவிட்ட கண்மையோடும்
குறு குறு வரியுடைய உதட்டில்
மென்வண்ண உதட்டுச்சாயப் பூச்சோடும்
தோடுபோல் தோடல்லாத காதணியோடும்
ஈரத்தலையின் பணிவோடும்
மூன்றாவது நடைபாதையின்
கல்யாண் சாரீஸ் விளம்பரப் பலகையின்
அடியில் நிற்கிறாள்
தொடர்வண்டி தாமதம் என்ற அறிவிப்பில்
கன்னத்தின் குறுக்கே கோடு கிழிக்கின்றன
வசீகர முகப்பாவனைகள்
திடீரென மிக்கிமோஸ் படமிட்ட இளஞ்சிவப்பு நிற
கைப்பையிலிருந்து கைப்பேசியை பற்றி
நின்ற இடத்திலேயே நின்று சுழன்று
இடப்புறக் கைக்குள் புதைந்திருந்த
கைக்குட்டையால் வாய் பொத்தி நாணுகிறாள்
தொடர்வண்டி வராமலே போகட்டும்..

தொழுவத்திற்கு கூரை வேய்கிறார்கள்

விபரம் தெரிந்த நாளிலிருந்து

தொழுவத்தின் தெற்கு மூலையில் தொங்குகிறது

இடப்புறக் காதிழந்த இரும்பு நீர் இறவை

கூரை வேயும் நாட்களில் மட்டும்

முற்றத்தில் கிடந்து புழுதி உதிர்த்து

வெயில் தின்று இருப்பிடம் செல்லும்

அதன்

காதறுந்த தினத்தன்றுதான் தாத்தாவிற்கு

கிணற்றுக்கல்லில் விழுந்து இடுப்பு முறிந்ததாய்

பாட்டி சொல்வாள்

இன்று அதே நினைவாக

வலப்புறக் காதிலிடப்பட்ட கயிற்று முடிச்சுக்குள்

தாத்தாவைத் தேடுகிறாள்

சமீபத்தில் பாட்டியிழந்த பேத்தி