Archive for the ‘நாவல் அறிமுகம்’ Category

புத்தகத்தின் பெயரே கிளுகிளுப்பாக இருந்ததால் என்ன ஏதென்று பிரித்துப் பார்க்காமலே வாங்கியிருந்தேன்.எண்பத்து சொச்சம் பக்கங்களுடைய சிறிய கட்டுரைத் தொகுப்புதான் என்றாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்வார்களல்லவா அந்த அளவிற்கு செறிவான வரலாற்றுத் தரவுகளடங்கிய புத்தகம்.

கேரளத்தில் நம்பூதிரிகள் சமூகத்தில் நெறி பிறழ்ந்த பெண்களை ஸ்மார்த்த விசாரம் என்ற விசாரணைக்குட்படுத்தி அவர்களுக்கு கொடும் தண்டனை விதிக்கப்படுகிறது.தனியறக்குள் அடைத்துபாம்புகளை விடுவது,ஓலைபாயில் சுற்றி அரண்மனையின் மேல்மாடத்திலிருந்து உருட்டி விடுவது,அழுக்கடைந்த குளக்கரையில் குடிலமைத்து தனியாக வசிக்கச்செய்வது இத்யாதி இத்யாதி.சிறு வயதிலேயே சகோதரனாலும்,தந்தையாலும் காம இச்சைக்கு ஆட்படுத்தப்பட்ட தாத்ரிக்குட்டி தொடர்ச்சியாக ஆண் சமூகத்தால் சீரழிக்கப்படுகிறாள்.சதா பெண்களை பாலியல் இச்சைகளுக்காக அடிமையாக்கி வைத்திருக்கும் நம்பூதிரி சமூகத்து ஆண்களின் கொட்டத்தை அடக்குவதற்காக தன் உடலையே மூலதனமாக்கி பெரிய பதவிகளிலிருந்த நம்பூதிரிகளொடு உறவுகொள்கிறாள்.பின் அவள் நெறி பிறழ்ந்தவள் என்று உறவினர் மூலமாக பிரகடனப்படுத்திக்கொண்டு ஸ்மார்த்த விசாரத்திற்கு உட்படுகிறாள்.விசாரணையில் 65 நம்பூதிரிகளை குற்றம் சுமத்தி அவர்களின் சாதிப் பிரகடனத்தை தகர்த்தெறிந்து தண்டனை கிடைக்கச் செய்கிறாள்
.
இந்த சம்பவத்திலிருந்துதான் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பெரும்பாலான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.கட்டுரைத் தொகுப்பின் சாரம்ஸம் இதுதான்.ஆனால் அதோடு நின்று விடாமல் இந்தக்கதையை பின்னணியாக வைத்து வெளிவந்த பரிணயம்,மாறாட்டம்,வனபிரஸ்தம் இந்தப் படங்களையும் கண்டுவிட்டால் ஒரு முழுமை கிடைக்கும்.

சரி ஆசான் ஸ்மார்த்த விசாரம் பற்றி ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று மேய்ந்ததில் ஏற்கனெவே அற்புதமான கட்டுரை வடித்திருக்கிறார். http://www.jeyamohan.in/972#.VXl18vmqqkq

ஆச்சர்யம் என்னவென்றால் ஆசானின் கட்டுரையை அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்திருக்கிறார்கள் விக்கிபீடியாக்காரர்கள். http://ta.wikipedia.org/…/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE…

Advertisements

மனதை மயக்கும் குமரித்தமிழையும்,தென்னை,வாழை அடர்ந்த பச்சை வாசம் வீசும் அந்த நிலப்பரப்பையும் கதைகளில் படிக்கும்போது மனதிற்கு அவ்வளவு சுகமாயிருக்கிறது.எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாசிக்கத் தொடங்கிய இந்த நாவலை முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.அந்த அளவிற்கு அதன் செழுமையான நடையும் கதாபாத்திரங்களும் ஆட்கொள்கின்றன.

தோப்புவிளை என்ற ஒரு சிறிய நிலப்பரப்பில் உள்ளுக்குள் காம இச்சைகளோடும் வெளியில் அதை மறைத்து புனிதனாகத் திரியும் நிலக்கிழார் குருஸ்வாமி.அவரை நம்பிப் பிழைக்கும் நான்கைந்து குடும்பங்கள். இவ்வளவுதான் கதைக்களம்.உயரப்பறக்கும் கிருஷ்ணப் பருந்தாக சித்தரிக்கப்படும் குருஸ்வாமியின் மனப்போராட்டங்கள்தான் கதையின் உயிர் நாடி.வெறும் மனப்போராட்டங்களை மட்டும் சித்தரிக்காமல் அந்த நிலப்பரப்பின் தன்மையையும்,பிரதான கதாபாத்திரங்களாக வரும் பார்வதி,ராணி,வேலப்பன்,பெயிண்டர் ரவி போன்றவர்களின் உருவச் சித்திரங்களையும் அற்புதமான நீர் ஓவியமாக வரைந்து செல்கிறது எழுத்து நடை.

தோப்புவிளையில் ஒரு தறவாட்டு தேவி கோவில் உள்ளது.அதன் வெளிப்புறச் சுவற்றில் காமகினியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.அவரது படுக்கையறையிலும் அதைப்போல் ஒரு ஓவியம்.குருஸ்வாமியின் மன இச்சைகள் பொழுதும் அவைகளைத் தரிசிப்பதில்தான் அடங்கி அடங்கி எழுகின்றன.அந்த ஓவியத்தை விவரிக்கும் இடம் அற்புதம்.//திரண்ட முலையும்,திறந்த பெண்மையுமாக ஜன்ன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி,அத்தனை காமவெறியையும் பஸ்மீகாரம் செய்துவிட்டு காம சொரூபியான காமாக்னியை வென்ற அகிலாண்ட பரமேஸ்வரி//இப்படியே நீள்கிறது அந்த நடை.

எப்போதுமே கதைகளில் அந்தப் பகுதியின் உணவுப் பழக்கங்கள் செறிவாக எழுதப்படும்போது மனதிற்கு மிக நெருக்கமாகிவிடுகிறது.ஆவியில் அவித்த நேந்திரம்பழம்,பருப்பில் குழைய வேக வைத்த கொழும்புக்கீரை

எனும்போது அதன் சுவை நாவில் திரண்டுவிடுகிறது.இவையெல்லாம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது.

சிறு வயதில் அம்மு அம்மை தந்தையுடன் உறவில் ஈடுபடுவதைக் கண்டதால் பெண்கள் என்றாலே அசிங்கம் என்று வளரும் குருஸ்வாமிக்கு அதன் இச்சைகள் புரியத் தொடங்குகையில் திருமணமாகிறது.இருந்தாலும் வெற்றுடலோடு அம்மு அம்மையைக் கண்ட காட்சிகள் அவருக்குள் ஒரு அருவருப்பை ஏற்படுத்தி மனதில் புதைந்து கிடந்து அவ்வப்போது திரண்டெழுகின்றன.மேலும் போக சிந்தனையுடன் அலைந்த தந்தையைப்போல் தானும் ஆகிவிடக்கூடாது என்ற பிடிவாதமும் அவரைப் பெண்களிலிருந்து அன்னியப்படவைக்கிறது.

சுப்புலக்ஸ்மி என்ற பெண்ணை மணந்து, பிரசவிக்கையில் அவள் இறந்துவிட அன்றுமுதல் தனி மரமாகிறார்.சுப்பு லக்ஸ்மியுடனான முதலிரவை விவரித்திருக்கும் இடம் கவிதை.//அன்றிரவு பாட்டுப் பாடவில்லை.ஆனால்,எல்லா ராக லயங்களையும் அழுத்திப் பார்த்த நிறைவிருந்தது.சுப்புலக்ஸ்மி நல்ல வீணை.நல்ல துல்ய நரம்பின் ரீங்காரக்காரி.சுவர ராக சிருங்காரவல்லி.நல்ல த்வனியின் கமகக்காரி.ஆனால்,கீழ் ஸ்தாயி வரவர ஆலாபனை போல அமைதியானவள்.இழைவானவள்.குழைவானவள்//எவ்வளவு நேர்த்தியான விவரணை.அதிலும் வெளிச்செண்ணை விளக்கொளியில் ஊதுவத்தியின் மணம் என்று விவரிக்கும் இடம் மூச்சுக்குழலெங்கும் அதன் சுகந்த வாசனையோடு கிளர்த்துகிறது.

மகனைப்போல் இருக்கும் வேலப்பன் ஒரு கட்டத்தில் பருந்தின் கூரிய கண்களின் கருமைக்கடியில் கிடக்கும் காம இச்சைகளைக் கண்டடைகிறான்.அன்றுமுதல் அவரிடமிருந்து விலகி அவருக்கெதிரான நிலையெடுக்கிறான்.அவருக்கோ பால்வாசனையோடு பச்சைக் குழந்தை சகிதம் வீட்டிற்கு வரும் வேலப்பனின் மனைவி ராணியைக் காண்கையில் மனதிற்குள் ஓவியங்களாய் புதைந்து கிடக்கும் அத்தனை இச்சைகளும் கிளர்ந்தெழுகின்றன.

பருந்து அதன் கூரிய கண்களால் அந்த இச்சைகளைக் கடக்கும் சமயத்தில் கதையை முடிக்கிறார்.அவரது தாடிக்குள் குறுகுறுத்த நமட்டுச் சிரிப்பு தாடி எடுக்கப்படுகையில் நிர்வாணமாகச் சிரிக்கிறது.

நாவலை வாசித்து முடிக்கையில் இவரது அத்தனை படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்ற பேராவல் என்னைப்போல் எல்லோருக்கும் எழும் என்பது திண்ணம்.

கிருஷ்ணப் பருந்து-ஆ.மாதவன்

நற்றிணை பதிப்பகம்-ரூ.120

இரண்டு இரவுகள் இரணியலில் வாழ்ந்துவிட்டு வந்தது போலிருக்கிறது.திரவி என்ற திரவியத்தின் 15 வயதிலிருந்து 25 வயதிற்குள் அவனுடைய குடும்பத்திலும்,ஊரிலும் நடக்கும் சமுக மாற்றங்களை எந்த பாசாங்கும் இல்லாமல் அப்படியே கண்முன் நிறுத்துகிறது நாவல்.நாவல் முழுக்க மூன்று தலைமுறை ஆட்களின் வாழ்வியல் அற்புதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாவல் வெறுமனே தட்டையாக நகராமல் ஊரிலுள்ள பெரும்பான்மையான குடும்பங்களின் வேர் முதல் துருவி அத்தனை கதைமாந்தர்களையும் கதைக்குள் நேர்த்தியாக பயணிக்கவிட்டு, எந்தத் துருத்தலும் இல்லாமல் அவர்களின் கொச்சையான வாழ்வை அப்படியே பதிவு செய்திருக்கிறது.முக்கியமான கதைமாந்தர்களான திரவி,உண்ணாமலை ஆச்சி,நாகு அக்காள்,குத்தாலம்,நாகு அக்காளின் கணவன்,திரவியின் தந்தை இவர்களுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வந்தாலும் நேர்த்தியாக பின்னப்பட்ட வலைக்குள் சிக்கிய புறவைப்போல இந்த கதாபாத்திரங்கள் நம்மை முழுதும் ஆட்கொள்கின்றன.

நாவலை எனக்கு சுவாரசியமாக்கியது நான்கு விசயங்கள்.

1)நாகர்கோவில் வட்டார வழக்குமொழி.படிக்கும்போதே அவர்கள் பேசும் ராகத்தையும் நினைத்துக்கொள்கையில் அத்தனை சுகமாயிருக்கிறது.கொச்சைச் சொற்கள் கலந்து பேசும் வழக்குமொழி கதைமாந்தர்களை இன்னும் நமக்கு நெருக்கமாக்குகிறது.

2)ஒரு சாதிய அமைப்புக்குள் நடக்கும் அத்தனை சடங்கு சம்பிரதாயங்களையும் நேர்த்தியாக பதிவு செய்கிறது நாவல்.குழந்தை பிறப்பு,காதுகுத்து,ஊர் திருவிழா,கல்யாணம்,பண்டிகைகள் என எல்லாவற்றையும் கதையினூடே சொல்லிவிட்டு,உண்ணாமலை ஆச்சியின் இறப்பில் மரணவீட்டின் நடைமுறை வாழ்வியலை பதிவுசெய்தவாறு கடக்கிறது.

3)ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாத்திரப் படைப்புகள் எப்போதும் நம்மை ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்கிறது.திரவியின் இயலாமையும் வைராக்கியமும்.உண்ணாமலை ஆச்சியின் பழைய சம்பிரதாய வேரிலிருந்து மண்ணை உதிர்த்துக்கொள்ளாத தன்மை,நாகு அக்காளின் தனிமை மனவோட்டங்கள்,குத்தாலத்தின் வெளிப்படையான வாழ்வியல்,நாகுவின் கணவன் ஆண்மையின்மையால் செய்யும் தவறுகள் என ஒவ்வொரு பாத்திரத்தின் மன எழுச்சியும் நிலவியலோடு பயணிக்கிறது.

4)மிகவும் முக்கியமான ஒன்றாய் கருதுவது விவரணைகள்.உதாரணத்திற்கு திரவி பள்ளி முடிந்து அடுப்பாங்கரைக்குள் செல்கிறான்.அம்மா அம்மியில் மசாலா அரைத்துக்கொண்டிருக்கிறாள்.இதை நாவலில் விவரித்திருக்கும் இடம் உச்சக்கட்ட காட்சிப்படிமம்.கதை நெடுக பின்னிப்பிணைந்து கிடக்கிறது நிலவியல் சம்மந்தமான அத்தனை விவரங்களும்.

தன்னுடைய இயலாமையால் ஒரு பெண்ணின் வாழ்வை நாசமாக்கும் ஒருவனின் கதாபாத்திரம் இறுதியில் சட்டென மனநிலை பிறழ்வது,குத்தாலத்தின் மரணம் என்று அடுத்தடுத்து நிகழ்வது மட்டும் சற்று உறுத்தலாக இருக்கிறது.படித்து முடிக்கையில் ஒரு ஊரில் வாழ்ந்துவிட்டு நாமும் திரவி குடும்பத்தைப்போல நடுத்தெருவில் நிற்பதுபோல ஒரு உணர்வு.தமிழில் ஒரு இதிகாசம் என்று வண்ணநிலவன் முன்னுரையில் கூறியிருப்பது எள் முனையளவும் பொய்யல்ல என்பது திண்ணம்.

இரா.முருகன் அவர்களின் அரசூர் வம்சம் அற்புதமான நாவல்.இரண்டு வருடங்களுக்கு முன்பு படிக்கையிலும் சரி,சமீபத்தில் மறுவாசிப்பு செய்கையிலும் சரி அதன் மொழிவளமும்,காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி ஆடும் பகடை ஆட்டமும் அவ்வளவு பிடித்துப்போனது.அதன் தொடர்ச்சியாக அவர் எழுதியுள்ள விஸ்வரூபம் நாவல் தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்றே எண்ணுகிறேன்.வாசிக்கத்தொடங்கிய இரண்டு இரவுகளில் எண்ணூறு பக்க நாவலின் பாதிப்பக்கங்களைக் கடக்க முடிந்ததற்கு காரணம் அதன் சுவாரஸ்யமான எழுத்து நடையும் காலத்தை குழப்பி ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்மை கதை மாந்தர்களை தேடவிடும் புத்திசாலித்தனமும்,போக சிந்தனையோடு அலையும் கதாப்பாத்திரங்களின் கொச்சையான வாழ்க்கைமுறையும் ஆகும்.அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை,உணவுப்பழக்கம் என்று சமஸ்கிருதமும்,மலையாளமும் கலந்த மயக்கும் தமிழில் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

ஆவிகளும் ஒரு கதாபாத்திரமாக கதை நெடுகிலும் பயணிப்பது அற்புதமான அனுபவம்.ஆவிகளோடு உறவு கொள்வதாய் எழுதியிருப்பது மாய மாந்த்ரீக உலகிற்குள் அடியெடுத்து வைப்பது போன்ற சிலிர்ப்பைக் கொடுக்கிறது.கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நாவல்.

Image

பேஸ்புக்கில் விநாயக முருகன் பரிந்துரைத்த 100 புத்தகங்களில் முதலிடத்தில் ஆழி சூழ் உலகு இருந்ததால் என்னதான் இருக்குன்னு பார்ப்போம் என்று வாங்கி வாசித்து முடித்தேன்.அவர் கொடுத்த இடம் சரி என்றே படுகிறது.

1985 ல் கடலில் கோத்ராவும்,சூசையும்,சிலுவையும் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது படகு உடைந்து ஒரு சிறிய மரத்துண்டை பிடித்தவாறு மிதப்பதாக கதை ஆரம்பித்து,முக்கால் நூற்றாண்டு பின்னோக்கி நகர்கிறது.

கதையின் முக்கிய கதாமாந்தர்கள்- காகு சாமியார்,கோத்ரா,தொம்மந்திரை,சிலுவை,சூசை,சந்திரா,டீச்சர் மற்றும் ஜஸ்டின்.மீன் பிடிக்கும் பரத மக்களின் வாழ்க்கைமுறை அவ்வளவு நேர்த்தியாக நம் கண்முன்னே காட்சிகளாய் விரிகிறது.ஆமந்துறையின் ஒவ்வொரு தெருவையும்,ஒவ்வொரு வீட்டையும்,ஒவ்வொரு மனிதனையும் கதைக்குள் நேர்த்தியாய் புகுத்தி நம்மையும் ஆமந்துறையின் ஒரு உறுப்பினராய் மாற்றுகிறார் ஆசிரியர்.காகு சாமியாரின் மீனவ மக்களின் முன்னேற்றம் குறித்த பணி வியக்க வைக்கிறது.

சித்தியுடன் உறவு கொள்வது,டீச்சருடன் கள்ள தொடர்பு,ஜஸ்டினின் காம வேட்கை என உறவு சிக்கல்களை கையாண்ட விதம் அருமை.இன்றும் கூட இந்த கதையில் வரும் சந்திராக்களும்,டீச்சர்களும் ஊரில் உலவுவதை கண்டிருக்கிறேன்.அதை கதைக்குள் அப்படியே ஆபாசமில்லாமல் அவர்களின் கொச்சை மொழியிலேயே விவரித்திருப்பது கதையுடன் ஒன்ற செய்கிறது.(சில பகுதிகளை படிக்கும்போது கால்மேல் கால் போட வேண்டியிருக்கிறது.ஹி ஹி ஹி..) நாடார்கள் எப்படி அதிகாரத்தை கைப்பற்றி தொழிலுக்கு போட்டியாகிறார்கள் என்று விரிவாக அலசப்படுகிறது.

தொம்மந்திரையின் மீன்பிடிக்கும் திறன் வியக்கவைக்கிறது.கொழும்புக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக பரிமாற்றம்,தூத்துக்குடி துறைமுக உருவாக்கம்,கிறிஸ்தவ மதத்திற்கு  மாறும் பரதவர்கள்,இரு ஊர்களுக்கிடையேயான பகை என பரந்து விரிந்து கதை பயணிக்கிறது.

கோத்ராவும்,சூசையும் கடலில் பிரியும் பொழுது இமைகள் நமத்துப் போவதை தடுக்க முடியவில்லை.குரூஸ் சொல்வதைப்போல தியாகத்தால் மரணத்தை வெல்கிறார்கள் கோத்ராவும்,சூசையும்..கனத்த இதயத்துடன் பல சிந்தனைகளை விதைத்தவாறே கதை முடிவடைகிறது..!!

அவசியம் வாசித்து கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான நாவல்..!!